சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு என்பது நகைப்புக்குரியது – கம்மன்பில

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே ஜனாதிபதி முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (டிச. 24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மாறுபட்ட பல கருத்துக்களை தமிழ் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் முதலில் ஒற்றுமை கிடையாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சாத்தியமற்றது.

பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின், 30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாக உள்ளது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் தான் ஜனாதிபதி ஈடுபடுகிறார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாகாண சபை தேர்தல் மூன்று காலத்துக்கும் அதிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக பதவி வகிக்கும்போது தான் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. மாகாண சபை தேர்தலை நடத்தினால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

மின் கட்டண அதிகரிப்பு – மக்களுக்கு கடவுளே துணை – டலஸ் டலஸ் அழகபெரும

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பொருளாதார பாதிப்பின் சுமையை நாட்டு மக்கள் மீது முழுமையாக சுமத்த முடியாது.

அரசாங்கம் பல்வேறு செலவுகளை குறைத்துக்கொண்டால் மக்கள் மீதான வரி விதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களை விஸ்தரித்துக்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளது.

38 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியமற்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை ஒரு இராஜாங்க அமைச்சுக்களை கூட நியமிக்காமல் வரையறுக்கப்பட்ட அமைச்சுக்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்தார். இதனை அரசாங்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

மின்கட்டண அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் மொத்த மின்பாவனையாளர்களில் 30 அலகுக்கும் குறைவான மின் அலகினை பாவிக்கும் 14 இலட்சம் மின்பாவனையாளர்கள் உள்ளார்கள்.

இவர்கள் பொருளாதார ரீதியில் கீழ்நிலை மட்டத்தில் உள்ளவர்கள். இவ்வாறான நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் தான் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும். மக்களிடம் வளம் இருந்தால் தான் மின்கட்டணத்தை செலுத்துவார்கள்.

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் எவ்வாறு வாழ்வது என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.

சில துறைகளுக்கான பொருட்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

நாட்டில் காணப்பட்ட கடும் டொலர் நெருக்கடி காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை 670 பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை எமது நாட்டில் தயாரிக்கப்படக்கூடியவை ஆகும்.

வெசாக் கூடுகள், பட்டங்கள் மற்றும் யோகட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

எனவே, அடுத்த வருடத்திலிருந்து இவ்வாறான பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்வதா அல்லது நாமே தயாரிப்பதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 1465 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. நாட்டில் நிலவிய கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அண்மையில் 795 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டது. 470 பொருட்களுக்கான இறக்குமதி தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள பிக்குகள் – கவலை தெரிவித்த பந்துல

பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.

நாட்டுக்குள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹரக பகுதியில் சனிக்கிழமை (டிச 24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை சடுதியாக தீவிரமடைந்துள்ளது.இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக கேள்விக்குள்ளாகும்.

ஒரு நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் போது அந்த நாட்டில் சட்டம் மற்றும் அடிப்படை ஒழுக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் தலைதூக்கும்.இலங்கையிலும் தற்போது அவ்வாறான தன்மை காணப்படுகிறது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உணர்வுபூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திட்டமிட்ட வகையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை  வியாபித்துள்ளது.போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை இல்லாதொழிக்க 09 மாகாணங்களிலும் விசேட போதைப்பொருள் செயலணியை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதம் – விஜயதாஸ கவலை

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒவ்வோர் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாட்டினால் பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தியதன் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவை தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய நியமனம் இடம்பெறும் வரை ஆணைக்குழுக்களின் தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதில் தலைவராகவும் உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் உறுப்பினர் நியமனத்தின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு இவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அரசியல் கட்சிகள் தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, தமது கட்சியின் பரிந்துரைகளை முன்வைக்காமல் இருக்கின்றன.

21ஆவது திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டுமாயின், அரசியலமைப்பு பேரவை விரைவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.

மாகாண கல்வி அமைச்சு, திணைக்கத்தினால் போலியான விசாரணைகள் முன்னெடுப்பு – ஆசியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வட மாகாண கல்வியை முன்னேற்ற முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வட மாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 பக்க முறைப்பாடொன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால், ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் வட மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பின்னராகவே விசாரணைகளை போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில் விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீடிப்பு

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி ஏற்கனவே 2022-12-23 என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெற்றோரும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2022-12-30 ஆம் திகதிக்கு முன்னர் தாம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையின் அதிபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் 2022-12-23 ஆம் திகதி தொடக்கம் 2023-01-02 ஆம் திகதி வரையான காலப்பகுதி பாடசாலை விடுமுறை ஆகையால் இதற்காக பாடசாலை அலுவலகங்களை திறந்து வைக்கும்படியும் மாணவர்களால் கொண்டுவரப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதியம் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022-12-30 வரை நீடிக்கப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் செயன்முறைக்காக நியமிக்கப்பட்ட கால வரையறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.

பதில் கிடைக்காவிடின் தூதரகங்களுக்கும், ஜனாதிபதிக்கும் மகஜர் அளிப்போம்

யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கிறது என கேள்வியெழுப்பிய யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை தொடர்பாக திணைக்களத்துக்கு நாங்கள் கடிதம் எழுதியபோது, அதற்கு எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, நாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ்ப்பாணத்தில் உள்ள 118 கடற்றொழில் சங்கங்களின் கருத்தை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அ.அன்னராசா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்களுக்கு கடலட்டை பண்ணை தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்த நிலையில், அதை பற்றிய முறைப்பாடுகளும் சம்மேளனத்துக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையிலேயே கடலட்டை பண்ணைகளை மட்டுப்படுத்தி, சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீன் உற்பத்தியாகும் பிரதேசங்களில் கடலட்டை பண்ணை அமைக்கக் கூடாது என்றும் கோரினோம்.

அனுமதி பெற்று கடலட்டை பண்ணையை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கடலில் சீட் போட்டு கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைப்பதற்கு எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

குறிப்பாக, கொழும்புத்துறை பகுதியில் ஹோட்டல் போன்று கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரிக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால், ஜனாதிபதி உட்பட சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இது தொடர்பாக மகஜர் கொடுப்போம்.

மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு அந்த திணைக்களம் எதற்கு இருக்கின்றது என தெரியவில்லை.

5000 ஏக்கரில் கடலட்டை அமைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்.

கரையோர சூழலை பாதுகாக்க வேண்டிய குறித்த திணைக்களம் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஊழல், பாலியல் இலஞ்சத்துக்கெதிரான சட்ட மூலங்கள் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர்

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். பாலியல் இலஞ்சம் கோருவதற்கு எதிரான விதிவிதானங்கள் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்.

பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதியமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு அரச சேவை மாத்திரமல்ல தனியார் சேவையும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. யுத்த காலத்தில் நாடு வங்குரோத்து நிலை அடையவில்லை.யுத்த காலத்தில் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர் வரை திறைசேரியில் சேமிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு கையிருப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும். உண்டியல் மற்றும் அலாவா முறைமை ஊடான பண அனுப்பல்களுக்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியமை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணியாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு தனியார் தரப்பினரது பங்களிப்பு இன்றியமையாததாகும்.கடந்த 11 வருட காலமாக இலங்கைக்கு முறையாக செலுத்த வேண்டிய 54 பில்லியன் டொலர்களை பிரதான நிலை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள்.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

ஊழல் மோசடி இலங்கை வங்குரோத்து நிலை அடைவதற்கு பிரதான காரணம் என சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.நடைமுறையில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் ஊடாக உருவாக்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக 1975 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.தற்போதைய சூழலில் இந்த சட்டம் செயற்பாடற்றதாக உள்ளது. ஆகவே இந்த சட்டத்தை நீக்கி சொத்து விபரங்களை ஒன்லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு அமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கவுள்ளோம்.

ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.ஆனால் புதிய சட்டத்தில் இவர்கள் அனைவரையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது இலங்கைக்கு மிக முக்கியமானதொரு சட்டமாகும்.

பாலியல் இலஞ்சம் கோருவது பாரதூரமான குற்றமாகும்.அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் இலஞ்சம் கோரல் நெருக்கடிக்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் அவற்றை பகிரங்கப்படுத்துவது இல்லை.தமக்கு நேர்ந்த அநீதியை வெளியில் குறிப்பிட்டால் தமக்கும்,தம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற நிலையில் இருந்துக் கொண்டு அவர்கள் அந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்துவதில்லை.

சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலத்தில் பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கவும்,பாலியல் இலஞ்சம் கோரியவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

வசந்த முதலிகே உயிருக்கு ஆபத்து ! – பூசாவிற்கு மாற்ற முயற்சி

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அனைத்து அரசியல் கைதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சிறைச்சாலை ஆணையாளரிடம் கடிதம் ஒன்றை மக்கள் பேரவைக்கான இயக்கம்  கையளித்துள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தற்போது அரசியல் காரணங்களிற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கொழும்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இந்த தடுப்பு நடவடிக்கைக்கு முன்னதாக அவர் 90 நாட்கள் மிக மோசமான சூழலில் தடுப்பு முகாமில் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டார்.

எனினும் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையி;ல் வைக்கப்பட்டுள்ள உண்மைகளின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்ககூடிய அளவிற்கு எந்த குற்றங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

உண்மை இவ்வாறிருக்கும் போது சில அரசியல் அதிகாரிகளும் மற்றும் சில உயர் பொலிஸ் அதிகாரிகளும் வசந்த முதலிகேயின் தனி மனித உரிமையை மீறும் அவரை பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர் என அறிய முடிகின்றது.

பூசா தடுப்பு முகாமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதளஉலக செயற்பாடுகள் போன்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை தடுத்துவைக்கும் சிறைச்சாலை ஆகும்.

இவ்வாறு மாற்றுவதன் மூலம் வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதே சம்மந்தப்பட்ட தரப்பினரின் நோக்கம் என தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய வசந்த முதலிகெ  சிறைச்சாலையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் எங்கு தடுத்துவைக்கப்படவேண்டும் என்பதை தீர்மானம் படைத்த அதிகாரிகள் என்ற வகையில் நீங்கள் இவ்வாறான அநீதியான தீர்மனங்களிற்கு இடமளிக்க கூடாது.

மேலும் வசந்த முதலிகேயின் உயிரை பாதுகாக்கும் முகமாக கொழும்பு சிறைச்சாலையிலேயே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் எமக்கு தெரிந்தளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேலும் பல நபர்கள் உங்கள் அதிகாரத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இஅவர்களில் சிலருக்கு இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறான அநீதியான தடுத்துவைத்தல் தொடர்பாக நீதிமன்றங்களிற்கு அதிகாரமுடைய அமைப்புகளிற்கு தெரியப்படுத்தவேண்டும் இந்த நாட்டின் சாதாரண குடிமக்களாக அவர்களிற்கு உள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை பெற்றுதரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.