இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் துப்பாக்கியால் சுடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது குறிப்பிட்டார்.
அவர் தற்போது ஜனாதிபதி ஆகவே ஒரு தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடற்றொழில் அமைச்சரிடம் குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
இலங்கை -இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடப்படுகிறதே தவிர தீர்வு எட்டப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயம்,நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
விவசாயம்,கடற்றொழில் மற்றும் நீர்பாசனம் ஆகிய அமைச்சுக்கள் நாட்டின் தேசிய உற்பத்தி தொழிற்துறையை இலக்காக கொண்டவை.1977 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறை 30 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஆனால் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறை 6.2 சதவீத பங்களிப்பை மாத்திரம் வழங்குகிறது. இதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுவே அரசாங்கம் செயல்படுத்திய செயற்திட்டங்களின் பெறுபேறு. முன்னாள் ஜனாதிபதி கோட்டய ராஜபக்ஷ தூரநோக்கற்ற வகையில் விவசாயத்துறையில் செயற்படுத்திய தீர்மானங்கள் இன்று முழு விவசாயத்துறையும் முழுமையாக இல்லாதொழித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
எவ்வித தடையும் இல்லாமல் சிறுபோகம் மற்றும் பெரும் போகத்திற்கு உரம் கிடைத்த போது ஒரு வருடத்திற்கு 34 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி விவசாயிகள் உற்பத்தி செய்வார்கள்.
ஒருவருடத்திற்கு 24 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மொத்த சனத்தொகையின் கொள்வனவிற்கும் போதுமானதாக அமைந்தது, ஒருவருடத்திற்கு மேலதிகமாக 10 இலட்சம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவின் விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு முழுமையான உரம் வழங்கப்படும் என அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர செயலளவில் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு விவசாயிகளினால் விவசாயம் செய்ய முடியாது. உர பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.
நெனோ நைட்ரஜன் உர இறக்குமதிக்கு மக்கள் வங்கியில் தனிப்பட்ட கணக்கு எவ்வாறு திறக்கப்பட்டது. அரசாங்கம் உரம் இறக்குமதி செய்யும் போது எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது குறிப்பிடுகிறார். உரம் இறக்குமதிக்கும் தனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். இந்த உர இறக்குமதி தொடர்பில் இன்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் இழக்கப்பட்ட அரச வருமானத்திற்கு யார் பொறுப்பு என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 90 ரூபாவாகவே காணப்படுகிறது. வி வசாயிகளின் உற்பத்திக்கு செலவுக்கு கூட உத்தரவாத விலை சாதகமாக அமையவில்லை.
இவ்வாறான பின்னணியில் விவசாயிகள் எவ்வாறு தொடர்ந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 350 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மீன்பிடி துறையில் ஒருபோதும் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.
நீர்கொழும்பு களப்பு பகுதிகளில் இயற்கை அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள களப்புக்களில் இரசாயன பதார்த்தங்கள் மாசுப்படுத்தப்படுகின்றன.
ஆகவே களப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்குமாறு பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை அது செயற்படுத்தப்படவில்லை.
ஒலுவில் துறைமுகம் தவறான திட்ட அபிவிருத்தியாகும்.இன்று வெறும் கட்டடம் மாத்திரமே மிகுதியாக உள்ளது.வாழைச்சேனை துறைமுகத்தில் அடிப்படை வசதிகளில் பாரிய குறைபாடு காணப்படுகிறது.
ஆகவே ஒலுவில் துறைமுகத்தில் தேங்கியுள்ள மண்ணை அகற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் வழங்கிய இயந்திரத்திற்கு நேர்ந்தது என்ன என்பதை கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மூன்று மாத காலவகாசம் வழங்குங்கள். அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய விஜித ஹேரத் இலங்கை –இந்திய பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளது.
கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.
இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்து எல்லை அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடி மற்றும் சாதாரண மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிபொருள் விலையேற்றம் அவர்களின் உழைப்பை தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளது. மீனவர்களுக்கு முறையான காப்புறுதி கிடைக்கப்பெறுகிறதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் இலங்கை கடற்பரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த மீனவர்களும் ஏதாவதொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு முழுமையாக வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? நட்டஈடு மதிப்பிடப்பட்டுள்ளதா? சட்ட நடவடிக்கை என்ன இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சு துரிதமாக செயற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் டலஸ் டக்லஸ் தேவானந்தா இலங்கை இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மேற் கொள்ளப்பட்டுள்ளது,தீர்வு காண்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் பெரிய படகுகளில் வருகிறார்கள்.
ஆனால் எதுவு மில்லை. இலங்கை மீனவர்கள் சிறிய படகுகளை பயன்படுத்துகிறார்கள். கைப்பற்றப்பட்டுள்ள இந்திய படகுகளை திருத்தி அதனை இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய விஜித ஹேரத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது மன்னார் மாவட்டத்திற்கு சென்று ‘இந்திய படகுகள் வந்தால் சுடுவேன்’ என்றார் தற்போது அவர் ஜனாதிபதி ஆகவே உங்களுக்கு தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் (ஜனாதிபதி) எனக்கு முழுமையான அதிகாரம் வழங்கியுள்ளார்,அவதானம் செலுத்தப்படும் என்றார்.