வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் வீதியில் சாதாரண கடமையில் ஈடுபட்டிருந்த மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை, பொலிசார் தமது செய்கை தொடர்பில், வண.குருக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையில் இந்து குருக்கள் – பொலிசார் மத்தியில் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
வாகன போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட சிறு பிணக்கை இனவாத சொற்பிரயோகம், வாக்குவாதம், உடல்ரீதியான பலவந்தம் வரை பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.
குருக்களின் புதல்வர் பலவந்தமாக சீருடை அணியாத பிரிவினரால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இரு தரப்பும் சமாதான உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினை, திங்கட்கிழமை (22) மாலையே முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மத குருமார்களுக்கு உரிய பெருந்தன்மையுடன் பொலிசாரை தான் மன்னித்து விட்டதாக, குருக்கள் என்னிடம் தெரிவித்தார்.
குருக்கள் அவ்விதம், கூறி இருந்தாலும், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய மட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இனி பொலிஸ் சீருடை இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது எனவும், வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுபாஷ் காந்தவெலவிடம் நான் கண்டிப்பாக கூறியுள்ளேன்.
அதன்படி தனது நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக பொறுப்பதிகாரி காந்தவெல எனக்கு உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.