இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது – சிவசக்தி ஆனந்தன்

இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது” என வன்னியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்மநாபாவின் 33 ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யுத்தம் முடிவடைந்து  14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதும் ,  போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கமுடியாத நிலையிலேயே  உள்ளன.

இதன்காரணமாக  ஒரு சில கட்சிகளைத் தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலையே  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள நிலையில் அவரது சந்திப்புக்கு  முன்னரே ”இலங்கை ஜனாதிபதி தமிழர் பிரச்சனையைத்  தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டும்” எனக் கோரி   தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமரும்  இச்சந்திப்பின் போது  ” மாகாணசபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்குதல் , போரினால்  ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று இவ்வருடம் இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களில் ஒன்று இந்த வருடம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக ஜனநாயக தினமான செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அடக்குமுறையின் கீழ் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு இலங்கைக்கே உண்டு – ஜனா எம்.பி

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலையுருவாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறையின் கீழ் 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்ட வரலாறு இந்த நாட்டுக்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஊடக ஒடுக்குமுறை சட்டத்தினை ஊடகங்கள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளிவராமல் தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொண்டுவருகின்றது.

இந்த அரசாங்கம் நூறு வருடத்திற்கு இந்த நாட்டினை ஆளப்போவதில்லை என்பதை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இன்னுமொரு கட்சி அடுத்ததேர்தலில்வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்போது தற்போது உள்ள அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களை இதே சட்டத்தினைக்கொண்டு அடக்குவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றது.

தாங்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கமுடியாது என்பதை நினைவில்கொண்டு அவர்கள் செயற்படவேண்டும்.

மக்கள் தீர்ப்பு என்பதை அரசியல்ரீதியாக நாங்கள் அனைவரும் அறிந்த விடயம். 2019ஆம் ஆண்டு 69இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியான கோத்தபாய, அதே மக்களினால் இருப்பதற்கு இடமில்லாமல் துரத்தியடிக்கப்பட்டார். அந்த நிலைமை இன்னுமொருவருக்கு வராது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலையுருவாகும். ஏற்கனவேயிருந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டும்.

ஊடகம் என்பது இந்த நாட்டில் உள்ள செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு சாதனம் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.- என்றார்.

ஆங்கிலத்தை தேசிய மொழியாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை – ஜனாதிபதி

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரிகளை உருவாக்கும் திட்டத்தின் ஸ்தாபகரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான 1729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன. அதனையடுத்து ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக இன்றைய தினத்தில் 7342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்குள் 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக் காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என்றார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்டாமல் இருக்க வேண்டும் எனில் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அதற்கு ஏற்றவாறு கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கொவிட் பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 வருடங்கள் மேலதிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருந்திருந்தீர்கள். உங்களுக்கு கற்பித்த பீடாதிபதிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

1985 களில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களாகின்றன. இந்த 38 வருடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை. சிறிதளவு கனிணிகள் மாத்திரமே இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மாத்திரமே தயாரிக்கப்பட்டன. இன்று அந்த நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அந்த உற்பத்திகள் சீனா அல்லது இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன. அந்த இரு நாடுகளிலுமே கனிணி உற்பத்தி துறைசார் நிபுணத்துவம் காணப்படுகின்றன. அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு அறிவியலும் இணைந்துள்ளது.

இன்று நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது. அதனால் 21 ஆவது நூற்றாண்டிற்கு அவசியமான கல்வி முறைமையை கட்டமைப்பதற்காக அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும்.

இது பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாம் மீண்டெழும் நேரமாகும். இந்நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்பட்டால் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியால் வருமானம் ஈட்ட வேண்டும். நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றினையும் உருவாக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அதேநேரம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவூட்டக்கூடிய வகையிலான கல்வி முறையொன்றினையும் தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள முதன்மை வளமாக மனித வளமே காணப்படுகின்றது. அந்த வளத்தை ஆசிரியர்களே பலப்படுத்துகின்றனர். அதனால் ஆசிரிய வளத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும்.

கல்விக்கான தனியானதொரு அமைச்சர்கள் குழுவை நாம் நியமித்துள்ளோம். கல்வித் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவோம். தற்போது அது தொடர்பிலான அறிக்கையொன்றை தேசிய கல்விக்குழு எம்மிடத்தில் கையளித்துள்ளது. அதற்கு மேலதிகமாக பிரமரின் செயலாளர் தலைமையில் கல்வி நவீனமயபடுத்தல் தொடர்பிலான குழுவொன்று ஒவ்வொரு துறைசார் குழுக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிக்கைகளும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாக எனக்கு கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். அதனூடாக 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானதும் 2050ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதுமான கல்விக் கொள்கையொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

தரம் 8 இல் பரீட்சையில் சித்தி பெற்றமை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த அனுமதிக்க கூடாது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அதனை நாம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் அதற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வியையும் கட்டமைக்க வேண்டும்.

அதேபோல் சங்கீதம்,கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது தெரிவுகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஸ்கெண்டினேவிய நாடுகளில் அவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன. அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு நாமும் செல்ல வேண்டும். உயர்தர பாடங்கள் மாத்திரமின்றி வாழ்க்கைக்கு அவசியமான கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதனூடாக கிட்டும்.

13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் அமெரிக்காவே அதற்கு உதாரணமாகும். அங்கு சாதாரண தர பரீட்சையும் இல்லை உயர்தர பரீட்சையும் இல்லை. நம்மால் அதனை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. இருப்பினும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதனை மாற்று முறையில் நடத்துவதா அல்லது சித்தி பெறல், சித்தி பெறாமையை அடிப்படையாக கொண்டு நடத்துவதா என தீர்மானிக்க வேண்டும்.

13 வருட கல்வியை பெற்றுக்கொடுக்கின்ற போது அதற்கு உகந்த வகையில் பரீட்சைகளை நடத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளது. தற்போது பரீட்சை தினங்கள் மாறுகின்றன ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ஒவ்வொரு திகதியில் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் டிசம்பர் மாதத்தில் பரீட்சை இடம்பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்துக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த வேண்டிய பொறுப்பு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஏற்படும்.

பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு 21 வயது. குறைந்தபட்சம் 23 வயதிலாவது பல்கலைக்கழங்களிலிருந்து வெளியேற வேண்டியது அவசியமாகும். அதேபோல் இன்று பல புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. ஆங்கில கல்வி மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ஆங்கில மொழி தெரியவில்லை என்ற நிலைமை எவருக்கும் ஏற்படக்கூடாது.

19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் சிங்கள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். வண. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்ல நாயக்க தேரர், ஈ.ஆர்.சரத்சந்திர,மார்ட்டின் விக்ரமசிங்க ஆகியோர் அனைவரும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆவர்.

அதனால் அனைவருக்கும் ஆங்கில கல்வியை வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக முதலில் ஆங்கில ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். அடுத்த 05 வருடங்களுக்குள் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஆங்கில மொழியை தேசிய மொழியாக நடைமுறைப்படுத்த முடியும். ஆங்கிலம் அரசகரும மொழியாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆவணங்கள் இன்னும் ஆங்கில மொழியிலேயே பேணப்படுகின்றன. நாம் ஒரு இடத்தில் முடங்கிக் கிடக்காது சீன மொழி,ஜப்பானிய மொழி, ஹிந்தி, அரபு போன்ற மொழிகளையும் கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல் எமது பல்கலைக்கழக கட்டமைப்பினையும் நவீனமயப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் காலத்தை 3 வருடங்களா அல்லது 4 வருடகங்களா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதேபோல் அரச பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

தற்போது, ஆண்டுக்கு சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். மேலும் ஒரு குழுவினர் வெளிநாடு செல்கிறனர். இன்னும் சிலர் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளனர். எனவே, அரச பல்கலைக்கழகங்கள், தேசிய பல்கலைக்கழகங்களைப் போன்று அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் நாம் வாய்ப்புகளை வழங்குகிறோம்.

அவ்வாறு, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்படவேண்டுமாயின், அந்த நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலகு வட்டி அல்லது வட்டியில்லா கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் தான் ஒரு மாணவர் கற்க வேண்டிய பாடத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது. ஏனைய எல்லா நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அந்த முறையை நாம் உருவாக்க வேண்டும்.

இன்னும் 15-20 வருடங்களில் வகுப்பறை எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற முடியாது. தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்துடன் நாம் எவ்வாறு முன்னேற முடியும் என்று பார்க்க வேண்டும். Chat GPT காரணமாக எதிர்காலத்தில், கற்பித்தல் முறைகளும் முற்றிலும் வேறுபடும். நாம் பெரும் மாற்றத்தின் சகாப்தத்தில் இருக்கிறோம். எனவே அந்த தொழில்நுட்பத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,

“இன்று முதல், நீங்கள் பெற்ற கல்விப் பயிற்சி மற்றும் அறிவை நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், புதிய அறிவுடன் புதிய தலைமுறையை உருவாக்குவதற்கும் பங்களிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு உள்ளது. நமது கல்விக்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ற இரண்டும் அவசியமான காலகட்டம் இது. அந்தப் பணிகளைச் செய்வதில் அறிவு ஒரு சிறப்புச் செல்வமாக மாறியுள்ளது.

ஒருவர் பெற்ற அறிவு என்ற செல்வத்தை எந்தப் பௌதீகக் காரணிகளாலும் அழிக்க முடியாது. பல்வேறு பாடங்கள் தொடர்பில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான பயிற்சியை, எங்கள் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதன் மூலம் வலுவான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி கல்வி அமைச்சராக இருந்த போது, கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பித்து விசேட பயிற்சியின் மூலம் ஆசிரியர் தலைமுறையை அறிவுத்திறன் படைத்தவர்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தார். இன்று நீங்கள் அந்தப் பயணத்தில் வெகுதூரம் வந்திருக்கின்றீர்கள். நீங்கள் எமது நாட்டு மாணவர்களுக்கு வழங்கும் அறிவு எதிர்காலத்தில் இலங்கையின் வலிமையான பிரஜைகளை உருவாக்கும்.

இன்று எவ்வாறான பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி, கல்வித்துறைக்கு பெரும் சக்தியை வழங்கியுள்ளார். நீங்கள் பாடசாலைகள் மூலம் வலிமையான, அறிவுள்ள குழந்தைகளை சமுதாயத்திற்கு வழங்குவதற்குப் பணிபுரியுங்கள். தரமான கல்வித் துறையில் நாம் எதிர்பார்க்கும் இலக்குகளை நோக்கிச் செல்ல நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த்,

“கௌரவ ஜனாதிபதி கல்வி அமைச்சராக, 1985 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகச் சட்டம் மற்றும் 1986 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகள் சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு தான் மூன்று வருட பயிற்சிக்குப் பின்னர் கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களை நமது பாடசாலைக் கட்டமைப்பில் பணிக்கு அமர்த்தும் வாய்ப்புக் கிடைத்தது.

தற்போது, நம் நாட்டில் உள்ள பத்தாயிரத்து நூற்று முப்பத்தைந்து 10135 அரச பாடசாலைகளில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 41 இலட்சம் மாணவர்கள் அரச பாடசாலைகளில் படிக்கின்றனர். சுமார் 150,000 பேர் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.

பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு வழங்குவதற்காகத் தான் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 19 கல்வியியற் கல்லூரிகளில் நடத்தப்படும் மூன்று வருட கற்கைநெறிகளை 04 வருட கற்கைநெறிகளாக மாற்றி டிப்ளோமாதாரிகளுக்குப் பதிலாக பட்டதாரிகளை உருவாக்கும் முன்மொழிவுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது டிப்ளோமாதாரிகளாக வெளியேறியவர்கள் தேசிய கல்வி நிறுவகம் போன்ற நிறுவனங்கள் மூலம் பட்டப்படிப்பு வரையிலான தமது தகைமைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி பட்டப்பின் படிப்பு வரை தேவையான வசதிகளை செய்து கொடுக்க திட்டங்களைத் தயாரித்துள்ளோம்” என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

அமைச்சர்களான விஜயதாச ராஜபக்‌ஷ ,பிரசன்ன ரணதுங்க, விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பியல் நிஷாந்த, சுரேன் ராகவன், அரவிந்த குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க, மேல்மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரண்டு ரஷ்ய அணு உலைகளை அமைக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்துள்ளார்.

தேசிய மின்சார தேவையை ஈடுச்செய்ய கூடிய திட்டங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடுகளுடன் ஆராய்ந்து வந்தது. இந்தியாவுடன் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் மற்றுமொரு திட்டமாகவே ரஷ்யாவுடன் அணுமின் திட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் தீவு நாடான இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தில் செயல்படுகிறது.

இந்த திட்டத்தை துரிதப்படுத்தி கட்டுமானத்தை தொடங்கும் என்று இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவு உள்ளது. மேலும் சர்வதேச அணுசக்தி முகாமை குறித்து ரஷ்ய நிறுவனம் ஆராய்வதுடன் நான்கு பணிக்குழுக்களை அமைத்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும் என்று பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை தெரிவித்திருந்தது. அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடட்டதற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032ஆம் ஆண்டில் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.

இலங்கை அணுசத்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கை இறுதி முடிவு எடுக்கவில்லை – காஞ்சன விஜயசேகர

இலங்கையில் ரஷ்யா அணுமின் உலையொன்றை உருவாக்குவதற்கு அனுமதிப்பதா, இல்லை என்பது குறித்து இலங்கை இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் மிகப் பெரிய அணுமின் நிலைய நிறுவனமான ரொசாட்டோம் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 500 மெகா வட் வலுச்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்க முடியும். இதனால், அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு இன்று சனிக்கிழமை (17) கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அமைச்சர்களான பந்துல குணவர்தன, சுசில் பிரேம ஜயந்த, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

கொழும்பு – காங்கேசன் துறை ரயில் சேவை அடுத்த மாதம் மீள ஆரம்பம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெளத்த ஆலயங்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன – விலங்கு நல அமைப்பு கவலை

இலங்கையின் அளுத்கம கந்தே விகாரை முத்துராஜவை ( யானை) தீவிரபௌத்தனாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்தளவிற்கு முயற்சி செய்தது என தெரிவித்துள்ள ரார்ஸ்ரீலங்கா அமைப்பு இதன் விளைவாக கால்முறிந்தது அதன் கால்பாதங்கள் பாதிக்கப்பட்டன காயங்கள் ஏற்பட்டன நூற்றுக்கணக்கான தாக்கப்பட்ட காயங்கள் – சங்கிலிகள் போன்றவற்றால் ஏற்பட்டவை காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இது ஒரு சம்பவமே எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற 90க்கும் மேற்பட்ட யானைகள் பௌத்தஆலயங்களில் துன்பத்தில் சிக்குண்டுள்ளன,இந்த ஆலயங்களின் செல்வந்த அதிகாரம் மிக்க முதலாளிகள் அவற்றை திருவிழாக்களின்போது ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முத்துராஜ என அழைக்கப்படும் சக்சுக்ரின் தனது கூட்டில் காணப்படுகின்றார் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் தனது பௌத்த இராஜதந்திரியை தாய்லாந்து மீளப்பெறுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகளை பௌத்த ஆலய உற்சவங்களின் போது ஊர்வலமாக அழைத்துச்செல்வதை நிறுத்தவதற்கு இது ஒரு சிறந்த காரணம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு தாய்லாந்து மக்களின் அழுத்தம் காரணமாகவே சக்சுக்ரின் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டது ஆனால் ஏனைய ஐந்து யானைகளின் நிலைமை என்ன குறிப்பாக மியன்மாரை சேர்ந்த ஐந்து யானைகளின் நிலைமை என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சித்தமைக்காக இந்திய புலனாய்வு அமைப்பு 13 பேர் மீது குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது.

இலங்கை இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதம் பணம் போதைப்பொருள் ஆயுதங்களை சேகரித்தல் பதுக்கிவைத்தல்போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என  இந்தியாவின் என்ஐஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜாவும் பாக்கிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்துசெயற்பட்டனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான சதிமுயற்சிகள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன அவர்கள் கடந்தவருடம் திருச்சி விசேட முகாமில் கைதுசெய்யப்பட்டனர்  குற்றச்செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்கூட்டியே செயற்படுத்தப்பட்ட சிம்கார்ட்டுகளுடன் பல கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன பெருமளவு பணமும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டன என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமே பணமும் தங்கமும் கிடைத்துள்ளது இந்த பணத்தை இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறியுள்ளனர் எனவும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.