தென்னிலங்கை ஏற்றுக்கொண்டு தமிழருக்கு வழங்க முன்வந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் என்ன? அனுரகுமார திசாநாயக்கா சொல்வாரா? – சுரேந்திரன்

தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.

மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.

தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?

ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்

 

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது – அநுர

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூறியதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த கட்டுக்கதை பயப்படுவதாக கூறியுள்ளார்.

அத்தோடு நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்றும் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூட கட்டுக்கதைகள் பயப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கி முடிவுகளை எடுப்பதில்லை என்றும் இதிலும் அரசாங்கத்தின் உந்துதல் காணப்படுவதாகவும் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி பேரணி மீதான தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு இன்று (26) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி கேட் ஆகியவற்றிற்குள் நுழைய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை, கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்ற ரணில் சூழ்ச்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தினார்.

எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார்.

எனவே, அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றார்.

தற்போது தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. தேர்தலை நிறுத்தினால் பண விரயமே ஏற்படும்” – என்றார்.

மரண அச்சுறுத்தல் விவகாரம் : ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் – அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சுறுத்தல் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது – அநுர

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் ரணிலுக்கு எதிரான வாக்குகள். அப்படியாயின் ரணிலால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்து வைத்திருப்பது போல் இங்கு திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தினால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவரும். அவர்கள் படுதோல்வியடைவார்கள் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத இந்த அரசால் ஆட்சி செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசு தோல்வியடைந்தால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைக் கேட்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும். அப்போது அதிலும் இந்த அரசு தோல்வியும். அப்போது ஆட்சி கலையும். ஜனாதிபதி இல்லாமல் போவார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கிளர்ச்சியின் போது வன்முறையில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் பொறுப்பு கூறவேண்டும் – ஐநா வேண்டுகோள்

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது அரச அதிகாரிகளால் இழைக்கப்பட்ட வன்முறைகளிற்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகளின் நான்கு அமைப்புகள் இது தொடர்பான கூட்டு வேண்டுகோள் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளன.

1989 ம் ஆண்டு ஜேவிபியின் கிளர்ச்சியின் போது மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை,நீதிக்கு புறம்பான படுகொலைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐநா அமைப்புகள் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படாமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளன.

இழைக்கப்பட்ட குற்றங்களின் முக்கிய குற்றவாளிகளை (அரச அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள்) பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு நீதித்துறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து நான்கு அமைப்புகளின் ஐநா அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.

ரணிலுக்கு வெகுவிரைவில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி அதிகரிப்பு பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் பாடம் கற்பித்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.

ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இனிதும பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் தற்போது உண்மையான அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டுக்கும், தமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளினால் நாட்டை முன்னேற்ற முடியாது,அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். இவர் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை,கடன் செலுத்தாமல் அந்த நிதியை கொண்டு எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 12ஆம் திகதி செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை செலுத்த போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால் பொருள் மற்றும் சேவைகளின் கட்டணம் சடுதியாக உயர்வடைந்தது.சமூக பாதுகாப்பு அறவீட்டுதொகை என்ற புதிய வரி அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிதி சூறையாடப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளிறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 400 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டின் வங்கி கட்டமைப்பின் பிரதான நிலை தரப்பினர்களில் 50 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி கொள்கையின் பெறுபேறு.

மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் தக்க பாடம் கற்பித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம் நிறுவனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபம் பெறும் நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது.அரச நிதியை கொள்ளை அடிப்பது ராஜபக்ஷர்களின் கொள்கை, அரச வளங்களை விற்பனை செய்வதும், மோசடியாளர்களுடன் டீல் வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணைக்கு முரணாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். தேர்தலை நடத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச வரபிரசாதம், பாதுகாப்பு வழங்குவதை தவிர்த்துக் கொண்டு அந்த நிதியை கொண்டு தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அதன் விளைவு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார் என்றார்.

வடக்கில் இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – ஜே.வி.பி யின் விஜித ஹேரத்

இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் துப்பாக்கியால் சுடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது குறிப்பிட்டார்.

அவர் தற்போது ஜனாதிபதி ஆகவே ஒரு தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடற்றொழில் அமைச்சரிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை -இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடப்படுகிறதே தவிர தீர்வு எட்டப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்  திட்டத்தில் விவசாயம்,நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

விவசாயம்,கடற்றொழில் மற்றும் நீர்பாசனம் ஆகிய அமைச்சுக்கள் நாட்டின் தேசிய உற்பத்தி தொழிற்துறையை இலக்காக கொண்டவை.1977 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில்  விவசாயத்துறை 30 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஆனால் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறை 6.2 சதவீத பங்களிப்பை மாத்திரம் வழங்குகிறது. இதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுவே அரசாங்கம் செயல்படுத்திய செயற்திட்டங்களின் பெறுபேறு. முன்னாள் ஜனாதிபதி கோட்டய ராஜபக்ஷ தூரநோக்கற்ற வகையில் விவசாயத்துறையில் செயற்படுத்திய தீர்மானங்கள்  இன்று முழு விவசாயத்துறையும் முழுமையாக இல்லாதொழித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

எவ்வித தடையும் இல்லாமல் சிறுபோகம் மற்றும் பெரும்  போகத்திற்கு உரம் கிடைத்த போது ஒரு வருடத்திற்கு 34 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி விவசாயிகள் உற்பத்தி செய்வார்கள்.

ஒருவருடத்திற்கு 24 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மொத்த சனத்தொகையின் கொள்வனவிற்கும் போதுமானதாக அமைந்தது, ஒருவருடத்திற்கு  மேலதிகமாக 10 இலட்சம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவின் விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு முழுமையான உரம் வழங்கப்படும் என அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர செயலளவில் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு விவசாயிகளினால் விவசாயம் செய்ய முடியாது. உர பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

நெனோ நைட்ரஜன் உர இறக்குமதிக்கு மக்கள் வங்கியில் தனிப்பட்ட கணக்கு எவ்வாறு திறக்கப்பட்டது. அரசாங்கம் உரம்  இறக்குமதி செய்யும் போது எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது குறிப்பிடுகிறார். உரம் இறக்குமதிக்கும் தனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். இந்த உர இறக்குமதி தொடர்பில் இன்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் இழக்கப்பட்ட அரச வருமானத்திற்கு யார் பொறுப்பு என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 90 ரூபாவாகவே காணப்படுகிறது. வி வசாயிகளின் உற்பத்திக்கு செலவுக்கு  கூட உத்தரவாத விலை சாதகமாக அமையவில்லை.

இவ்வாறான பின்னணியில் விவசாயிகள் எவ்வாறு தொடர்ந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 350 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மீன்பிடி துறையில் ஒருபோதும் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

நீர்கொழும்பு களப்பு பகுதிகளில் இயற்கை அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள களப்புக்களில் இரசாயன பதார்த்தங்கள் மாசுப்படுத்தப்படுகின்றன.

ஆகவே  களப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்குமாறு பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை அது செயற்படுத்தப்படவில்லை.

ஒலுவில் துறைமுகம் தவறான திட்ட அபிவிருத்தியாகும்.இன்று வெறும் கட்டடம் மாத்திரமே மிகுதியாக உள்ளது.வாழைச்சேனை துறைமுகத்தில் அடிப்படை வசதிகளில் பாரிய குறைபாடு காணப்படுகிறது.

ஆகவே ஒலுவில் துறைமுகத்தில் தேங்கியுள்ள மண்ணை  அகற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் வழங்கிய இயந்திரத்திற்கு நேர்ந்தது என்ன என்பதை கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மூன்று மாத காலவகாசம் வழங்குங்கள். அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய விஜித ஹேரத் இலங்கை –இந்திய பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளது.

கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்து எல்லை அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடி மற்றும் சாதாரண மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எரிபொருள் விலையேற்றம் அவர்களின் உழைப்பை தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளது. மீனவர்களுக்கு முறையான காப்புறுதி கிடைக்கப்பெறுகிறதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் இலங்கை கடற்பரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த மீனவர்களும் ஏதாவதொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு முழுமையாக வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? நட்டஈடு மதிப்பிடப்பட்டுள்ளதா? சட்ட நடவடிக்கை என்ன இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சு துரிதமாக  செயற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் டலஸ் டக்லஸ் தேவானந்தா இலங்கை இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மேற் கொள்ளப்பட்டுள்ளது,தீர்வு காண்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் பெரிய படகுகளில் வருகிறார்கள்.

ஆனால் எதுவு மில்லை. இலங்கை மீனவர்கள் சிறிய படகுகளை பயன்படுத்துகிறார்கள். கைப்பற்றப்பட்டுள்ள இந்திய படகுகளை திருத்தி அதனை இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய விஜித ஹேரத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது மன்னார் மாவட்டத்திற்கு சென்று ‘இந்திய படகுகள் வந்தால் சுடுவேன்’ என்றார் தற்போது அவர் ஜனாதிபதி ஆகவே உங்களுக்கு தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் (ஜனாதிபதி) எனக்கு முழுமையான அதிகாரம் வழங்கியுள்ளார்,அவதானம் செலுத்தப்படும் என்றார்.