நாட்டை விட்டு வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு தடவைகள் துபாய், மியான்மர் போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களுக்காக சென்றிருந்தார். இம்முறை எகிப்து செல்கிறார்.

தனது எகிப்து பயணத்தின் போது பெரும் அனுபவமாக கருதப்படும் நைல் நதியை ஒட்டிய ‘நைல் குரூஸ்’ பயணத்தில் கோட்டாபயவம் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைப்பு

யாழ். மாவட்ட தேர்தல்கள் அலுவலக திறப்பு விழா இன்று(03) இடம்பெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முக்கிய வீடியோவை வௌியிடப்போகும் Channel 4

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை நாளை ஒளிபரப்ப பிரித்தானியாவின் channel 4 ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘த டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Channel 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், “இலங்கையின் கொலைக்களம்” (Sri Lanka’s Killing Fields) என்ற சர்ச்சைக்குரிய வீடியோவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கலை Channel 4 தொடர்ச்சியாக ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் Channel 4.

தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ஒருவரே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதிகார மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்படும் நபர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை – ஜனா எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கப் போகும் விமுக்தி குமாரதுங்க?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விமுக்தி குமாரதுங்கவை வெளிநாடு ஒன்றில் சந்தித்து இது தொடர்பாக அறிவித்துள்ளார்
எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

எது எப்படி இருந்தபோதிலும் விமுக்தி குமாரதுங்க இந்த விடயம் தொடர்பில் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த காலங்களில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் பிரிட்டனில் கால்நடை மருத்துவராக சேவையாற்றி வரும் விமுக்தி குமாரதுங்கவுக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது எனக் கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் விமுக்தியை அரசியலில் களம் இறக்கும் நோக்கமில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனை துதிபாடுவோரை உடன் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – இவ்வாறு சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்து – சொத்துக்களை நாசப்படுத்தி – மூவின மக்களையும் பிளவுபடுத்திய ஒரு அமைப்பின் தலைவரைத்தான் வடக்கு – கிழக்கில் உள்ள ஒரு தரப்பினரும், புலம்பெயர் தமிழ் மக்களும் தேசியத் தலைவராகப் புகழ்ந்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்குப் பிச்சை கேட்கப் பிரபாகரனைப் பகிரங்கமாகத் துதிபாடி வருவது வழமை.

இந்நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் அல்லது பிரதமராக வர வேண்டும் என்ற கனவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது பிரபாகரனைத் துதிபாடியுள்ளார்.

பிரபாகரன் உருவாகப் பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது சிங்கள மக்களோ காரணம் அல்லர் என்பதை மைத்திரிபால புரிந்துகொள்ள வேண்டும்.

பிரபாகரனிடம் இருந்த பயங்கரவாதக் குணத்தாலும், அவரிடம் இருந்த இனவெறியாலுமே அவர் அரச படைகளுக்கு எதிராக – சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கினார். நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யவிட்ட அவர், இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது படையினரின் தாக்குதலில் மரணத்தைத் தழுவினார்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இனிமேல் யாரும் துதிபாடினால் அவர்களை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – என்றனர்.

ஜப்பானிய பிரதமர் அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் நடைபெற்ற ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், ஜனாதிபதி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்கவே ஜனாதிபதியும் அரசாங்கமும் விரும்புகின்றனர் – பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடொன்று நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உரித்துரிமை பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் அமுலில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன். ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.