யாழ்ப்பாணம் – மதுரை இடையே விரைவில் விமான சேவை – நிமல் சிறிபால டி சில்வா

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை மூலம் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தில் அரசாங்கத்தின் செலவில் 450 மில்லியன் ரூபா செலவில் முனையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கேசன்துறைக்கான முதலாவது கப்பல் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேருக்கு அதிகமானோர் அதில் வருகை தந்திருந்தனர்.

இந்த கப்பல் சேவையை வாரத்திற்கு ஒரு முறை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க பலாலி விமான நிலையத்தை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம்.

வாரத்திற்கு நான்கு தினங்கள் விமான சேவைகள் இடம் பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை விமானப்பயணச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விமான சேவையை 7 நாட்களுக்கும் தொடர்வதற்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேறு விமான சேவை நிறுவனங்களும் விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதற்கு அனுமதி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

சென்னைக்கும் பலாலிக்குமிடையில் அந்த விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரிய விமானங்களை அங்கு தரையிறக்கும் வகையில் விமான ஓடுபாதைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வுள்ளன.

அது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது – ஹர்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில்  கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக

குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம்  06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை  அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜோர்ஜீவா உறுதியளித்துள்ளார்.

‘தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கன. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில்  புதன்கிழமை (21) பரிஸ் சென்றடைந்தார்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அனுபவம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் சர்வதேச நிதி நிறுவனங்களை கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாநாட்டின் பக்க அம்சமாக ,  பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு இராஜதந்திர தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது – குமார வெல்கம

எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையைப் பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது.

அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தமது அரசாங்கத்தை அமைக்கின்றன.

மாறிமாறி வரும் அனைத்து அரசாங்கங்கள் இதனையே வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறுதான் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் எவரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை.

ஊழல் என்பது புதியதொரு விடயமல்ல. தேர்தல் முறைமையின் ஊடாகவே ஊழல் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றம் தற்போது ஒரு வர்த்தக நிறுவனம் போன்றே செயற்படுகின்றது.

சூழ்நிலைக்குத் தேவையான சட்டங்களை இயற்றியாவது ஊழலை ஒழிக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் விலைமனுக் கோரல் விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறன.

எனவே இவற்றினைக் கருத்திற் கொண்டே ஊழல் எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என்று மக்கள் குறிப்பிடுவது உண்மையான விடயமாகும்” என அவர் அமேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை செய்யாதுவிடின் சர்வதேச சமூகம் செய்வதற்கு நேரும் – ஐ. நா. மனித உரிமைகள் பேரவை காட்டம்

கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன் னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும் – இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நாடா அல்-நஷிப் எச்சரித்துள்ளார்.

அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என்றும் இலங்கை தொடர்பில் அவர் நேற்றுமுன்வைத்த வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடக்கிறது. இதில், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை நேற்று வாசிக்கப்பட்டது. பிரதி ஆணையாளர் இதனை முன்வைத்தார்.

அதில், “ஆழமான அரசமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டு, பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உரிமைகளை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தை அலுவலகம் வலியுறுத்துகின்றது.

உள்ளூர் பதற்றம் மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பேச்சுகள் மற்றும் தொல்பொருள், வனவள திணைக்களம் மற்றும் படைத் தரப்பினருக்கு காணிகளை சுவீகரிக்கப் போவதில்லை என்ற உறுதி மொழி ஆகியவற்றுடன் அனைத்து தரப்பினருக்குமான ஞாபகார்த்த நினைவுசின்னம் உட்பட கடந்தகால விடயங்களை கையாள்வது தொடர்பான அறிவிப்புகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

எனினும் இந்த விடயங்கள் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஊடாக இந்த உறுதிமொழிகள் தெளிவாக தெரியக்கூடிய வகையில், இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நல்லிணக்க பொறிமுறையான உண்மை ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு ஆணைக்குழுக்களை இலங்கை அரசாங்கம் அமைத்திருந்தது. எனினும், அந்த ஆணைக்குழுக்கள் மூலம் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை பாதிக்கப்பட்டவர்களை திருப்தி செய்யும் வகையில் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. கடந்த காலம் தொடர்பான பொறுப்புக்கூறலில் கணிசமான இடைவெளி காணப்படுகின்றது. தண்டனை விலக்களிப்பு காணப்படும் வரை நீடித்த சமாதானத்தை அடைய முடியாது. 51/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புகூறலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் குறித்த முன்னேற்றம் தொடர்பாக அதற்கான குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளுக்கு உறுதியான ஆதரவளிக்கும் ஒன்றாக இருக்கும். ஐ. நா. மற்றும் ஏனைய மூலங்கள் ஊடாக சேகரிக்கப்படும் தரவுகள் எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மற்றும் குடிசார் அமைப்புக்களுடன் செயல்திறன் மிக்க ஈடுபாடு இதில் இருக்கும். கடந்த கால மீறல்கள் குறித்து இலங்கை அதிகாரிகள், நம்பகமான விசாரணைகள் மற்றும் வழக்கு தொடுக்கும் செயல்பாடு உள்ளிட்ட ஏனைய பொறுப்புகூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இந்தப் பொறுப்புகூறல் செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும்” – என்றார்

நெல் விலை நிர்ணயத்தில் விவசாயிகளது வாழ்வாதாரமே கவனமாக இருத்தல் வேண்டும் – ஜனா எம்.பி

நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான இன்றைய (20) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

தோடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் ஜனா,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வரவு செலவுத்திட்டம் மூலமாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒதுக்கப்படாமல் நாங்கள் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் எமது மக்களுக்குச் செய்யமுடியாத சூழ்நிலையில் இருந்து கொண்டு இந்த வரவு செலவுத்திட்ட அலுவலகம் சம்பந்தமான விவாதத்தில் எப்படிப் பங்கு பெறலாம் என்று யோசிக்கின்றேன்.

இருந்தாலும் எனது மாவட்ட மக்கள் சம்பந்தமாக சில விடயங்களையும்; இந்த விவாதத்தில் எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கடந்த 28.05.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தவேந்திரன் மதுசிகன் என்ற 20 வயது மாணவண் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 30 கிலோமீற்றர் கடலை நீந்திக் கடந்திருக்கின்றார். ஒரு சாதனை புரிந்திருக்கின்றார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், பின்விளைவுகளைத் தடுப்பதற்கும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகா, சிறுவயதில தற்கொலைக்குச் செல்லாத மனோநிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாதனைகளை நிறைவேற்ற வேண்டும என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் இவ்வாறான விடயங்களிலிருந்து விடுபடலாம் என்ற விழிப்புணர்வுகளுக்காக இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அந்தவகையில் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக அந்த மாணவனுக்கு பாராட்டுக்களைச் தெரிவிக்கவேண்டிய கடமையிலிருக்கின்றேன்.

அது மாத்திரமல்ல இன்றைய விவாதத்தின் ஆராம்பத்திலே 27/2 கேள்வியின் மூலமாக இந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். உண்மையிலேயே விவசாயிகள் சார்பாக நான் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன். இன்று மட்டக்களப்ப மாவட்டம் மாத்திரமல்ல அம்பாரை போன்ற பிரதேசங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது;. ஆனால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவர்களுடைய நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது மாத்திரமல்லாமல் நெல்லுக்குரிய சரியான விலையைக் கூட இந்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இன்றைய 27/2 கீழான கேள்விக்குக் கூட விவசாய அமைச்சர் அவர்கள் சரியான பதிலைக் கூறாமல் தாங்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றானர். இன்றைய பொருளாதார நிலைமையில் அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைகளில் கூட விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கிலோ நெல்லை 95 ரூபாவுக்கு விற்ற பண்ணைகள், இன்று ஒரு கிலோ நெல்லை 200 ரூபாவுக்கு விற்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அதற்குரிய உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

உண்மையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக இருந்தால் அரசாங்க விதை உற்பத்திகளுக்கு மாத்திரமல்ல ஏழை விவசாயிகளுக்கும் அந்த உற்பத்திச் செலவு அதிகரித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நெல்வயல் செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்யும் போது இன்றைய நெல்லின் விலை 75- 80ரூபாவுக்கு மேல் தாண்டவில்லை. எனவே இந்த அரசாங்கம் ஆகக்குறைந்தது நெல்லின் விலையை 120ரூபாவுக்காவது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாகப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அவர்கள் அவர்களுடைய நெருக்கடியிலிருந்து மீள்வார்கள். ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு விற்கப்படுகின்ற நிலையில். அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் விலையை நிர்ணயிக்க முடியாது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயத்தில் அழுத்தம் கொடுக்கின்றார்கள். அரசாங்கம், அவர்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கவனத்திலெடுக்க வேண்டும் என்பதுடன் அதற்காக பாடுபட வேண்டும்.

அத்துடன் கடந்த சில வாரங்களாக அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழகப் பட்டம் அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா இருக்க வேண்டும் அத்துடன் 5 வருட சேவைக்காலமும் இருக்க வேண்டும் அதைவிடுத்து கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு 6 வருட சேவை அனுபவம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சுற்றறிக்கை இருந்தது. ஆனால் அந்த கல்வி டிப்ளோமா பட்டம், பட்டப்பின் டிப்ளோமா, விஷேட தேவைகள் சார் பட்ட பின் கல்வி டிப்ளோமா பெற்றவர்கள் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் நேர்முகப் பரீட்சையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கை அதிபர் சேவை தரம் III ல் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் 2018.10.19 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதி கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், அப்பிரமாணக்குறிப்பில் இதற்குப் பின்னர் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கும், அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவார்”

இந்த நியமனமானது 2023யிலேயே வழங்கப்படவுள்ளது. எனவே பரீட்சை ஏலவே நடைபெற்றிருப்பினும், 2023இற்கு முன்னர் அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமையவே நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பது நியதியாகும். இதன் அடிப்படையில் 2255/55 ஆம் இலக்க 2021.11.26 ஆம் திகதிய அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4ஆவது திருத்தத்தின் படி விசேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் அமுல்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாமையினால் இது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதியாகும்.

மேலும் 2010 இல் விஷேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவானது சாதாரண பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமானது என கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் குறிப்பிடுகின்றது. மேலும் திறந்த பல்கலைக்கழக உபவேந்தரினாலும் இது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி, அதன் அடிப்படையில் அவர்களையும் இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கெதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு அவுஸ்திரேலிய செனட்டர் கண்டனம்

அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது என அக் கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நான் தமிழ் மக்களிற்கு ஆதரவை தெரிவிக்க விரும்புகின்றேன் தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்விற்கு என்னை அவர்கள் அழைத்தது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் அகதிகள் பேரவை தமிழ் அகதிகளிற்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல் கல்வி தொடர்பான உதவிகளை வழங்குதல் அகதிகள் தொடர்பான பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கியமான சேவைகளை அகதிகளிற்கு வழங்கிவருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்துடன் முள்ளிவாய்க்கலில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 14 வருடங்களாகின்ற போதிலும் அதற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களின் தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு எதிரான இராணுவநடவடிக்கையின் போது இவர்கள் முள்ளிவாய்க்காலில் சிக்கவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் பலர் இன்னமும் இலங்கை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர்பதவிகளில் நீடிக்கின்றனர், எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்டஇனப்படுகொலையை கண்டிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்குள் இருக்கின்ற உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கின்றது எனவும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழம் தமிழ் அகதிகள் அகதிகள் தொடர்பான தீர்மானங்கள் முடிவுகள் குறித்த தகவல்களை பெறுவதில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளின் அடைக்கல கோரிக்கைகளே அதிகளவு நிராகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் நாட்டில் உள்ள தமிழர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நிலங்களை விடுவித்தல் நீண்டகால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவை குறித்த கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக அமையலாம்.

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றோம்,பயங்கரவாத சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதல்கட்ட நடவடிக்கையை எடுக்கின்ற நிலையில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் தேர்தல் முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் அதன் ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பேணுவதன் மூலம் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பேணுவது அவசியம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

விமான தாமதங்களால் தென்கொரியாவிற்கு இலங்கையர்களை வேலைகளுக்காக அனுப்புவது பாரிய பிரச்சினையாகவுள்ளது – மனுஷ

தொடர்ச்சியான விமான தாமதங்கள் காரணமாக இலங்கையர்களை தென் கொரியாவிற்கு வேலைகளுக்கு அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

52 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று நேற்று தென்கொரியாவிற்குச் செல்லவிருந்ததாகவும், ஆனால் UL470 விமானம் சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதமானதால், அவர்கள் இன்னும் நாட்டில் தங்கியிருப்பதாக அமைச்சர் நாணயக்கார கடுமையான வார்த்தைகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்குச் செல்லவுள்ள 800ஆவது குழு இதுவாகும் என்றும், இக்குழுவினரை தென்கொரியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLFEB) தயார் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக இந்தக் குழுவினர் செல்லவிருந்தனர்.

விமானம் தாமதமானதால் அவர்களை தென்கொரியாவுக்கு அனுப்ப வேண்டாம் என கொரிய மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற சம்பவம் மே மாதம் 23 ஆம் திகதி பதிவாகியிருந்ததுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் காரணமாக ஜூன் மாதம் 4 ஆம் திகதி தென்கொரியாவிற்கு சென்று பணியை ஆரம்பிக்க முடிந்தது.

இந்த விமான தாமதங்கள் தென் கொரியாவிற்கு அதிகமான இலங்கையர்களை அனுப்புவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துக்காட்டியுள்ளார்.

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ்

வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்நிர்மாணம் என ஆரம்பிக்கப்பட்ட தொடர்பணி ஆரம்பித்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்தபோது இந்த பாடசாலையின் முதலாவது கட்டிடமும் என்னுடைய முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டது.

கல்வி என்பது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியை அதனுடைய அபிவிருத்தியை, ஆளுமையை , பல் திறன்களை சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம். எங்கு போனாலும் புலம்பெயர்ந்த சமூகம் மூன்று விடயங்களில் ஆர்வமாக இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். அதாவது தங்களுடைய பல்கலைக்கழக நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றார்கள், பாடசாலை நிகழ்வுகளிற்கு பாடசாலை புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள், தமது கிராமங்களில் உள்ள ஆலயங்களின் புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள்

வடக்கு கிழக்கிலே புலம்பெயர்ந்த சமூகத்தின் ஆதரவும் அவர்களின் அளப்பெரிய சேவையும் பல இடங்களிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்தவகையிலே கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கின்ற ஆதரவென்பது பார்க்கும் போது மிக அளப்பெரியதாக இருக்கின்றது.

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள், இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு, இதே விடயம் நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக ஏழு வருடங்கள் இருந்தபோது கிராமபுறங்களிலே பாடசாலைகளை மூடியிருந்தோம்.

அதற்கு பிரதேச செயலாளர்கள் கூறிய காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவடைந்து செல்கின்றது என முதலாம் வகுப்பிலே மாணவர்களை அனுமானிப்பது சில பாடசாலைகளில் பூச்சியம் லெவலுக்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.