இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க உலக சுகாதார நிறுவனம் தலையிடவேண்டும்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மருந்து தட்டுபாட்டை நீக்குவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை அமைத்து, இந்த குழுவின் ஊடாக இந்த மருந்து தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என்ன போன்ற விடயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, சுகாதார அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, ஆகியோருக்கு தெளிவாக கூறியிருந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் பெரிய வைத்தியசாலைகள் தொடக்கம் சிறிய வைத்தியசாலைகள் வரை இந்த மருந்து தட்டுபாடு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலைழைய தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உடனடியாக நிலையான தீர்வை முன்வைக்க தவறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு, மருந்து விலை அதிகரிப்பு, மருந்து கொள்வனவில் ஏற்படும் ஊழல் விடயங்களை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கோரி, கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தில் ​நேற்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக இலங்கைக்கு மருந்து பொருட்களை வழங்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரரி்கைகையும் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

நட்டஈடு எங்களுக்கு வேண்டாம் சுவீகரித்த காணிகளே வேண்டும் ; வலி வடக்கு மக்கள் கோரிக்கை

“காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை காணிகளே எமக்கு தேவை. காணிகள் இல்லாமல் 30 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுகிறோம், விவசாயம் செய்த காணி தற்போது விவசாயம் செய்யாமல் கூலி தொழிலுக்கு செல்கிறோம். காணியின் பெறுமதி தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மாக இருக்கும்”

ஆனால் இவர்கள் என்ன பெறு மதியை தரப்போகிறார்கள், வய தான காலத்தில் எங்களுக்கு என்று ஒரு காணி கூட இல்லாமல் தெரு வில் நிற்கிறோம்.” -இவ்வாறு தெரிவித்துள்ளனர் வலி.வடக்கில் அரசினால் சுவீகரிக் கப்பட்ட காணிகளின் உரிமை யாளர்கள்.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீ கரிக்கப்பட்டடிருந்தன. வலி.வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்ட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலி.வடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.

இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப் பட்ட காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முன் தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத் தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் தெல்லிப் பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி, நிலஅளவை திணைக்களம், விலை மதிப் பீட்டு அதிகாரிகள், கிராம சேவகர்கள் ஈடுபட்டனர்.

இப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினர்.

எங்களுக்கு நட்ட ஈடு எதுவும் தேவை யில்லை. எமது சொந்தக் காணிகளே வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசாத ரணிலின் சர்வகட்சி மாநாட்டை மலையகக் கூட்டணி புறக்கணிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.ஆனால், மலையக தமிழரின்  அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை.

இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.

ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது – ஜனாதிபதி

13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும், இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.

ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.” என்றார்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்; சர்வ கட்சி கூட்டத்தில் ஆளும் தரப்புகள் கடும் எதிர்ப்பு

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு ஆளும் தரப்பினர் சிலரே நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சு எழுந்தது. இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.

இதன்போது, ஆளும் தரப்பை சேர்ந்த கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமது ஆதரவு இன்றி 13ஆம் திருத்தத்தை முழுமை யாக செயல்படுத்த முடியாது என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினார்கள். இதற்கு, பதிலளித்த ஜனாதிபதி ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நிறைவேற்று அதிகாரம் போதுமானது. பாராளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று கூறினார்.

இந்த சமயத்தில், தமிழ் மக்கள் கூட் டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் எடுத்துக் கூறினார். அவ்வாறு வெளியிடப்பட்ட கட்டளைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், அது தொடர்பாக தாம் தயாரித்த ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன் பின்னர், இனப்பிரச்னைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த சமயத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “கடந்த காலத்தில் இனப்பிரச்னை தீர்வுக்காக எனது தலைமையில் 127 கூட்டங்களை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.”, என்று சுட்டிக் காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழு அந்த அறிக்கையை பரிசீலிக்கின்றது. அதிலிருக்கும் பரிந் துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும். இது தொடர்பான விடயங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றார். மேலும், இன்னும் இரண்டு கூட்டங்களில் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேசமயம், கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தரப்பினர் உறுதியளிக்கப்பட்டபடி காணிகள் விடுவிக்கப்படாதமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளி யிட்டனர்.

இதற்கு உறுதியளித்தபடி இனங் காணப்பட்ட 100 ஏக்கர்கள் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். சில தடங்கல்கள் காரணமாக காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட்டின் த. சித்தார்த்தன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோரே பங்கேற்றனர். இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் அரசுக் கட்சி கூட்டமைப்பில் இணைய தமிழ் மக்கள் அதற்கு பாடம் புகட்ட வேண்டும் – ஜனா எம்.பி

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். அதன் பின் தலைகணம் இல்லாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 5 கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இருந்து நீக்கள் வேறுபட்டதாக இன்று பிரச்சாரம் செய்கின்றீர்கள்.2010 ஆம் ஆண்டுக்கு பின்பு அரசியலுக்கு வந்து இன்று தமிழ் மக்களுக்கும், உங்களது கட்சிக்கும், தலமை தாங்க முயற்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு இருகின்றதா. இந்த மக்களுக்காக ஒரு நாளாவது பட்டினி கிடந்துள்ளீர்களா.காயப்பட்ட போராளிகளின் இரத்தத்தையாவது கண்டிருப்பீர்களா அல்லது அவர்களை தூக்கியிருப்பீர்களா.

மக்களுக்கான ஒரு தீர்வு வரும் போது, 100 வீதம் நிதமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாத நீங்கள் தனித் தனியாக தேர்தலை சந்திக்க சொல்கின்றீர்கள். நீங்கள் பிரிந்து செல்வதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிந்து விடாது.20010 கஜேந்திரகுமார் அணி வெளியேறிய போதும், 2015 இல் ஈபிஆர்எல்எப் வெளியேறிய போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாக தான் பயணித்து.இன்று தமிழரசுக் கட்சி வெளியேறுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிந்து விடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கூறுகின்றீர்கள்.ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அப்படி கூறவில்லை.

சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்படி கூறவில்லை. ஆனால் எப்படி உங்களால் கூற முடியும். நாங்கள் முக்கியமான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கிறது. சர்வதேசத்தின் உதவியை நாடியிருக்கின்றது.இந்தியா பெரும் அழுத்ததை கொடுக்கிறது.

13 ஆவது திருத்த சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கிறது. மெல்ல மெல்ல இலங்கை அரசு அதை நோக்கி நகர்கின்றது.எங்களுடன் பேசுவதற்கான காலங்கள் கனிந்து வருகிறது. நாங்கள் பிரியக் கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தலின் பின் இணைந்து செயற்படுவோம் என்கிறார்கள்.

அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். அதன் பின் தலைகணம் இல்லாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலே மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்- செல்வம் எம்.பி.

காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பாக இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடை பெறுகின்ற சர்வ கட்சி கூட்டத்தில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
அதற்கான காரணம் கடந்த காலங்களில் ஜனாதிபதியால் வாக்குறுதி அளித்த விடயங்களான நில அபகரிப்பு மற்றும் சிறைக்கைதிகள் விடுதலை போன்ற பல விடயங்களை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால் இன்றைய தினம் நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்ட விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை வைக்கின்றோம்.
தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் கேட்ட விடயங்கள் நிறை வேற்றப்படுமாக இருந்தால் இனி வரும் ஏனைய கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
இது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் நேரில் சந்தித்து கூற இருக்கின்றோம்.ஜனாதிபதி உத்தரவிட்டும் கூட வன வள திணைக்களம் தங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் வந்து வாக்களித்த 108 ஏக்கர் பொதுமக்களின் காணி இன்னும் விடுபடவில்லை. ஆகவே அதை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.
எனவே நாங்கள் வைத்த கோரிக்கைகள் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை. அவை சாத்தியமாக இருந்தால் அடுத்தடுத்து கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – ஹர்ஷ

நியாயமான முறையில் தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அவை பொது மக்களின் கழுத்தை நெரிக்கும் வரி திருத்தமாக அமையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும் , இன்று நாம் அதன் நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனிநபர் வருமான வரி 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாட்டைப் போன்றே , திறைசேரியில் ரூபாவிற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதற்கான தீர்வு என்ன? நிச்சயமாக பணத்தை அச்சிட முடியாது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த காலங்களை விட தற்போது பணம் அச்சிடும் வீதம் குறைவடைந்துள்ளது.

சீனி வரி குறைப்பின் மூலம் 20 – 25 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது. அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து தனிநபர் வருமான வரியை கண்மூடித்தனமாக அதிகரிப்பது நியாயமற்றது. வருமானத்தை அதிகரிப்பதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போதுள்ளதை விட நியாயமான முறையில் வரியை அறவிட முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தின் வருமானமும் குறைவடையாமல் , அதே சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எமது ஆட்சியில் வரி கொள்கை பின்பற்றப்படும். அதே போன்று ஏற்றுமதி பொருளாதாரத்திலும்அதிக அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு சொந்தமான நாடு அல்ல. எனவே அவர்கள் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நாம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளின் போது நான் இதனைக் கடுமையாக வலியுறுத்தினேன்.

ஆனால் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்க முடியாது. இதற்கு மாற்று வேலைத்திட்டம் எம்மிடமிருக்கிறது. அதனை நாம் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கின்றோம் என்றார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படுமா என்பது சந்தேகம் – உதய கம்மன்பில

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு கூட திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அரசியலமைப்பின் 5 உறுப்பினர்கள் உறுதியாக இருந்தால் அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குவது கடினமாக உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச சேவைக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமை தனியார் துறைக்கும் தாக்கம் செலுத்தும். அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

தனி நபரின் மாத வருமானத்தை காட்டிலும் அத்தியாவசிய செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பினால் அதிக சம்பளம் பெறும் தரப்பினர் நாட்டை விட்டு நிச்சயம் வெளியேறுவார்கள்.பிறிதொரு தரப்பினர் சட்டத்திற்கு முரணான வகையில் நாட்டை விட்டு வெளியேறுவார்கள், மூளைசாலிகளை நாட்டை விட்டு வெளியேற்றி தொடர்ந்து ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது.

அரசாங்கத்தின் தவறான வரி அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வரி கொள்கை தொடர்பில் பௌத்த மதம் பல விடயங்களை போதித்துள்ளது. பௌத்த மத கருத்துக்களை போதிக்கும் ஜனாதிபதி வரி கொள்கை தொடர்பான அறக்கருத்தை அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை நேற்று புதன்கிழமை கூடியது. அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய நியமனங்களை வழங்கி தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர்,பிரதமர்,ஜனாதிபதியின் பிரதிநிதி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளார்கள். எதிர்க்கட்சி தலைவர்,எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி மற்றும் மூன்று சிவில் உறுப்பினர்கள் ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை காட்டிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர், ஆகவே அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 5 உறுப்பினர்கள் உறுதியாக இருந்தால் வெற்றிக்கொள்ளலாம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை. திறைச்சேரி நிதி வழங்காவிட்டால் தேர்தலை நடத்த முடியாது,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் தனிப்பட்ட நிதியை கொண்டு தேர்தலை நடத்த முடியாது என்றார்.