உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் ஐ.நா தலையிட வேண்டும் – இலங்கை கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணைக்கான இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவளிக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஆணையாளர் நடா அல் நசீவை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐநாவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கர்தினாலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில்பெரேராவும் கலந்துகொண்டுள்ளார்.

நீதிக்கான எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் குறித்து ரணில்ராஜபக்ச அரசாங்கம் அலட்சியமாகயிருப்பதால் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் குற்றச்சாட்டினை தொடர்ந்து சர்வதேசரீதியில் கண்காணிக்கப்பட்ட முழுமையான விசாரணைக்கு கத்தோலிக்க திருச்சபை விடுத்த வேண்டுகோளிற்கு அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனக்கப்பல் மேலும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்க அனுமதி

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6″ மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சனிக்கிழமை பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது.

இந்தநிலையில், நாளை மறுதினம் வரை குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை இலங்கைவின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோருமெனவும், இதற்கமைய ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

ஆகவே, வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.” என்றார்.

மட்டக்களப்பு என்ன தனி நாடா? ஏன் அங்கு புத்தர் சிலை அமைக்க முடியாது – ஓமல்பே சோபித தேரர் கேள்வி

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுவது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஓமல்பே சோபித தேரர், அரசியலமைப்புக்கமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் பௌத்த மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் திபுல பெத்தான பகுதியில் வைக்கப்பட்ட புத்தரின் சிலை காணாமல் போயுள்ளதாகவும் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, ஓமல்பே சோபித தேரர் இதனை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரர் மட்டக்களப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புத்தரின் சிலையை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வேறு ஒரு நாடு அமைக்கப்பட்டுள்ளதா? கிழக்கில் கோவில்களை அமைக்கலாம். ஆலயங்கள் இருக்கலாம். முஸ்லிம் பள்ளிவாசல்கள் இருக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

நாடாளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் சமாதானத்துடன் தங்கள் மதச்சார்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். இதற்கு யாரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க ஏன் கிழக்கில், முக்கியமாக மட்டக்களப்பில் மாத்திரம் இவ்வாறான அசாதாரணமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கமைய மக்களுக்குள்ள மதச்சுதந்திரம் குறித்து ரணில் விக்ரமசிங்க தெளிவு படுத்த வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பான முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை உடன் நடாத்தி ஜனநாயக மரபைக் காக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

அதாவது 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அநேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக ஜனாபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்புமனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர்.

ஆனால், தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லி குறித்த தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் அதற்கான சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆகவே, மாகாண தேர்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும்படி தமிழர் தரப்பு கோரிய பொழுதும் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, வடக்கு-கிழக்கில் தான் விரும்பிய ஆளுநர்களை நியமித்து, தான்தோன்றித்தனமான முறையில் பௌத்த பிக்குகளும் இராணுவமும் பொலிஸாரும் கூட்டாக காணிகளைக் சுவிகரித்து, அத்தகைய இடங்களில் புதிது புதிதாக புத்த கோயில்களைக் கட்டுவதும் எங்கோ தூரப்பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களைக் கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதுமாக அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும் கூட, அதுவே இந்த அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது. அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மாகாணசபை அதிகாரத்தில் இல்லாத காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாகவும் ஏனைய வழிமுறைகளிலும் மாகாணத்திற்கு உரித்தான பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக்கொண்டது. இன்றும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனூடாக மாகாணசபை ஒரு அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழ வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன், பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம்.” என்றும் குறித்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத விகாரையின் பிரித் ஓதுதலுக்கு நாக தம்பிரான் கோவில் பக்திப்பாடல் இடையூறாம் – குழப்பம் விளைவித்த பொலிஸார்

தையிட்டி நாக தம்பிரான் கோயிலில் இன்று பூசைக்கான ஏற்பாடுகளில் பொலிஸார் குழப்பம்தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

இந்த ஒலியானது அருகிலுள்ள சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டவாளர் திரு. நடராஜர் காண்டீபன், சட்டவிரோத தையிட்டி விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏன்? விளக்கம் கோரியது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நேரில் சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்காகப் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரச பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாகத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடயம்சார் அறிவுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவரின் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளதால், கோரப்படும் ஆவணங்களுடன் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவினால் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தன்மை தொடர்பிலான அறிக்கையொன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னமொன்றை தாபிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய நடமுறைகள் தொடர்பிலான அறிக்கையொன்று, நினைவுத் தூபியை நிர்மாணித்ததற்குரியதான கொள்முதல் கோப்பு மற்றும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் நினைவுத் தூபியின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கையொன்று போன்ற விடயங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு வழிவகுப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டு முழுமைபெறாத நிலையில் இருந்த தூபி இடிக்கப்பட்டது.

தூபி இடிக்கப்பட்டதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனவரி 09 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அதனையடுத்து 11 ஆம் திகதி அதிகாலை மாணவர் பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது உரிய அனுமதிகள் பெறப்பட்டு தூபி அமைக்கப்படும் எனத் துணைவேந்தரால் உறுதியளிக்கப்பட்டது.

அதன் பின்னர், நிலைமை தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவையில் விளக்கமளிக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தூபி அமைப்பதற்காகப் பல்கலைக்கழக நிதி பயன்படுத்தப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தன்னார்வ நன்கொடையாளர்களிடமிருந்து அப்போதைய மாணவர் ஒன்றியத்தினர் சேகரித்த நிதியைப் பயன்படுத்தி தற்போதைய தூபி அமைக்கப்பட்டதுடன், தூபி கட்டப்பட்டதற்கான நிதி விபரங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கணக்கறிக்கையில் காட்டப்பட்டதுடன், கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கை பல்கலைக்கழக நலச் சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன் அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டது.

இதன்போது வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி சிவாநந்தன் ஜெனிற்றா செல்லத்துரை கமலா பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்

இனவாதத்தை பரப்பும் அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; கிழக்கு ஆளுநர் உறுதி

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார்.

அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படும் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்,

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு – திவுலபத்தனபகுதியில் யுத்தத்திற்கு முன்பாக வசித்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அங்கு படிப்படியாக குடியமர ஆரம்பித்துள்ளனர்.

அம்மக்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் என இரு குழுக்களாக இருப்பதால் அப்பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

மயிலத்தமடு பகுதியில் மீளக் குடியமரும்போது, பொலன்னறுவை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலரை மேலதிகமாக அழைத்து வந்துள்ளமையினால், அவர்களின் விவசாயச் செயற்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருப்போருக்கு தற்காலிக ஊக்குவிப்பு தொகையொன்றை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை பகுதிகளிலிருந்து வந்தவர்களை அம்மாவட்டங்களிலேயே விரைவில் குடிமயர்த்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

அதேபோல், மயிலத்தமடு – திவுலபத்தன பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் வசித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியது கட்டாயமானது என ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கும் நிலையில், மகாவலி அமைச்சு அப்பணியை சட்டரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அதேநேரம் அனுமதியின்றி அரச காணிகளில் வசிப்பவர்களின் காணிகளைக் கையகப்படுத்தி, அவர்களை அக்காணிகளில் சட்டரீதியாக குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அரச காணிகளில் அனுமதியின்றி வசிப்பவர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்து தமது இருப்பை சட்டரீதியாக்கிக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் மகாவலி வேலைத்திட்டத்திற்காக கிழக்கின் கோரளைப்பற்று பகுதியிலிருந்து தமிழர்களும், நாவலடி பகுதியிலிருந்து முஸ்லிம்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் இந்த பணிகள் இன, மத அடிப்படையில் அல்லாது சட்டரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிராம சேவகர்களிடத்திலிருக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டே காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக சிங்கள மக்களின் குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்து அகற்றப்படுகின்றது என்ற வகையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகளும் பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் மேற்படி முன்னெடுப்புகளின் போது சகல இனத்தவர்களுக்கும் இலங்கையர் என்ற வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, அதுகுறித்து அநாவசியமாக கருத்துக்களை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பினர் முற்படக் கூடாது. என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.