ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மீட்டெடுக்க உதவி

ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான ‘வேல்ட் விஷன்’ உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக – பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் ‘கிரேஸ்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘கீழ்மட்ட மோதல் தடுப்பு’ செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சமூக – பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய விரிவான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ‘கிரேஸ்’ செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 130,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி, ‘இலங்கை பாரிய நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதுடன், இது இலங்கையர்கள் பலரை மிகமோசமாகப் பாதித்துள்ளது. எனவே வெகுவாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணும் நோக்கிலேயே நாம் ‘வேல்ட் விஷன்’ அமைப்புடன் இணைந்து பணியாற்றிவருகின்றோம். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரில் பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை விரைவில் பொருளாதார மீட்சியை எட்டும். – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது திறைசேரியின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற இம்முயற்சியினை பாராட்டிய பிரதி உயர் ஸ்தானிகர்,

இவ்வாறான அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கமைக்கவேண்டுமென்ற முன்மொழிவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த விவகாரங்களில் இலங்கை மக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவினை வழங்கியதாக தெரிவித்த அவர்,

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களை திறைசேரி பாதுகாக்காது

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் ஆயிரத்து 29 மில்லியன் ரூபாய் எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 மில்லியன் ரூபாயே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை ஏற்றி நிறுவனங்களை நடத்தாது, ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் – பிரித்தானியா

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் என்ன விடயங்களை முன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பேரவையில், 51-1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளை ஐக்கிய இராச்சியம் வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் இலங்கையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட வலியுறுத்தல்களை பிரித்தானியா வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கெளதாரி முனையில் தனியார் நிறுவனத்துக்காக நில அளவீடு : மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை பகுதியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு மேற்கொள்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரி முனை கிராம அலுவலர் பிரிவில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு 98 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் இன்றைய தினம் (04-04-2023) நில அளவீடு செய்ய முற்பட்டபோது நில அளவீட்டுப் பணிகள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளின்மை 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த காணிகள் இன்றி வாழுதல் என பல்வேறு காணித் தேவைகள் உள்ள போதும் இருக்கின்ற போதும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் உள்ளடங்களாக 98 ஏக்கர் காணியை தனியார் தனியாருக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் குறித்த அளவீட்டுப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காணித்தேவைகள் உள்ள நிலையில் தமது பகுதியில் உள்ள காணிகளை வழங்க முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று காலை நில அளவீட்டினை மேற்கொள்வதற்காக நில அளவீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நில அளவீடு செய்வதற்கு சென்றபோது பொதுமக்களால் குறித்த நில அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

வடக்கு,கிழக்கில் பெளத்த சின்னங்களை அழித்தே இந்து கோயில்கள் கட்டப்பட்டுள்ளன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டே இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு,நாம் பொறுமையுடன் செயற்படுகிறோம் எனத்தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்,ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று இல்லை எனவும் அடித்துக்கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி.இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வடுகங்கல பகுதியில் உள்ள சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

வடுங்கல பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர ஏனைய தரப்பினருக்கு அல்ல,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் தான் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் குருந்தூர் மலையில் பழமை வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,பௌத்த வழிபாடுகளுக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தடையேற்படுத்தியுள்ளார்கள்.

தேரவாத பௌத்த கொள்கையை பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கை உள்ளது.ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இனவாத முரண்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள். நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்,ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று இல்லை. பிரதான நிலை வர்த்தகத்தில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் வாடிக்கையாளர்களாக சிங்களவர்கள் உள்ளார்கள், இனப்பிரச்சினை என்பதொன்று இருக்குமாயின் இந்த நிலை காணப்படாது.ஆகவே இல்லாத இனப்பிரச்சினையை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள்.

பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, பொறுமையுடன் செயற்படுகிறோம்,கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சிங்கள மரபுரிமைகள் அழிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச மட்டத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.தமிழ் இனப் படுகொலைக்கு சிங்களவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கனடாவில் அண்மையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இது முற்றிலும் தவறானது

தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலை புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.இலங்கையில் எவ்வித இனபடுகொலையும் இடம்பெறவில்லை என்பதை சர்வதேச நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றார்.

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையான தனுஷ்கோடிக்கும் இடையிலான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதன்மூலம் ஏற்படும் சாதகத் தன்மை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு 3 கோடி பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை ராமர் பாலம் ஊடாக அழைத்து வந்தால் அதன்மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்துள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

 

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புதுவருடத்தின் பின்னரே தீர்வு

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்றத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்மையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என்றார்.

வட மாகாண சுற்றுலா துறை நிறுவனங்கள் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும்நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்வதன் ஊடாக அவற்றை ஒழுங்குபடுத்தலை நோக்காக கொண்டு இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களுள் பதிவுசெய்த நிறுவனங்கள், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் முறைப்படியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .

மேலும் இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனால் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அதிகமான சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் இவ் விழிப்புணர்வு கலந்துரையாடல் மூலம் அதிகமாக சுற்றுலாத்துறைச்சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக உதவிப் பணிப்பாளர் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.