ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறும் துமிந்த சில்வா

2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிறைச்சாலை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் நீதிமன்றம் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியர் திணைக்களத்தின் கோரிக்கையை மீறி, அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிபாரிசு செய்திருந்தார்.

துமிந்த சில்வாவின் வைத்தியர்களின் சிபாரிசுகளுக்கு அப்பால் செல்வதற்கு விசேட வைத்தியர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்து, துமிந்த சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்

23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு புதன்கிழமை (17) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன.

பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

துமிந்தவுக்கு கோத்தபாய வழங்கிய பொதுமன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாததற்காக துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.

“மஹிந்தவுடன் இணைய தமிழர்கள் தயாராக இல்லை” – ரெலோ செயலாளார் நாயகம் ஜனா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதியாவார். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அ கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.

யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

இனவாதத்தின் காரணமாகவே மயிலத்தமடு விவகாரத்திலும் அரசு பாராமுகம் – தவிசாளர் நிரோஸ்

மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்துவதற்கு சகல இடங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர்வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களப் போரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாம் போராடுகின்றோம். வரலாற்று ரீதியில் எமது மக்களின் நிலங்கள் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு உட்பட்டே வருகின்றன. அதற்கு அரச இயந்திரமும் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றது. இலங்கையை இனவாதமற்றதாக அரசாங்கம் வெளியுலகிற்குக் காட்ட எத்தனிக்கும் அதேவேளை ஆரவாரமற்ற வன்முறைகளின் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீகத்தினையும் அவர்களது பொருளாதாரத்தையும் அழித்து வருகின்றது.

மயிலத்தமடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கால்நடைகள் வன்முறையான மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. பண்னையாளர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகார பலத்துடன் பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.

 கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்பு அல்ல இப்பிரச்சினை. அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நிகழ்ச்சி நிரலுடனான ஆக்கிரமிப்பு. நாம் வடக்குக் கிழக்கு எமது தாயகம் என்ற வகையில் இன்று யாழில் இவ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். தொடர்ந்தும் மயிலத்தமடுவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக சகல பிரதேசங்களிலும் வெளியுலகின் கவனத்தினை ஈர்ப்பதற்கான பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களிடம் பிக்பொக்கட் அடித்து வெளிநாடுகளில் விநோதங்களில் ஈடுபடும் ஜனாதிபதி – சஜித் குற்றச்சாட்டு

சுகாதார தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை நிறைவேற்ற பணம் இல்லை எனக் கூறும் அரசாங்கம், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67ஆவது கட்டமாக, கலாவெவ சிறிமாபுர மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும்

இன்றைய நிகழ்வில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,

”கூலித்தொழிலாளர்களின் அன்றாட வருமானத்தை பிக் பொகட் அடித்துக் கொள்ளும் அரசாங்கமே நாட்டில் உள்ளது. இன்று நாள் முழுவதும் நடைபெற்று வரும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நோய்வாய்ப்பட்ட சமூகத்தால் மருந்துகளைப் பெறமுடியவில்லை.

சுகாதார சேவையே இந்நேரத்தில் நாட்டுக்குத் முக்கியமான தேவையாக இருந்தாலும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒதுக்கீடுகளே வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வாறு போதாது எனக் கூறும் அரசாங்கத்திடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்கும் போதாதது எனக் கூறுகிறோம். பலவீனமான தலைமைத்துவத்தினாலயே சுகாதார சேவை முடங்கியுள்ளது.

நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

வங்குரோத்து நிலையிலும் செல்வந்தர்களுக்கு விசேட சலுகைகள் – சம்பிக்க குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முக்கிய நிபந்தனைகளை புறக்கணித்து செயற்படுகிறது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடும், நாட்டு மக்களும் இன்று பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு ராஜபக்ஷர்களே காரணம்.

இதனை அரசியலுக்காக குறிப்பிடவில்லை. ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. நாட்டையும், நாட்டு மக்களையும் அதளபாதாளத்துக்குள் தள்ளியதை ராஜபக்ஷர்கள் மறந்து விட்டார்கள்.

மேலும் , சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வற் வரி ஊடாக அரச வருமானத்தை 60 கோடி ரூபா வரை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வர்த்தகர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடமிருந்து மதுவரி திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா வரியை அறவிடவில்லை.

இந்த நிலுவை வரியை அறவிட அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வங்குரோத்து நிலையிலும் செல்வந்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி – ரணில் இடையே சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்த வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி, The Climate Reality Project இன் நிறுவனரும் தலைவருமான அல் கோர் (Al Gore) ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியும் தூதுவருமான ஹிமாலி அருணதிலக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலை முன் மாதிரியான சிறைச்சாலையாக உள்ளது – நீதியமைச்சர் விஜயதாஸ

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுபாரிய பிரச்சினையாகும். யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ திங்கட்கிழமை (15) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கைதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் கைதிகளின் உற்பத்திகளையும் கண்காணித்தார். கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

யாழ். சிறைச்சாலையில் நேற்று 16ஆம் திகதிவரை 852 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 38 பெண் சிறைக்கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.