ரணில் ராஜபக்சக்களுக்கு வெள்ளையடிப்பதா உலகத்தமிழர் பேரவையின் நோக்கம்? – சபா குகதாஸ் கேள்வி

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இன நல்லிணக்கம் ஏற்படும் வகையில் பிரகடனம் ஒன்றை ஐனாதிபதி ரணிலிடம் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன மிகவும் வேதனையாக உள்ளது ஐனாதிபதியின் நல்லிணக்கம் தமிழர் விவகாரத்தில் இதுவரை எப்படி இருக்கிறது என்று தெரியாது போன்று நடிக்கிறார்களா? GTF ரணிலுடன் இணைந்து.

தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் சிங்கள மயப்படுத்தல் , ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்தமை, அரசியல் அமைப்பு சபையில் தமிழர் பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் அமைப்பில் உள்ள 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தை சாட்டியமை , வடக்கு மீனவர் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் தள்ளுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதியை தட்டிக்கழித்தல், நினைவேந்தல்களில் ஈடுபட்டோரை பயங்கரவாத சட்டத்தல் சிறையில் அடைத்துள்ளமை, தமிழர் தாயகத்தில் இந்திய சீனாவிற்கு இடையில் போட்டியை ஊக்குவித்தல், தமிழர் மீது சிங்கள இனவாதிகள் வீசும் இனவாத கருத்துக்களை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் ஐனாதிபதி ரணிலின் இன நல்லிணக்கமா?

ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதியாக வந்த பின்னர் தமிழர் விவகாரத்தில் கடந்த காலங்களைப் போன்றே சந்தர்ப்பவாத வேடம் போட்டு வருகிறார் இது உலகத் தமிழர்களுக்கே புரியும்.

ரணிலின் தந்திரம் தெரிந்து தான் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்னர் நீங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுமையாக அமுழ்ப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்தனர் இதனை எதிர்பார்க்காத ஐனாதிபதி ரணில் தன்னையே ஏமாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற வேண்டும் என பொய் உரைத்தது மட்டுமல்லாமல் பொலீஸ் அதிகாரம் தர மாட்டேன் என தான் தான் அரசியலமைப்பை தீர்மானிப்பவர் போல பதில் அளித்தார் இத்தோடு வெளியில் வந்தது ரணில் இனநல்லிக்க தீர்வு நாடகம்.

தற்போது GTF குழுவிற்கு வழமையான பல்லவியை பாடியுள்ளார் ரணில் அதாவது புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வு தருவதாக இதனை வடிவேல் பாணியில் சொன்னால் வரும் ஆன வராது.

புலம் பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் பெரும் தியாகத்தின் பெயரால் வடிவமைக்கப்பட்டவை அதனை தரம் தாழ்த்தும் வகையில் நடந்து கொண்டால் வரலாறு பதில் சொல்லும்.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கேள்வியெழுப்பிய செல்வம் எம்.பி.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் போகின்றார்களா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம். அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன.

அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது? இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ?

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும் பொறுப்புண்டு. அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கே வடக்கில் போதை வியாபாரம் தீவிரம் – வினோ எம்.பி. குற்றச்சாட்டு

இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள், வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது, யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், “மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளம் பிரதேசத்தில் பொது மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு காரணங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டு இன்று வரை அந்த பணிகள் நிறைவு பெறவில்லை.

ஏறக்குறைய 50 சதவீத நிதி ஒதுக்குகைகளுக்கன வேலைத்திட்டங்கள் நடந்தேறியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதான பணிகள் 9 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்திலும் இதே போன்றே ஓமந்தையில் இருக்கின்ற பொது மைதானபணிகள் ஏறக்குறைய பூர்த்தியாகி விட்டது. ஆனால் மின்சார இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

அதனால் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த மைதானம் இன்னும் கையளிக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக இந்த மைதானங்களை வீரர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்புக்கொடுக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முல்லைத்தீவில் மாவட்டத்திற்குரிய மைதானம் இல்லை. ஒரு மைதானத்திற்குரிய காணியை இனம் காண்பதற்கு எல்லோருமே தடையாக இருந்துள்ளார்கள்.

3 இடங்களில் காணி பார்த்தார்கள் ஆனால் ஒரு மைதானத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஒவ்வொரு காரணம் கூறி காலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

அண்மையில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலத்திரு நாயகி என்ற வீராங்கனை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

வன்னியில் 72 வயதிலும் சாதிக்கக்கூடிய வீர, வீராங்கனைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இளைஞர்,யுவதிகளுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பார்கள்.

அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுங்கள். வடக்கு மாகாணத்தில் இன்று இளைஞர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.

அவர்கள் வேறு திசைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் கூட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள்
இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.

போதைப்பொருள் புழக்கத்திற்கு அங்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர். போதைப்பொருள் விற்போர், வாங்குவோரை காவல்துறையினருக்கு தெரியும்.

பாவனையாளரை காவல்துறையினருக்கு தெரியும். ஆனால் யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

‘கேக்’ விற்ற சிறுவன் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது; சபையில் ஜனா எம்.பி. ஆதங்கம்

பேக்கரியில் ”கேக் ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை   தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை.

ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக அந்த சிறுவன் பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியே செல்லுமாக  இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.

அத்திப்பட்டியை போல மன்னார் தீவும் மாயமாகும் – வினோ எம்.பி

 

நடிகர் அஜித் நடித்த ”சிட்டிசன்” என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும்.

மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை  அவுஸ்திரேலியாவின்  நிறுவனமும் ,அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்    பாராளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை  (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை  முன்னெக்கிறது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி  மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய  மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின், அரச நிறுவனங்களின்  ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு  சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே  கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக  இந்த  ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான  காணிகளை அந்த மக்களின் வறுமைஇ அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சுமார் 40 அடி   ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகின்றது.

இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதுவே எமது கேள்வி.

தென்னிந்திய நடிகர் அஜித் நடித்த  ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.  அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் இந்த கிராமம் அழிந்தது.

கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி தமது சொந்த நலன்களுக்காக  அரசியல்வாதிகள் அந்தக் கிராமத்தை முற்றாக்கக்கடலுக்குள் அமிழ்த்தி விட்டு செய்த ஒரு காரியம்தான் தற்போது மன்னார் தீவிலும் நடக்கின்றது.

இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது .அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு   இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன.

அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக்கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

அடக்குமுறைகள் அதிகரித்தால் மக்கள் வீறுகொண்டு எழுவர் – செல்வம் எம்.பி. எச்சரிக்கை!!!

அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது, அதற்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுகின்ற சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் கூட்டம் மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினமான கோவிந்தன் கருணாகரனின் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆயுதப்போராட்டங்கள் தொடங்கியதே அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான்.இந்த அடக்குமுறை என்பது தொடர்ச்சியாக இருக்கும். சிங்கள தேசத்தின் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது ஒட்டு மொத்தமாக தமிழர்களின் தேசத்திற்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றது.

ஓவ்வொரு விடயத்திலும் எமது பிரதேசம் பறிபோகும் நிலையில் இந்த அடக்குமுறைகள் என்பது எதிர்பார்க்கவேண்டிய விடயம். ஆயுதப்போராட்டம் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்தது.எங்களைப் பொறுத்த வரையில் அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது,அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுகின்ற நிலைப்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் இப்பொழுது காணப்படுகின்றன.

அந்த வகையில் எமது மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்.ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மாவீரர்களின் குடும்பங்களை கௌரவித்ததே தவறாக பார்க்கப்பட்டுள்ளது. அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த விடயத்தில் நாங்கள் பின்நோக்கி செல்லமுடியாது. மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.அதற்கான ஆதரவினை நாங்கள் தொடர்ச்சியாக வழங்குவோம். போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்த அனைவரையும் நாங்கள் அஞ்சலி செலுத்தவேண்டும் – என்றார்

ரெலோவின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக விஜயகுமார் நியமனம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஆ.விஜயகுமார் (சாள்ஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்,

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது அதற்கு அமைவாக திருகோணமலை மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் திருகோணமலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மற்றும் கட்சியின் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிர்வாகத் தெரிவில் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஆ.விஜயகுமார் (சாள்ஸ்) தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக சமூக சேவையாளர் தி.பிரபாதரன் தெரிவாகியதுடன் 17 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Posted in Uncategorized

தமிழர்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தவறாக சித்தரிக்கும் தென்னிலங்கை : கோவிந்தன் கருணாகரம்

நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(23) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து சற்று எழும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பாரிய நிதி ஒதிக்கீட்டிற்கு உட்பட்ட துறையாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகின்றது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் தமது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு வரவு செலவுத் திட்டத்திலிருந்து 12 மற்றும் 13 வீதங்களுக்கு இடைப்பட்ட தொகையையே ஒதுக்கப்படுகின்றன.

இந்நாடுகளை போன்றே அந்நிய அச்சுறுத்தல் இல்லாத நமது நாடும் சமமான தொகையை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.

நமது நாட்டிற்கு அந்நிய நாடுகளினால் அச்சுறுத்தல் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் சமத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர்களே என குறிப்பிட்டுள்ளார்.

மெளலவியின் கருத்துக்கள் எமது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது – ரெலோ வினோ எம்.பி சபையில் காட்டம்

இந்துக்களையும், அவர்களது கலை கலாசாரங்களையும் இழிவுபடுத்தும் வகையில் மௌலவி ஒருவர் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எமது மக்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

இந்துக்கள் பெரிதும் போற்றுகின்ற, மதிக்கின்ற, ஆலயங்களில் மதிக்கப்படுகின்ற பரதநாட்டிய கலையை அந்த மௌலவி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.

இது மிகவும் வேதனையான விடயம். நாங்கள் சக மதத்தவரின் கலாசாரத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நாங்கள் முஸ்லிம் தமிழ் சமூகத்தினர் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மௌலவியின் கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பெளத்த கலாசார நிகழ்வுகளுக்கு மாத்திரம் அதிகூடியளவு அதாவது 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய இந்து மற்றும் இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளுக்காக எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”இலங்கையை ஒரு பெளத்த சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இது ஒரு பெளத்த என்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. பல்லின சமூகம் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றை அவசியமாகுமானால் இந்தியாவிடமே கோரவேண்டியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிலமலா சீதாராமன் திருகோணமலை ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவுவதாக கூறினார். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதியையே கோருகின்றனர், நிதியை கோரவில்லை. ஆனால் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நிதி எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். முன்னதாக பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன அரசியல் தீர்வு அவசியமில்லை, பொருளாதாரத் தீர்வே அவசியம் என்றார். ஆனால், நிரந்தர அரசியல் தீர்வு இன்றி பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கோ தீர்வுகாண முடியாது” எனது தெரிவித்தார்.