உள்ளூராட்சி சபைகளை கண்காணிக்கும் குழு பிரதமர் இடையே சந்திப்பு

உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது.

மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களும் நேற்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களும் மாவட்டச் செயலர்களும் கண்காணித்து முன்பைப் போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்களை பாதுகாக்க மாகாணத்திற்கு உரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேந்திரன்

வடக்கு மாகாணத்திற்கு உரித்தான மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை உதாசீனம் செய்யாது பாதுகாக்க மாகாணத்திற்குரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற 13திருத்தத்தின் சாதக பாதங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண மக்களின் பூர்வீக நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றம் விகாரையின் கட்டுமானங்கள் நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையிலும் மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து விகாரை அமைத்து யாவருக்கும் தெரியும்.

13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக நாம் ஏற்கவில்லை சிலர் அரசியல் நீதியில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக பதின் மூன்றை ஏற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச இருப்புக்களையும் அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக 13திருத்தம் அவசியம்.

வடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளை வரலாற்று இடங்கள் என்ற போர்வையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன.

அதனை தடுப்பதற்கு மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்கினாலும் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் இல்லாத நிலையில் மத்திய பொலிஸ் உயர் அதிகார வர்க்கங்களின் உத்தரவில் தீர்ப்புக்களை உதாசீனம் செய்கிறது.

ஆகவே அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மாகாண பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் போதுமாவட்ட நீதிமன்றங்களின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு பிரதமருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது்ளது.

கருநாட்டுக்கேணி தமிழர் பூர்வீக காணிகளில் சிங்களக் குடியேற்ற முயற்சி ; மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 03.04.2023 இன்று கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச்சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) பிரித்தானியக் கிளைக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரித்தானியக் கிளையின் கூட்டம் சனிக்கிழமை மாலை கரோவில் தலைவர் திருவாளர் சாம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களுடன் எதிர்காலத்தில் வெளிநாட்டு கிளைகளின் பங்களிப்புகள், புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து பயணித்தல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.


இன்றைய கூட்டத்தில் இணைந்து கொண்டு சிறப்பித்த மூத்த உறுப்பினர்கள் மற்றும் சக கிளைத்தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இந்தியாவினால் இலங்கையர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டதே 13ம் திருத்தச்சட்டம் – சரத் வீரசேகர

“தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் இலங்கைக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தச் சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்.

ஒற்றையாட்சியின் கீழ் நாடு முழுவதும் ஒரே நீதி. சமஷ்டி ஆட்சியின் கீழ் மாகாணத்துக்கு மாகாணம் நீதி வேறுபடும். இதனால் நாடு துண்டு துண்டாகப் பிரியும்.

வடக்குத் தமிழர்களின் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் சமஷ்டி தேவை என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கின்றார்கள்.

அப்படியென்றால் 52 வீதமான தமிழர்கள் வாழ்வது தெற்கில். வடக்குக்குத் சமஷ்டியைக் கொடுத்தால் தெற்குத் தமிழர்களின் பிரச்சினைகளை அது எப்படித் தீர்க்கும்?

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர். சில சிங்கள அரசியல்வாதிகளும் இதற்கு உதவுகின்றனர்.

தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13ஐ வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் இலங்கைக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதுதான்.

இதில் இருக்கின்ற பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் பிரதிப் பொலிஸ்மா அதிபர் முதலமைச்சரின் கீழ் வருவார். அப்போது பொலிஸ் அரசியல்மயமாகிவிடும்.

அநேகமாக 13 இல் இருக்கின்ற பல விடயங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரம்தான் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

உதாரணத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் வடக்கின் கடல் பாதுகாப்புக்கு என்று தனியான பொலிஸ் – இராணுவப் பிரிவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் மத்திய அரசு அதை எதிர்க்கும். அப்போது இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படும்.

அரசு மாகாண சபையின் தீர்மானத்துக்கு இடம் கொடுப்பதில்லை என்று கூறி பிரிந்து செல்வதற்கு வாய்ப்புண்டு. – என்றார்.

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுதலையானவர்கள், சுலக்சன், தர்சன், திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவர்கள் தொடர்பான வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது அரசியல் கைதிகள் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயம் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் இன்றைய தினம் விடுதலையான சுலக்சன் என்ற அரசியல் கைதியையே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்தார்.

குறித்த விடயத்தை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராயும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு சிபாரிசு செய்தால் அது உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு அமைய இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கமைவாக இருக்க வேண்டும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தலைமையிலான குழு மார்ச் 27 முதல் நேற்று வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்புக்கள், அவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கேட்க அரசு அவசரமாகவும் உண்மையாகவும் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான விதிமுறைகளும் நிபந்தனைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் மற்றும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது