இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் அவதானம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு நேற்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதேநேரம் நிலந்த ஜயவர்தன, பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் சொந்த நிதியில் இருந்து 75 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது சொந்த நிதியில் இருந்து 50 மில்லியன் ரூபாவையும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தனது சொந்த நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களை பாதுகாக்க கடன்களை ஒத்திவைக்கும் சாத்தியகூறுகள் ஆராயப்படும் – ஜனாதிபதி

இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில், கடனை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தொழில் முயற்சியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) பிற்பகல் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து கடனுதவி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலாப நோக்கற்ற அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடக் கூடியதான அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும்  அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலிறுத்தி புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி மாதவமேஜரின் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது.

ஓரணியில் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் போராட்டக்களத்திற்கு சென்று வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, முன்னாள் போராளி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னாள் போராளியான மாதவமேஜர் கடந்த 9ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கு மறுநாள், தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்தது. இந்த நிலையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான
ரெலோவின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் க.சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்திற்கு வந்தனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்வை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், 6 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும், தொடர்ந்தும் கட்சிகளை இணைத்துக்கொள்வோம், அதனால் மாதவமேஜர் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ் கட்சிகள் ஓரணியாக செயற்பட்டு, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் உறுதியுடன் செயற்பட வேண்டுமென மாதவமேஜர் விடுத்த கோரிக்கையை ஏற்று, எழுத்துமூலம்
உத்தரவாதமளித்தனர்.

புதிதாக வலுப்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டுமென்றும், நம்பிக்கையூட்டும் விதமாக உருவெடுத்துள்ள இந்த கட்டமைப்பில் இணையாமல் விலகிச் செல்பவர்கள் தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டுமென்றும் மாதமமேஜர் கோரிக்கை விடுத்தார்.

அவரது தாயாரும், புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளாரும் இணைந்து நீராகாரம் வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போராட்டக்களத்திற்கு வந்திருந்தனர்.

கட்சிகளை ஒன்றிணைய வலியுறுத்தி நடக்கும் போராட்டக்களத்திற்கு வந்த அவர்கள் தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு போராட்டக்களத்தில் நின்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரணிலின் ஏஜெண்ட்டுகள் என குரல் எழுப்பினர்.

தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது – ஆணைக்குழு தலைவர்

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது.

கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அவர் எதனடிப்படையில் சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்; மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 4(1)ஆவது உறுப்புரையின் பிரகாரம் 2022.12.21ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சகல நிர்வாக மாவட்டங்களுக்குமான தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறு அறிவித்தல் விடுக்கும் வரை கட்டுப்பணத்தை பொறுப்பேற்றும் பணிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் 10 ஆம் திகதி காலை சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெளிவுப்படுத்தல் அறிவுறுத்தலை அனுப்பி வைத்துள்ளது. கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றை பொறுப்பேற்றல் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் அந்த சுற்றறிக்கையை மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு, ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட வகையில் நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு, தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தல் அல்லது ஆலோசனை வழங்கும் அதிகாரம் அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது. இவர் எதனடிப்படையில் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது,ஆகையால் சட்டமாதிபரின் ஆலோசனையை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பணம் பொறுப்பேற்றலை இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.முதலில் ஆணைக்குழுவில் பிளவு இருந்தால் தான் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும்.ஆணைக்குழுவிற்குள் எவ்வித பிளவும் கிடையாது என்பதை உறுதியாக அறிவிக்க வேண்டிய தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்தும் கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என பொதுநிர்வாகம், உள்ளக விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கடந்த 9 ஆம் திகதிமாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க முகவர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததுடன் பின்னர் அவர் அதனை நீக்கியிருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் வேட்புமனுத்தாக்கல் செய்வதிலும், அதனைத்தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவதிலும் இடையூறுகளைத் தோற்றுவிக்கும்.

தேர்தலுக்கு முன்னரான செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் இடையூறு ஏற்படுத்துவதற்கோ அல்லது தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான பொதுமக்களின் ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கோ மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின்மீது நிகழ்த்தப்படும் மிகமோசமான தாக்குதலாகவே அமையும்.

இதற்கு முன்னர் பல்வேறு ஆட்சியாளர்களால் தேர்தலுக்கு முன்னரான நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் மிகமோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தின.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனவே ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் தாக்கத்தையோ அல்லது தலையீட்டையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுப்பதிலிருந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் விலகியிருக்கவேண்டியது அவசியமாகும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்னிலங்கையில் புதிய கூட்டணி உதயம்

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டணி’ உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘சுதந்திர மக்கள் கூட்டணியின்’ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும்.

இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம். உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.

அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம். 90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு , கிழக்கில் நாம் போட்டியிடுவோம். இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.’ என்றார்.

ஜன ஜய பெரமுனவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில் ,

‘இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும். ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும். எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல் , தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றார்.

உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் ,

‘சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அத்தியாவசியமானதாகும். அந்த பொறுப்பினையே நாம் தற்போது ஏற்றுள்ளோம். இலங்கையின் நிதி நெருக்கடியின் பாரதூர தன்மை குறித்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபாயமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு எந்தவொரு முடிவினையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.’ என்றார்.

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் ,

‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான 23 கட்சிகள் நாட்டுக்கான தீர்க்கமான தீர்மானத்தை எடுத்தன. அதே போன்று ஒற்றுமையுடன் புதிய கூட்டணியில் எதிர்காலத்திலும் பயணிக்க வேண்டும். இந்தக் கூட்டணியில் 12 பிரதான கட்சிகள் உள்ளன. இவற்றில் 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய அரசியல் கூட்டணிகளைப் போன்றல்லாது மற்றொரு புதிய முற்போக்கான அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த நாடு ஆட்சியாளருக்கு சொந்தமானதல்ல. அதே போன்று எந்தவொரு கட்சியும் அதன் தலைவருக்கு சொந்தமானதல்ல. குடும்பமொன்றை கேந்திரமாகக் கொண்ட ஆட்சிக்கு உறுதுணையாக செயற்பட்டமை நாம் இழைத்த பெருந்தவறாகும். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

முஸ்லிம், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை

வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியவுடனேயே, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், வடக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நாட்டின் சகல அரசியல் கட்சிகளினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கமைய, வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நேரடி ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் , எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஈடுபடுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் புதன்கிழமை (11) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய ஸ்டீபன் ட்விக்ஸ், இலங்கைப் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்டீபன் ட்விக்ஸிடம் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.