கருவுடன் அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைவருக்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதையில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைதன்மையின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் சபாநாயகருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்ததாகஅவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது – சந்திரிகா

சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும்.

எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர கட்சி இன்றும் என்னுடனேயே இருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

காணொளி பதிவொன்றை வெளியிட்டு அதில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. இதற்கு நானும் பொறுப்பு கூற வேண்டும் என்று சில சந்தர்ப்பங்களில் தோன்றுகிறது. எனது பெற்றோரதும், என்னுடையதும் அர்ப்பணிப்பினால் சுதந்திர கட்சிக்கு 23 ஆண்டுகள் ஆட்சியில் நிலைத்திருக்க முடிந்தது.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டுக்கும் சுதந்திர கட்சிக்கும் ஏற்பட்டிருந்த நிலைமையை கவனத்தில் கொண்டே 9 ஆண்டுகளின் பின்னர் நான் மீண்டும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். 2015 இல் தனித்தே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் போது நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளதாக என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

3 ஆண்டுகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டம் எம்மால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட தனியொரு நபரால் முழுமையாக வீழ்ச்சியடை செய்யப்பட்டது. பண்டாரநாயக்க கொள்கையை எதிர்த்தவர்கள் , எனக்கும் இடையூறு விளைவித்தனர். என்னை கொலை செய்யுமளவிற்கு சதித்திட்டம் தீட்டினர். 2015இல் கட்சி கட்டியெழுப்பப்பட்ட போதிலும் , மைத்திரிபால சிறிசேன ஏனைய தரப்பினருடன் இணைந்து அதனை சீரழித்துள்ளார்.

என்னை கட்சியிலிருந்து புறந்தள்ளினர். சிரேஷ்ட தலைவர்கள் பலரின் இரத்தத்தினால் உருவான இந்த கட்சியை எவரும் அழிக்க முடியாது. கட்சி பலமடைய இன்னும் சிறிது காலம் செல்லும். ஆனால் நிச்சயம் அது இடம்பெறும்.

அன்று நான் இவ்வுலகில் இருப்பேனா என்று தெரியாது. எவ்வாறிருப்பினும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய இளம் தலைமுறையினரை நான் உருவாக்கிச் செல்வேன். யார் எதைக் கூறினாலும் நான் சுதந்திர கட்சிலேயே உள்ளேன். சுதந்திர கட்சியும் என்னுடனேயே உள்ளது என்றார்.

சுற்றுலா வீசாவில் வெளிநாடு சென்று தொழில் தேடுபவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – விஜேதாச

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு தொழில் தேடிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர்  மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலா வீசாக்கள் ஊடாகச் சென்று வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே அதிகளவான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் எம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அன்றைய தினமே இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் சில பட்டியல்கள் காணப்படுகின்றன. அவற்றிலுள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டு , சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா வீசாக்கள் வழங்கப்படுகின்றமை சுற்றுலா செல்வதற்காகவேயாகும்.

ஆனால் சுற்றுலா வீசாவில் சென்று அங்கு தொழில் தேடுபவர்கள், தொழில் கிடைக்கவில்லை எனில் வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுடனும் , நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து , இலங்கையிலுள்ள அந்த நாடுகளுக்கான தூதரகங்களுக்கு இது தொடர்பில் அறிவித்து வீசாவை வழங்குமாறு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை. இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வாக்களிப்பில் நடுநிலை வகித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (நவ 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பித்தார்.

நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெற்றது.

இந்நிலையில், இதன் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

ஒரு கட்டிட பிரச்சினையை தீர்க்க முடியாத ஜனாதிபதி இனப்பிரச்சினையை எப்படி தீர்க்க போகிறார்- ரெலோ வினோ எம்.பி

ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்திற்கான விஜயம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வு அவரின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவில்லை.

சில பிரச்சினைகளினால் ஒரு கட்டிடத்தையே திறந்து வைக்க முடியாத ஜனாதிபதியினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினையை  எப்படி தீர்த்து வைக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை ஒரு நல்ல நோக்கத்திற்காக வவுனியா வந்திருந்தார். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அவர் முதல் முதல் தனது விஜயத்தை வன்னி மாவட்டத்திற்கு மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஜனாதிபதி அங்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா செயலக வாசலில் குழுமியிருந்தனர்.

இந்த நாட்டின் தலைவரை நாம் சந்திக்க வேண்டும், அவரிடம் எமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதற்காகவே  அங்கு குழுமியிருந்தனர்.

ஆனால் அங்கிருந்த பொலிஸார் நீங்கள் ஊடகங்களுக்காகவும், சர்வதேசத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றீர்கள் என் கூறி ஜனாதிபதியை சந்திக்க விடாது தடுத்தனர்.

அந்த உறவுகளின் தூய்மையான போராட்டத்தை கேவலப்படுத்தினர். இதன்மூலம் அந்த தாய்மார்களுக்கு இந்த அரசோ ஜனாதிபதியோ  ஒரு போதும் தீர்வை வழங்கப்பபோவதில்லையென்பதனை உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியும் அந்த போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கான தீர்வை அதிலே வழங்காமல் நழுவிச் சென்றுள்ளார்.

இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களும்  ஊடகங்களுக்காவே பேச முடியும். மக்களி திருப்திப்படுத்த, பொய் வாக்குறுதியாகலிக்கொடுக்கவே இங்கு பேச முடியும். ஏனெனில்  இங்கு நாம் முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சபாநாயகரினாலோ அல்லது  சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினராலோ பதிலோ, தீர்வோ வழங்க முடியாது.  சபைக்கு அமைச்சர்களும் வருவதில்லை. எனவே தீர்வுகள் கிடைக்காது என்ற நம்பிக்கை நூறு வீதம் உள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் மன்னார் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே இதில் ஒரு உள்நோக்கம் உள்ளது. இந்த திருட்டுத்தனமான  பயணம் எதற்கு என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் உள்ளது. இதற்கான விடையை எங்கிருந்து எதிர்பார்ப்பது?

அதுபோன்றே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் இதுவரையில் அது திறக்கப்படவில்லை ஜனாதிபதியின் விஜயத்தின்போது அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.

ஆனால் அது தவிர்க்கப்பட்டு மத்திய நிலையம் திறக்கப்படவில்லை. ஏன் திறக்கப்படவில்லை? வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் இருக்கலாம். அவை என்ன? திறக்கப்படாததற்கான காரணம் என்ன? ஒரு கட்டிடத்தை தீர்ப்பதற்கான பிரச்சினையைக்கூட ஜனாதிபதியினால் தீர்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையென ஒட்டு மொத்த பிரச்சினையை எப்படித்  தீர்க்க முடியும்?

மன்னாருக்கு சென்ற ஜனாதிபதி ஒரு சிறு கிராம மீனவர்களை மட்டும் சந்தித்து விட்டு மீன்பிடி சங்கங்கள், சமாசம் போன்றவற்றை சந்திப்பதனை தவிர்த்தது ஏன்? வடக்கில் ஒரு விமான நிலையம்  இருந்தும் அதனை இயக்க முடியவில்லை. அதில் உள்ள தடைகளை இந்தியாவுடன் பேசி தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கையில் வவுனியாவில் ஒரு விமான நிலையம் அமைக்கபபோகின்றார்களாம், ஒன்றையே இயக்க முடியாதவர்கள் எப்படி இன்னொன்றை இயக்குவார்கள்?எனவே ஜனாதிபதியின் வன்னிக்கான விஜயத்தில் இது போன்ற பல சந்தேகங்கள் எமக்குண்டு என்றார்.

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்? – யதீந்திரா

சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்தியரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது. மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்பங்களில் கேட்டிருக்கின்றேன். இது சரியானதொரு பார்வைதானா -என்னும் கேள்வி இருந்துகொண்டேயிருந்தது.

2002இல், யாழ்வீரசிங்கம் மண்டபத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மானுடத்தின் தமிழ் கூடல் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் மு.திருநாவுக்கரசு (திருமாஸ்டர்) பேசுகின்றார்-நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று சிங்களவர்கள் மூடர்கள் அல்லர். அவர்களின் ராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது. மேற்குலகில் மாக்கியவல்லியையும் பிஸ்மார்க்கையும் படித்த ஜே.ஆர்ஜெவர்த்தன, கீழைத்தேயத்தின் கௌடில்யரையும் படித்தார். கௌடியல்யர் கூறுகின்றார்: உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், ஒரு எதிரியை நண்பணாகிக்கி, இன்னொரு எதிரியுடன் மோதவிடு, இறுதியில் உனது இரண்டு எதிரிகளும் இல்லாமல் போவார்கள். இதுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். ஒரு எதிரியான இந்தியாவை நண்பணாக்கி, இன்னொரு எதிரியான விடுதலைப் புலிகளுடன் மோதச் செய்தனர். சிங்களவர்களின் அபாரா ராஜதந்திர ஆற்றல் தொடர்பில் பார்வையாளார்களை, திரு திக்குமுக்காடச் செய்தார். அதே போன்று, வரலாற்றியலாளர் பேராசிரியர். இந்திரபாலா கூறிய ஒரு கருத்தையும் திருநாவுக்கரசு, நினைவுபடுத்தியிருந்தார். அதாவது, ஒரு குட்டித் தீவு, பிரமாண்டமான இந்தியாவிற்கு அருகில், இரண்டாயிரம் வருடங்கள் தனித்துவமாக தப்பிப்பிழைக்க முடிந்திருக்கின்றதென்றால், அது மூளையினால்தான் சாத்தியப்பட்டது. சிங்களவர்களின் அறிவாற்றல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் மேடையிலேயே திருநாவுக்கரசு புகழ்ந்து கொண்டிருந்தார். எனக்குள் எழுந்த கேள்வி, சரி, அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் ஏன் இவற்றை தமிழர்களால் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியாமல் போனது? நாங்கள் புத்திசாலிகளல்லவா!

சீன போரியல் நிபுனர் சன் சூ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறியது. நீ ஒவ்வொரு போரில் தோற்கின்ற போதும், எதிரி உன்னைவிட பலமானவனாக இருந்தனால்தான் நீ தோற்றுப் போனாய் என்று கூறாதே, நீ பலவீனமாக இருந்ததால் தோற்றுப் போனாய் என்று கூறு. ஆனால் நமது சூழலில் ஒரு பார்வைக் குறைபாடுண்டு. நாம் தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் மற்றவர்கள் மீதே விரல் நீட்டுகின்றோம். இந்தியாவின் மீது விரல் நீட்டுகின்றோம். அமெரிக்காவின் மீது விரல் நீட்டுகின்றோம். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உலகத்தின் மீதும் விரல் நீட்டுகின்றோம். இது எவ்வாறென்றால், பரிட்சையில் சித்தியடைந்தால், அது மாணவனின் கெட்டித்தனம், பரிட்சையில் தோல்விடைந்தால், அது ஆசிரியரின் பிரச்சினை. இந்த சிந்தனைப் போக்கே எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது.

2009இற்கு முன்னர் நம் அனைவரது விருப்பமும் விடுதலைப் புலிகள் வெற்றியடை வேண்டும் என்பதாகவே இருந்தது. 95 வீதமான தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். ஏதாவது அதிசயங்கள் நடந்தாவது அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பதே சாமானிய தமிழனின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இறுதியில் அனைத்தும் நிராசையானது. உண்மையில் அது வெறும் தோல்வியல்ல. நாம், நமது அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சிந்திப்பதற்கும் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம். ஆனால் அவ்வாறானதொரு தேடலை செய்ய நம்மால் முடியவில்லை. நமது தவறான அரசியல் புரிதல்களும், இயலாமைகளும் நம்மை தடுத்தது. இன்று யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போதும் கூட, சுலோகங்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் முன்வைக்கும் சுலோகங்களில் எவற்றையுமே எங்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை. இப்போதும் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றோம். சமஸ்டிதான் தேவையென்பதில் எவருக்கு முரண்பாடுண்டு? ஆனால் அதனை எவ்வாறு அடையப் போகின்றோம்? 1949இல், இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட போது, அதன் இலக்கு சமஸ்டியடிப்படையிலான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதுதான். ஆனால் அதனை அடைவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை செல்வநாயகம் புரிந்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, ஆகக்குறைந்தளவிலாவது, சில அரசியல் எற்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில், பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். ஆனால் தென்னிலங்கையின் சிங்கள இனவாத அரசியல் சூழல், அதனை உள்வாங்கிக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே செல்வநாயகம் தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நகர்ந்தார். ஆனால் அதனை எவ்வாறு அடைவதென்னும் வழிமுறை அவருக்கு தெரியாது. அது என்ன வழிமுறை? இந்தக் கேள்விக்கு பதிலாக வந்ததுதான், தமிழ் ஆயுத இயக்க அரசியலாகும்.

தமிழர் அரசியல் எப்போது, ஆயுதவழிமுறையை தழுவிக் கொண்டதோ, அப்போதே அன்னிய தரப்புக்களின் தலையீடுகளும் தமிழ் அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. ஆயுத பயிற்சிக்காக பலதரப்பட்ட அன்னியர்களை அணுகும் போக்கும் உருவாகியது. தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு முகவர்கள் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்தனர். இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் அதிகாரியான விக்டர் ஒட்ரோவ்ஸ்கி எழுதிய நூல், அந்தக் காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மொசாட் ஒரே நேரத்தில், சிறிலங்கா இராணுவத்திற்கும் பொதுவாக புலிகளென்று அறியப்படும் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பயற்சியளித்தமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தக் காலத்தில் புலிகளென்று அறியப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். அன்றைய உலக அரசியல் சூழலில், தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்குள், எவ்வாறெல்லாம் அன்னிய தரப்புக்கள் உள்நுழைந்தன என்பதற்கு, இதுவொரு சிறந்த உதாரணமாகும். எந்தவொரு அன்னிய தரப்பும் தங்களின் நலன்களை புறம்தள்ளி செயற்படாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தது. இதன் தொடர்சியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. தமிழர்களின் நண்பனாக வடக்கு கிழக்கில் கால்பதித்த இந்திய அமைதிப் படையினர், எதிரியாக நாட்டைவிட்டு வெளியேறும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இதன் பின்னரான மூன்றுதசாப்த கால விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னரான அரசியல் முற்றிலும் சம்பந்தனின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் காலத்தை சம்பந்தனால் சரியாக கையாள முடிந்ததா? மீண்டும் தோல்வி தொடர்பிலேயே விவாதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உருவாகியது. மகிந்த ராஜபக்ச காலத்தின் விடயங்கள் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. மகிந்த ராஜபக்ச முற்றிலும் வெற்றிப் பெருமிதத்தோடு மட்டும்தான் விடயங்களை அணுகியிருந்தார். எனவே மகிந்த ராஜபாக்சவின் காலத்தில் கூட்டமைப்பால் விடயங்களை நகர்த்த முடியவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஆனால் 2015இல் தமிழர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் அப்படியல்ல. அது சில சாதகமான வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. இந்தியாவின் உதவியோடு சில விடயங்களை முன்னெடுப்பதற்கான வாய்புக்கள் ஏற்பட்டது. ஆனால் சம்பந்தன் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாத்தியமற்ற புதிய அரசியல்யாப்பின் பெயரில் காலத்தை விரயம் செய்திருந்தார். அப்போது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் ஒரு விடயத்தை வலியுறுத்தியிருந்தனர். அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை பலப்படுத்த முயற்சியுங்கள். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கு இந்தியாவின் உதவியை கோராலாம். ஏனெனில், யுத்தம் முடிவுற்ற பின்னர், 2009இல், சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டி மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், 13வது திருத்தச்சட்டம் அதற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்ற உடனேயே ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் 13வது திருத்தச்சட்டம் வலியுறுத்தப்பட்டதிலிருந்து, விடயங்களை சம்பந்தன் தரப்பு புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனை கவனமாக பற்றிப்பிடித்திருக்க வேண்டும். இங்கு 13இல் என்ன இருக்கின்றது, என்ன இல்லை என்பதல்ல விடயம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, பற்றிப்பிடிப்பதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது மரக்கட்டையாக கூட இருக்கலாம். கரைசேர்வதே முதல் தேவையாகும். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதிய அரசியல் யாப்பென்னும் பெயரில், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சம்பந்தன் நாசமாக்கினார். நாங்கள், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் பயணித்துவிட்டோம். புதிய அரசியல்யாப்பை நெருங்கிவிட்டோம், என்றவாறு கதைகள் சொன்னார். இறுதியில் அனைத்தும் புஸ்வானமாகியது. மீண்டும் தமிழர் அரசியல் நகர்வுகள் தோல்விலேயே முடிந்தது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் தோல்வி பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கப் போகின்றோம். தோல்வி பற்றியே விமர்சித்துக் கொண்டிருப்பது? தோல்வி பற்றியே அங்கலாய்த்துக்கொண்டிருப்பது? நமது இயலாமைகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்திக்கொண்டிருப்பது? ஏன் நமது அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியடைந்து கொண்டேயிருக்கின்றது? ஒன்றில் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நல்ல தலைவர்களை தமிழ் சமூகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா, அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும், தமிழர்கள் அரயல்ரீதியில் மட்டுமல்ல, சமூக பொருளாதார நிலையில் மேலும் பின்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளை ஒரு சொல்லில் மதிப்பிடுவதனால், தீர்வும் இல்லை முன்னேற்றமும் இல்லை. சமூகரீதியான முன்னேற்றம் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. நாம் ஓய்வில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றோம். எழுதிக் கொண்டிருக்கின்றோம். விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஏன்? தமிழ் சமூகம் இதற்கான பதிலை கண்டடையாவிட்டால், தோல்விகள் மட்டுமே நமது கதையாக நீண்டுசெல்லும்.

 

– தினக்குரல் பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் யதீந்திராவால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை

ஓமானில் சிக்கியுள்ள மலையக பணிப் பெண்களை மீட்க இ.தொ.க கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிக்கி தவிக்கும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடியுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

இலங்கையிலிருந்து சுற்றுலா விசா மூலம் பணிப்பெண்களாக ஓமான் நாட்டுக்கு சென்று அங்கு தமது நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் தங்கியிருக்கும் மலையக உட்பட்ட ஏனைய பிரதேசங்களில் உள்ள பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இ.தொ.கா கலந்துரையாடியுள்ளது.

இதன்போது ஓமான் நாட்டில் விசா இன்றி தங்கியிருக்கும் பணிப்பெண்களிடம் நாளாந்தம் 05 திராம் அபராத தொகை அறவிடப்படுகிறது.

அதேநேரத்தில் இலங்கையிலிருந்து ஓமானுக்கு பணிப்பெண்களாக சேர்த்து கொள்வதற்கு செலவு செய்த அனைத்து செலவுகளையும் வழங்கிவிட்டு பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு அந்நாடு அறிவித்துள்ளது.

அதேவேளை இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதுடன், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு பணியகமும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் இணைந்து ஓமானில்  சிக்கியுள்ள மலையகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  இ.தொ.கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பணி பெண்களை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் இருந்து தூதுக்குழு ஒன்று ஓமான் நாட்டிற்கு சென்று அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இ.தொ.கா மேலும் தெரிவித்துள்ளது.

ரணிலை வடக்கு மக்கள் நம்ப தயாராக இல்லை – சஜித்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு வடக்கு மக்கள் தயார் இல்லை. எனது ஆட்சியின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“வடக்கு மக்கள் மீது ஜனாதிபதிக்கு உண்மையான கரிசனை இருந்தால் அவர் வவுனியாவில் வைத்து வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னர் நிறைவேற்றிக் காட்டட்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சவால் விடுத்தார்.

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும், 75ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை கடந்த சனிக்கிழமை வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு மாகாணத்துக்கு நான் விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லவுள்ளேன். வடக்கு மக்கள் படும் இன்னல்களை நான் நேரில் ஆராயவுள்ளேன். ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் அவர்களின் பிரச்சினைகளுக்கு நான் விரைந்து தீர்வு காண்பேன்.

வடக்கு மக்களுக்கு நான் என்றுமே நன்றியுடையனவாக இருக்கின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளை எனக்கு அவர்கள் வழங்கினார்கள்” – என்றார்.

 

செயற்கை உரம் இன்மையால் மந்த நிலையில் விவசாயம் : விவசாயிகள் கவலை

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம் மற்றும் களை நாசினிகள் உரிய அளவு வழங்கப்படாமையினால் பயிர்களின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

எங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம், களை நாசினி மற்றும் மண்ணெண்ணெய் என்பன சீராக வழங்காமையினால் எமது விவசாயத்தினை திருப்திகரமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை. செயற்கை உரங்கள் மற்றும் களை நாசினிகளின் விலைகள் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அளவு மேற்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

செயற்கை உரம் உரிய காலப்பகுதியிலும், உரிய அளவுத்திட்டத்திலும் கிடைக்கப்பெறாததால் பயிரின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. தற்போது அடை மழை பொழிகின்ற காலம். திடீரென அடைமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் மந்த நிலை வளர்ச்சியில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் அழிந்துவிடும்.

களை நாசினிகளின் விலை அதிகமாக காணப்படுவதுடன் அதற்கு தட்டுப்பாடும் நிலவுவதால் வயலில் வளர்ந்துள்ள களைகளை அழிக்க முடியவில்லை. களைகள் பயிருக்கு மேலாக வளர்ந்து காணப்படுவதால் பயிரின் வளர்ச்சியில் ஆரோக்கியம் குன்றியுள்ளது. மண்ணெண்ணெய் எமக்கு சீராக விநியோகிக்காததால் தண்ணீர் பாய்ச்சவேண்டிய வயல் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை காணப்படுகிறது.

விவசாயிகள் அனைத்து பக்கத்திலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்காமல் இருந்தால் அவர்கள் எப்படி விவசாயம் செய்வது? விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவித்தால் தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்ற அரிசியையோ அல்லதே வேறு உணவுப் பொருட்களையோ இறக்குமதி செய்யாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி விவசாயிகளது தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றனர்.

பொருளாதாரம் பாதுகாப்புடன் தங்கியிருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குவது சரியானது – மஹிந்த

இன்றைய (நவ 22) சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கையில்:

நாம் இந்த நாட்டை நாசம் செய்யவில்லை.நல்லாட்சி அரசில் இருந்து நாம் நாட்டை பொறுப்பேற்கும் போதே மிகப்பெரிய கடன் சுமை எமக்கு வழங்கப்பட்டது.அதன் பின்னர் கோவிட் உள்ளிட்ட நெருக்கடி ஏற்பட்டது.அதனையும் நாம் வெற்றி கொண்டோம்.

மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நாம் அரசியல் ஆக்கக்கூடாது.நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்புடன் தங்கியிருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குவது சரியானது.கடினமான நிலையில் நாம் மக்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்றி இருக்கின்றோம்.நான் கூறத் தேவையில்லை.காலம் செல்ல செல்ல மக்கள் அதை புரிந்து கொள்வார்கள்.

எம்மை எவ்வாறு கவிழ்ப்பது என்று ஜோசிக்கிறார்களே தவிர ,எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்திக்க வேண்டும்.சிலர் திட்டமிட்டு தான் பொருளாதாரத்தை விழச் செய்தார்கள்.இரண்டு தடவை இவ்வாறு நடைபெற்றுள்ளது.

கூச்சல் போடுவதாலும்,போராட்டம் செய்வதாலும் மக்களை காப்பாற்ற முடியாது.இந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் முழுமையான தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டாலும் ,நாட்டின் நிலைக்கு ஏற்ப சிறிய முன்னேற்றம் தரக் கூடிய பட்ஜெட்டாக அமைகிறது என்றார்.