முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி தடயங்களை அழிக்க அரசு முயற்சி

முல்லைத்தீவில் அகழப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரஞ்சினி தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- இன்றுடன் 2,390 ஆவது நாளாக பல இன்னல்களுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தெருவில் நின்று போராடி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்ப்பட்ட காணாமல் போனோர் பணிமனை இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில் தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விவரங்களை பெற்று மக்களுக்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காகவும் தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர். நாளையதினம் (இன்று) கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது.

நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில் ஓ. எம்.பி. பணிமனையை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயல்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம். இன்றும் நாம் ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவ தில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.

ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால் கூட அந்தப் பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்துக்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளைச் சரியாக செய்வதில்லை. தமது தேவைகளுக்காகச் செல்லும் மக்களை இருக்க வைத்துவிட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள். ஆனால், ஓ.எம்.பி. அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் ஜூஸிற்கும், சிற்றுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன? யாரால் ஆக்கப்பட்டன? அதனை இல்லாது ஒழிப்பதற்காகத்தான் அகழ்வுப் பணிகளில் அரச படைகளும் இணைந் துள்ளன. அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். இலட்சக்கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும்-என்றார்.

யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு – அரச புலனாய்வு துறையினர் அழுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு,

“நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ். ஐ. எஸ் ) அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தெரிவுக்கான பேரவை கூட்டம் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாவிடின் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம். கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்  என  யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், சிலாபம், கொழும்பு கம்பகா , காலி  மற்றும் அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டங்களிலுள்ள   கடற்தொழில் சமாசங்கள் , சங்கங்களின் பிரதிநிதிகளும் சட்ட ஆலோசகர்களும் இணைந்து கலந்துரையாடலொன்றை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

அதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களோடு மொத்தமாக 15 கடலோர மாவட்டங்கள் ஒன்றிணைந்து மீனவ பிரச்சினைகள் தொடர்பாகவும்  அவற்றை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நீர்கொழும்பு சட்டத்தரணி நிமாலினி குணரட்ணம் தலைமையிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே வடக்கு சங்கங்களையும் சமாசங்களையும் ஒன்றிணைக்குமாறு நாம் விடுத்த  கோரிக்கையை ஏற்று இன்று சட்டத்தரணி வருகைதந்து எங்களுடன் கலந்துரையாடி எங்களையும் இணைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாதிப்பானது எமது பிரதேசத்திலும் ஏற்பட்டதை கடந்த காலங்களில்  ஊடகங்கள் வெளியிட்டன.  குறித்த பாதிப்பால் கடலாமை, திமிங்கிலம் போன்றன இறந்து கரையொதுங்கிய நிலை காணப்பட்டது என எம் தரப்பு விடயங்களை முன்வைத்தோம்.

வடமாகாணத்தில் பாதிப்பாகவுள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துதல்,  நீதிமன்றத்தை நாடுவது தொடர்பிலும்  இந்தியா இழுவைப் படகுகளை நிறுத்துதல் தொடர்பாகவும் யாழ் மாவட்டத்திலே உள்ள சீன கடலட்டை பண்ணை தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இவற்றை விட கிளிநொச்சி பகுதிகளில் கம்பிப்பாடுகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மீனவர்களின் படகு, வலைகள் சேதமாக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம்.

கடலட்டைப் பண்ணைகள்  கடந்த காலங்களில் கடற்தொழிற் சங்கங்கங்களின் அனுமதி பெற்றே  வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது நீரியல் வளத் திணைக்களம்,  நெக்ரா, நாரா நிறுவனங்களின் அனுமதியே தேவை எனக் கூறுகின்றது.

இதைவிட பருத்தித்தீவில் சங்கத்தின் அனுமதியின்றி பண்ணை அமைக்கப்பட்ட நிலையில் பல பிரச்சினைகள் எழுந்தும் இதுவரை பண்ணைகள் அகற்றப்படாத நிலையுள்ளது. கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலததில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்.

சட்டங்கள் பல இருந்தாலும் அவை அமுல்படுத்தப்படாமல் உள்ளது அவற்றை அமுல்படுத்த அழுத்தங்களை பிரயோகி்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் இல்லை எதுவாயினும் மக்களின் அனுமதியைப் பெற்றே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

வடக்கில் முதலிடுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் ஆளுநர் கோரிக்கை

“எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எமது பகுதியை மீட்டெடுக்க நம்மிடம் உள்ள ஒரேயொரு உபாயம். புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக அனைத்துத் தரப்புக்களும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது மாகாணத்தின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மாகாணத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றைத் தருவதற்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் முன்னேற்றுவதற்கான பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வடக்கு மாகாணத்தில் அதிகரித்து பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிந்திக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறையை இன்னும் விரிவுபடுத்தி, அதனூடான வருமானமீட்டலையும் வடக்குக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைகளையும் பெற்று வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும். எமது மாகாணத்தைச் சிறந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிறந்த பெறுபேற்றைத் தருவதற்கு அனைத்துத் தரப்பினரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

யானையை இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதில்லை என தாய்லாந்து தெரிவிப்பு

முத்துராஜா யானைக்கு சிறப்பு சிகிச்சைகளும் விசேட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த யானையை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்றும் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தினால் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானை, கடந்த 2 ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த யானைக்கு கால் எலும்பில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கவே, தாய்லாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இலங்கையில் முத்துராஜா யானை மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் இந்த யானையை இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்று அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜா யானையின் ஒரு கண்ணில் வெள்ளை பூ படர்ந்துள்ளமையும், பின்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளமையும், முதுகில், நகங்கள் மற்றும் தோல்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

தற்போது தாய்லாந்தின் லம்பன் பிராந்தியத்தில் அமைந்துள்ள, யானைகள் சரணாலயத்தில், இதற்கான சிகிச்கைகளும் அளிக்கப்படுகின்றன.

அத்தோடு, முத்துராஜாவின் நடவடிக்கைகளின் சிறப்பான மாற்றம் தற்போது தெரிவதாகவும், அந்நாட்டு மொழிக்கு இணங்க செயற்படுவதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட மேலதிக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13.07.2023 (வியாழக்கிழமை) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும், அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற ஆடைகள் மற்றும் எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேநேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உள்ளிட்ட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக அகழ்வு பணிகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றன.

இதன்போது இன்றையதினம் 13 எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினையே தவிர சட்டத்தில் அல்ல – அநுர குமார

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவத்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரக் குற்றவாளிகள் எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது நாட்டில் சட்டம் பலமாகத்தான் உள்ளது. அதானால்தான் தேங்காய் திருடியவரும், இலஞ்சம் வாங்கிய கிராமசேவகரும், பொலிஸாரும்கூட சிறைக்குச் செல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சிக்குவதில்லை. அரசியல் பலத்தால் இதிலிருந்து இவர்கள் இலகுவாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த குழியிலிருந்து வெளியே வர, ஸ்தீரமான மற்றும் நேர்மையான அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கத்தை கடத்த முயன்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவ்வாறு எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினைக் காணப்படுகிறதே ஒழிய, சட்டத்தில் அல்ல.

குற்றவாளிகளை பாதுகாக்கும், குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும், குற்றவாளிகள் சட்டத்தை இயற்றும் ஒரு நாடாளுமன்ற சம்பிரதாயம் முதலில் மாற்றமடைய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை விரைவில் ஆரம்பம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும்.

பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது

“கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும்.

அந்தக் கதை இதுதான்.

வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார். அந்த வருகையின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. சில உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. அப்படிப் பேசப்பட்டவற்றில் ஒன்றுதான் இந்தக் கரும்பு ஆலை விடயமும்.

சுமார் 500 மில்லியன் டொலரில் மிகப் பெரிய கரும்பு ஆலையை நிறுவுதற்கென தாய்லாந்து நிறுவனத்தின் பேரில் தாய்லாந்துப் பிரதமர் கேட்ட திட்டத்துக்கு, மைத்திரிபால சிறிசேனா, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனைச் சந்தித்த பிரயுத் சான்ஓசாவிடம் வடக்கில் முதலீடு செய்வதைப்போல கிழக்கிலும் தாய்லாந்து முதலீடுகளைச்செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார் சம்மந்தன். பின்னர் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புக் கூட நடந்தது. அதிலும் இந்த விடயத்தைச் சம்மந்தன் பேசினார்.

இதற்குப் பின்னர், இந்தத் திட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது இந்தத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்தனர். அன்று அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டபடியால் இது விவாதப் பொருளாகவில்லை.

அதற்குப் பிறகு அன்றைய அமைச்சரவையில் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அடுத்த கட்டமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார், மைத்திரிபால சிறிசேன. அதனால் எல்லாமே தடைப்பட்டன. அதற்குப் பிறகு உருவான அமைச்சரவையில் மீண்டும் இந்தத்திட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அதுவும் நடைமுறைப்படுத்த முடியாமல் தடைப்பட்டது. காரணம், அன்று உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 இன் தாக்கம்.

அது நீங்க, இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தார். அவர் இந்தத் திட்டத்துக்கான அனுமதிக்கு மீண்டும் சில மாற்றங்களைச் செய்து அமைச்சரவை அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்தார். அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கிடையில் கோத்தபாய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார்.

இப்படி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்த பின், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காணும் வகையில் என்னென்ன திட்டங்கள் கிடப்பில் உள்ளன? என்னென்ன திட்டங்கள் தேக்கத்தில் உள்ளன. என்று ஆராய்திருக்கிறார். அப்படியான சூழலில் அடையாளம் கண்டு, மீண்டும் மேசைக்கு வந்ததே இந்தத் திட்டம்.

இதனை ஆராய்ந்த ஜனாதிபதி, பூர்வாங்க வேலைகள் எல்லாமே முடிந்த நிலையில் இருந்த இந்தத் திட்டத்தை சில மெருகுபடுத்தலுடன் மீண்டும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.

அப்பொழுதுதான் இது விவகாரமாக மாறியது.

விவகாரமாகிய கதை

முன்னர் சம்மதித்த தமிழ்த் தரப்புகள் இப்பொழுது இரண்டு, மூன்றாக உடைந்து விட்டன. முன்னரைப்போல ஆட்சியிலும் தமிழ்த்தரப்புகள் பங்கேற்கவில்லை. தவிர, இந்தத் திட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ரெலோ மட்டும்தான் நேரடியாக ஆதரவைத் தெரிவித்துள்ளது. புளொட் வழமையைப் போல நிலைமையைப் பார்த்து முடிவெடுப்போம் என்று மதிலின் மேலே குந்தியிருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்னும் வாயைத் திறக்கவே இல்லை. புதிய கூட்டமைப்பில் பங்காளிகள் அல்லவா!

பதிலாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குக் காரணம், இந்த அணிக்கு தமிழரசுக் கட்சி எதிராக நிற்பதாகும்.

“எந்த வகையிலும் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அது சிங்களக் குடியேற்றத்தை வவுனியா வடக்கில் கொண்டு வந்து சேர்த்து விடும். கரும்புச்செய்கைக்கான நீர் விநியோகம் என்ற பேரில் மகாவலிகங்கையை நெடுங்கேணிக்குக்கொண்டு வருவார்கள். நீரோடு சேர்ந்து சிங்கள பௌத்தக் குடியேற்றம் என்ற நெருப்பும் வரும்” என்று சொல்கிறார் சுமந்திரன்.

“சுமந்திரன் இப்படிக் காட்டமாகச் சொல்வதற்குக் காரணம், உண்மையில் சிங்களக் குடியேற்றம் வந்து விடும் என்பதோ, மகாவலிகங்கை நெடுங்கேணிகுள் நுழைந்து விடும் என்பதோ அல்ல. ரெலோ இந்தத் திட்டத்தில் முன்னிலைப் பாத்திரம் ஏற்றிருப்பதேயாகும். மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ரெலோ காட்டிய அக்கறையும் அதைச் செயற்படுத்தி முடித்ததுமாகும். அத்துடன் இந்தத் திட்டத்தில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் ரெலோவின் இன்றைய ஆலோசகர் சுரேன் குருசாமி இதில் பிரதான செல்வாக்கைச் செலுத்துகிறார். இவரே கூட்டமைப்பிலிருந்து ஏனைய மூன்று கட்சிகளையும் பிரித்தெடுத்து, புதிய அணியில் சேர்ப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புவதாகும்” என்று ரெலோவின் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக சுரேன் குருசாமியிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த அத்தனை பேரும் ஆதரித்தனர். சம்மந்தன் பொதுவெளியிலேயே இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட நடத்தியிருக்கிறார். (இதோ அதற்கான ஆதாரங்கள் என்று அந்தச் செய்த வந்திருந்த பத்திரிகை நறுக்குகளைக் காண்பிக்கிறார்). அப்படியெல்லாம் செய்து விட்டு, இப்பொழுதுது ரெலோதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு தேவையில்லாப் பிரச்சினை என்று சொல்வது அர்த்தமற்றது மட்டுமல்ல, அரசியல் லாபங்கருதியதுமாகும்” என்றார்.

மேலும் அவர் சொன்னார், “இது எமது பிரதேசத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும். பலரும் கருதுவதைப் போல இது சீன அரசாங்கத்தின் முதலீடல்ல. அல்லது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானதும் அல்ல. இது தாய்வானின் முதலீடு. இதன் மூலம் வன்னிப் பிரதேசத்தில் பலருக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். கரும்பு ஆலையை மட்டுமே குறித்த நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தில் அமைத்துக் கொள்ளும். ஏனைய நிலமும் அவற்றில் பயிரிடும் உரிமையும் விவசாயிகளுக்கானது. சிலர் சொல்வதைப்போல இந்தத் திட்டத்தினால் சிங்களக் குடியேற்றம் வந்து விடும். நீர்த்தேவைக்காக மகாவலி கங்கையை வவுனியாவுக்குத் திருப்பி, அதன் வழியே சிங்களவர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதெல்லாம் ஏற்கக் கூடிய காரணங்களில்லை. சிங்களவர்களின் பிரசன்னத்துக்கான வழிகள் பல உண்டு. அதைத் தடுப்பது வேறு. இது வேறு. தவிர, இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வது பிரதேச மட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளே. ஆகவே அதனை நாம் (தமிழ்ப்பிரதிநிதிகளே) செய்யப் போகிறோம். அப்படியிருக்கும்போது எப்படி சிங்களக் குடியேற்றத்துக்கான சந்தர்ப்பம் ஏற்படும்? இந்தப் பயனாளிகள் தெரிவில் மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் போராளிகள், பிரதேச ரீதியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் முன்னணி விவசாயிகள், புதிய செய்கையாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதேவேளை ஏற்கனவே நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இதில் திருத்தங்களுக்கு இடமுண்டு. அதற்குள் ஏன் இந்த அவசரமும் அநாவசியமான கதைகளும்? நாம் அரசியல் விடுதலையுடன் எமது மக்களின், எமது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம்” என்று.

“கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீர் தேவைப்படுமே. அந்த நீரை செய்கை மேற்கொள்ளப்படக் கூடிய இடங்கள் என்று கூறப்படும் நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற இடங்களில் பெற முடியுமா?” என்று கேட்டபோது, “இது தொடர்பான கள ஆய்வொன்று 2016, 2017 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியாப் பிரதேசத்தில் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியில் பெருமளவு பகுதி வீணடிக்கப்படுகிறது. அதை உரிய முறையில் சேமித்தால் பல திட்டங்களுக்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இதற்கான கட்டுமானங்கள், வடிகாலமைப்புகளைச் செய்தால் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். பொருளாதார வளத்தையும் பெருக்க முடியும் என்று அந்த அறிக்கை சொல்கிறது” என்கிறார் சுரேன் குருசாமி.

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கின்ற இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சூழலியலாளருமான பொ. ஐங்கரநேசன், இது தொடர்பாக வேறு விளக்கத்தை அளிக்கிறார். “இந்தத் திட்டத்தை நாம் மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தத் திட்டத்தை வவுனியாவில் திணிக்க முற்படுகின்ற அரசாங்கம், 1960 களிலிருந்து கந்தளாயில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்புச் செய்கையையும் சர்க்கரை உற்பத்தியையும் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? அங்கேயே மீளவும் அதை ஆரம்பிக்கலாமே. அதற்குரிய அத்தனை வசதிகளும் ஏற்பாடுகளும் அங்கேயே உண்டு. இரண்டாவது, இந்தத் திட்டத்தினால் நீர்ப்பிரச்சினையும் சூழலியல் கேடும் ஏற்படும். உலக அளவில் நீர்ப்பிரச்சினையையும் சூழலியல் பாதுகாப்பையும் பற்றிச் சிந்திக்கின்ற நாடுகள், தமது முதலீடுகளை இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றன. இதன் மூலம் வருவாயைத் தாம் பெற்றுக் கொள்வதோடு, தமது இயற்கை வளத்தையும் சூழலையும் பேணிக் கொள்கின்றன. மாறாக எமது வளத்தைச் சுரண்டி, எமது சூழலைக் கெடுக்கின்றன. ஆகவே இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. மூன்றாவது, இந்தத் திட்டத்திற்குப் பதிலாக எமக்குப் பொருத்தமான வேறு திட்டங்களைக் கொண்டு வர முடியும். உதாரணமாக ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு உப்பளங்களை முந்திய மாதிரி முழுமையான அளவில் இயங்க வைக்கலாம். ஆழ்கடல் மீன்பிடியை விருத்தி செய்து, வெளிநாடுகளுக்கான கடல் உணவு ஏற்றுமதியை ஆரம்பிக்கலாம். இந்த மாதிரிப் பலவற்றைச் செய்யலாம். அப்படிச் செய்யாமல் இதைத் திணிக்க முற்படுவது ஏன்?” என்று கேட்கிறார்.

இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனும் எதிர்க்கிறார்.

இது பற்றி விவசாயத்துறை மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறைசார்ந்த அறிஞர்களிடம் கேட்டபோது, “இது அரசியல் விவகாரமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாம் நிதானமாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். எந்தப் பொருளாதாரத் திட்டத்திலும் சாதக பாதக அம்சங்கள் இருக்கும். அதை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் நன்மை தீமைகளும் வெற்றி தோல்விகளும் உள்ளன. எங்களுடைய விவசாயிகளில் பலரும் சோம்பல் பயிற்செய்கையிலேயே அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே அவர்கள் நெல் விவசாயத்தை அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், செய்கை பண்ணப்படும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்படுவதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. திரும்பத்திரும்ப இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாமும் மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அக்கறைப்படும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். விவசாயிகள் அதில் ஈடுபடுவதற்குத் தயங்குகிறார்கள். இதனால் உழுந்து, பயறு, கௌபி, கடலை, பருப்பு வகை, பருத்தி, மஞ்சள், மிளகு, பழங்கள் எனப் பலவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைக்குறித்து எங்களுடைய அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை. ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் வந்தால் அதை உடனடியாக எதிர்க்க முயற்சிப்பார்கள். இப்படித்தான் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவுக்கு வந்தபோதும் எதிர்த்தார்கள். ஒரே தரப்புக்குள்ளேயே முரண்பட்டு மாங்குளத்தில் கட்டவேண்டும் என்று ஒரு தரப்பும் ஓமந்தையில் கட்ட வேணும் என்று இன்னொரு தரப்பும் சண்டையிட்டன. இந்த மாதிரியான விடயங்களில் கலந்தாய்வை மேற்கொள்ளக் கூடியவாறு துறைசார் நிபுணத்துவக் குழு எதுவும் நம்மிடமில்லை. அப்படி ஒரு குழு இருந்தாலும் அதற்கொரு அரசியற் சாயத்தைப் பூசி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்களே. ஏனென்றால், முதலீட்டாளர்களுக்கு சிரமங்கள் அதிகம் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு முதலீட்டாளர் படுகின்ற சிரமத்தைப் பார்க்கின்ற ஏனைய முதலீட்டாளர்கள் இந்தப் பக்கமாகத் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். இதை எம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாடும் நம்முடைய மக்களும் இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிழைப்புத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் எல்லாம் குறைவடையப் போகிறது. சனத்தொகை குறைந்தால் நமக்கான நிதி ஒதுக்கீடுகளும் வள ஒதுக்கீடுகளும் குறைவடையும். அதைத் தடுப்பதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும்” என்கின்றனர்.

இந்த நியாயத்தை நாம் மறுக்க முடியாது.

முதலில் இந்தத் திட்டத்தை அரசியல் பகைமை, அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தத் திட்டம் வடக்கில் கைவிடப்பட்டால், அதை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு அங்கே தயாராக உள்ளனர். விகாரைகள் கட்டப்படுவதை எதிர்க்கலாம். அதில் நியாயமுண்டு. இப்படியான தொழில்வாண்மைக்கான முயற்சிகளைத் தடுக்க முடியுமா? என்று அபிவிருத்திக் கண்ணோட்டமுடைய சிலர் கேட்கின்றனர்.

அவர்களுடைய நியாயம் என்னவென்றால், “கரும்பு உற்பத்தியை பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, சீனா, கியூபா என உலகில் 120 நாடுகள் மேற்கொள்கின்றன. முன்னணி வகித்த பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்புச் செய்கையும் அதன் பயன்பாடும் இருந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் 03 வீதமான நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. 4.5 கோடி விவசாயிகள் கரும்புச்செய்கையில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழகம் 50 வீதமான உற்பத்தியைச் செய்கிறது. 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியா முழுவதும் 500 க்கு மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 41 ஆலைகள் தமிழகத்தில் மட்டும் உண்டு. ஆலைகளை விட கரும்பு ஆராய்ச்சி மையங்கள், உற்பத்திப் பிரிவுகள் எனப் பலவும் செயற்படுகின்றன. கரும்பு தின்னக் கைக்கூலி எதற்கு என்று தமிழில் பழமொழி கூட உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் கரும்புக்கு முக்கியமான இடமுண்டு. பொங்கல், பண்டிகைகளில் கரும்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அந்தளவுக்குத் தமிழோடும் தமிழர் வாழ்வோடும் கரும்பு பின்னிப் பிணைந்திருக்கிறது. அப்படியான கரும்பு கசக்கிறது என்கிறார்கள்” இந்தப் புத்திஜீவிகள்.

உலகில் 80 வீதத்துக்கு மேலான சீனி மற்றும் சர்க்கரையை கரும்பிலிருந்தே உற்பத்தி செய்கிறார்கள். மீதியையே பீற்றூட்டிலிருந்து எடுக்கிறார்கள். கியூபாவின் பொருளாதாரத்தில் பாதியை கரும்பே நிறைவு செய்கிறது. உலகப் பெரும் புரட்சியாளர்கள் ஃபிடல் காஸ்ரோவும் சேகுவேராவும் கரும்பு வெட்டும் தொழிலைச் செய்திருக்கிறார்கள். அதையே தமது அடையாளமாகவும் கொண்டிருந்தனர். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கோ கரும்பு கசக்கிறது!

கரும்புச்செய்கையை மேற்கொள்வதாயின் அதற்கான நிலம், நீர் போன்றன உண்டா என்று வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, “ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. பின்னர் அமைச்சரவை, ஜனாதிபதி ஆகிய தரப்புகள் தொடர்பு கொண்டு பேச்சுகளை நடத்தின. இதன்போது தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களமும் தேவையான காணிகளை வழங்க முடியும் என வனப் பிரவினரும் காணி அமைச்சும் சொல்லியுள்ளன. ஆனால், திட்டத்தை இன்னும் இறுதி செய்யவில்லை என்று அறிகிறோம்” என்று சொல்லப்பட்டது.

கரும்பு கசக்குமா? இனிக்குமா? என்று சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே. அப்படித்தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்த ரெலோவும் சொல்கிறது.

 

– கருணாகரன்