இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது – சொல்ஹெய்ம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார்.இலங்கையை பொறுத்தவரை இவை சவாலான விடயங்கள்.பொருளாதார நெருக்கடி இனப்பிரிவினையிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவு அவசியம்

இதன் காரணமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் செய்தி மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்

இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைக்க சீனா இணக்கம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா, இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவை இலங்கையின் கடன்களை இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்சிம் வங்கி, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் நீண்டகால அர்ப்பணிப்புகள் குறித்து இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் எனவும் சீனாவின் எக்சிம் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது – அநுர

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் ரணிலுக்கு எதிரான வாக்குகள். அப்படியாயின் ரணிலால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்து வைத்திருப்பது போல் இங்கு திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தினால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவரும். அவர்கள் படுதோல்வியடைவார்கள் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத இந்த அரசால் ஆட்சி செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசு தோல்வியடைந்தால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைக் கேட்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும். அப்போது அதிலும் இந்த அரசு தோல்வியும். அப்போது ஆட்சி கலையும். ஜனாதிபதி இல்லாமல் போவார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குத்துவிளக்கு சின்னத்தின் வெற்றி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான கோரிக்கையின் வெற்றி – சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது.

13 வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13 வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.

ஜி7 நாடுகள் ராஜபக்க்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – கனடா வெளியுறவு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஆதரவு தரும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்தது

இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி7 நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியுறுத்துவதே தமது நோக்கம்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைப் பிரதிநிதிகள் இருவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 09 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது சனிக்கிழமை பிற்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்தலை நடத்தும் திகதியை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்களில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தின.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் கோரப்பட்டன.விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும்.

கடந்த 18ஆம் திகதி (புதன்கிழமை) முதல் இன்று 21 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட பெரும்பாலான சுயாதீனக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒருசில மாவட்டங்களில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரை பொதுச் சின்னம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் மீண்டும் பதவியேற்பு

யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக இன்று (21) சனிக்கிழமை பதவியேற்றார்.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின்போது தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததனால் வெற்றிடமாக இருந்த முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது.

இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாக தெரிவித்து ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையிலிருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இதனால் தெரிவை கொண்டு நடத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்துகொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.

2012 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தெரிவின் மூலம் முன்மொழியப்பட்டபடி, இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியானது. அதனையடுத்து இன்றைய தினம் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை பொறுப்பேற்றார்.

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் இலங்கை வருகை முக்கியமானது – அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ.சோனெக்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி திட்டமானது 2023 ஆம் ஆண்டில் முக்கியமானதாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையிலான 75 வருட கால இராஜதந்திர உறவினை நினைவுக்கூறும் இத்தருணத்தில் இருதரப்பு பல்துறைசார் உறவுகள் மற்றும் பேரிடரின் போது மனிதாபிமான ஒத்துழைப்புகள் போன்ற துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆர்வத்துடன் இந்த கூட்டுப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ. சோனெக் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு பயிற்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே பிரதி தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஒருவாரக்கால கூட்டுப்பயிற்சிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்பகுதிகளிலும் இந்த போர் கப்பல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளது.

CARAT/MAREX என்பது கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்படை தளங்களில் முன்னெடுக்க கூடிய இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும். விசேடமாக இம்முறை ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் கூட்டாண்மையின் 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த கூட்டுப்பயிற்சி திட்டங்களுக்கு அப்பால் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் யோசனைகள் மற்றும் தந்திரோபாயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் நவீன உத்திகளில் போர் மூலோபாயங்களை பயிலும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் துணை கட்டளையதிகரி கெப்டன் சீன் லூயிஸ் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலானது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்பட கூடியதாகவும் அதனுடன் தொடர்புப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளை ஈடுப்பட கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உட்பட போர் வாகனங்களை தாங்கி செல்ல கூடிய வல்லமை இந்த கப்பலுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் வான் பாதுகாப்பு, சிறிய படகு செயல்பாடுகள் மற்றும் கடல் பாதுகாப்பு அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஒருவார கால பயிற்சி திட்டம் அமையும் எனவும் கூறினார்.

ஒவ்வொரு பயிற்சிகளும் படைகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது என்றும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், அறிவு, திறன் மற்றும் இலக்குகள், கலாச்சாரங்கள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய புரிதலை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் இருதரப்பு பங்காளித்துவத்தை வலியுறுத்தும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.