இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (18) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆம் திகதி ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கோருகின்றோம். எங்களுடைய மக்கள்  போராட்டத்தின் ஊடாக முன்னுக்கு வந்தவர்கள். போராட்டத்தின் குணாதிசயங்களை கொண்டவர்கள். இருந்தாலும் நீதித்துறை, நில அபகரிப்பு, புத்த கோவில்களுடைய ஆக்கிரமிப்பு  என்பன வடக்கு – கிழக்கில் மிக மோசமாக நடந்து வருகின்றது. எங்களது மக்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் நிலங்களை அபகரிப்பதன் ஊடாக எங்களுடைய மக்களின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எமது மக்கள் போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் ஆகையால் இதற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றோம். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கின்றது. அன்றாடம் உழைக்கின்ற மக்கள் தமது அன்றைய தேவைக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது புதிதாக அடாவடித் தனமான, ஜனநாயக விரோதமான செயற்பாடு நடக்கிறது. இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வலர்த்தக நிலையங்களை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், மரக்கறி வியாபாரம் செய்வோர் என அவர்களை மிரட்டி அவர்களை கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள். அதற்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள். அரசாங்கம் கூடுதலான திணைக்களங்கள் மற்றும் பிக்குகளை வைத்து எமது மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மன்னாரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல முயற்சித்த தொழிற்பயிற்சி உபகரணங்கள் ரெலோ தலைவர் செல்வம் எம்.பியால் தடுத்து நிறுத்தம்

மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்கள் குறித்த தொழிற்பயிற்சி கூடத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியால் வியாழக்கிழமை வியாழக்கிழமை (12) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

மன்னார் மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இளையோர்களின் தொழிற்பயிற்சிக்கு என பல லட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் வருகை குறித்த நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் அவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அஹம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வியாழக்கிழமை (12) வாகனமும் வந்தது.

அப்பகுதி இளைஞர் யுவதிகள் மூலம் சம்பவத்தை கேள்விப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் குறித்த தொழிற்பயிற்சியை மன்னார் மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு – செல்வம் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிப் பகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதென்பது என்னைப்பொறுத்தமட்டிலே சாலச்சிறந்ததாக இருக்காது.

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற சூழல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது. இவ்வாறு குறிவைக்கப்படுகின்ற சூழலிலே நாங்கள் இந்த விடயத்தினை செய்வோமாக இருந்தால் நாடாளுமன்றத்திலே கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அற்று போவதாக இருக்கும்.

சர்வதேசத்திடம் உரிமையோடு கேட்கும் விடயங்கள் அனைத்தும் கேட்க முடியாத சூழல் உருவாகும். பகிஷ்கரிக்கின்ற விடயத்திலே மீள் பரிசீலனை செய்யலாம். ஆனால் நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற சூழலிலே தட்டிக்கேட்கின்ற , நிறுத்துகின்ற வழிகளை கையாளுகின்ற ஒரு சூழல் சாத்தியமற்றது என்பது என்னுடைய கருத்து” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆயுதப் போராட்டத்தை ஏன் கைவிட்டோம் என வருந்துகின்றோம்; ஜனா எம்.பியின் மணிவிழாவில் செல்வம் எம்.பி தெரிவிப்பு

ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று(02) இடம்பெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எங்கு பாத்தாலும் புத்த பிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், முப்படைகள் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனையெல்லாம் பார்க்கும் போது ஏன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டோம் என வருத்தமாக உள்ளது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணமும் தோன்றுகின்றது எனவும் தெரிவித்தார்.

நீதி அமைச்சர், சட்டமா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் செல்வம் எம்.பி. வலியுறுத்து

‘‘தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்லுகின்ற நிலையில் இருக்கக்கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகக் தெரிகின்றது.” – இவ்வாறு ரெலோவின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘‘உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவரின் கருத்துக்களைப் பார்க்கின்றபோது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கின்றது?

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தமிழ்ப் பிரதேசத்தில் இருந்தவர். நியாயமான தீர்ப்பை அவர் வழங்கியதால் தென்னிலங்கையிலே அவர் ஓர் இனவாதியாகவும், ஒரு தமிழராகவும் பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித் தான் இன்றைக்கு நீதிமன்றத்துக்குச் செல்கின்றார்கள்.

ஆனால், இப்போது இருக்கின்ற நிலையைப் பார்க்கும்போது தமிழ் நீதிபதிகள் நியாயமாகச் செயற்படுகின்ற வாய்ப்பைத் தடுக்கின்ற – அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமா செய்தி இதனை உணர்த்துகின்றது.

ஆகவே, தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்கின்ற நிலையில் இருக்கக் கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே, நீதித் துறைக்கு விட்ட சவாலாக இது அமைந்துள்ளது.

நீதி அமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும். முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமாவில் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் அமைச்சராக இருக்கும்போது நீதிக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதை நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள இருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும்.

ஏனென்றால் நீதி நடுநிலையானது. அது யாருக்கும் தலைசாய்வதில்லை. அந்தவகையில் எங்களுடைய நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரின் குருந்தூர்மலை தீர்ப்பு அவருக்குப் பல அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளது. இதில் புத்த பிக்குகளின் கூட்டமும் அடங்குகின்றது என எண்ணுகின்றேன். இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் புத்த பிக்குகளா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் அனைத்து நீதிபதிகளையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களுக்கும், எங்களுடைய மக்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட வேண்டுமென்றால் நீதித்துறைக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளவர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

சட்டமா அதிபரின் அழுத்தம் உள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரும் இராஜிநாமா செய்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். நாங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடுநிலைமைக்குக் கொண்டு வர முடியும். முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்கின்ற அளவுக்கு மிக மோசமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நீதி அமைச்சரும், சட்டமா அதிபரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

தமிழர் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ! நாடாளுமன்றில் தனித்து இயங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு சார்பில் நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்றும் இது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது எனவும் முடிவு எட்டப்பட்டது. அத்துடன், இந்த உத்தியை கொண்டு சிங்கள தரப்புகளிடம் பேச்சு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி விலகிய போதிலும் அந்தக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பியே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கொரடவாக உள்ளார். இதனால், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் தமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் தனித்து செயல்படவும் அந்தக் கட்சியின் எம். பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் மீண்டும் பேசி இந்திய தூதுவரை சந்தித்து இது தொடர்பில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

மனித புதைகுழிகளை மறைப்பதற்காகவே அவ்விடங்களில் விகாரைகள்? ரெலோ தலைவர் செல்வம் எம்.பி சந்தேகம்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொக்குதொடுவாயில் மனித புதைக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது எனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர்மலை தமிழரின் காணிகள் விடுவிக்கப்பட உடனடி வாய்ப்பில்லை – செல்வம் அடைக்கலநாதன் எம். பி.

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர்மலை பிரதேசத்திலே வனவளத் திணைக்களம், தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை அவதானித்தோம்.

இதன் அடிப்படையில், உடனடியாக இந்த நிலங்கள் விடுவிக்கப்படும் சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கின்ற உயர் அதிகாரிகள் இந்த விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.

நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபட கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்து கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். என்னைப் பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா என்று சந்தேகம் இருக்கிறது – என்றார்.

இடைக்கால ஏற்பாடாக 13ஐ செயல்படுத்த கோரும் உங்கள் நகர்வே சரியானது – தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

“நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அரசமைப்பு இப்போதைக்கு வரும் சாத்தியமில்லாத நிலையில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்களது நகர்வு சரியானது” – இவ்வாறு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்.

கொக்குவிலில் விருந்தினர் விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க தூதுவர் வடக்கை மையப்படுத்திய அரசியல் விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்றும், ஜனாதிபதி தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அவர் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தார் எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் கேட்டறிந்தார். குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

வடக்கில் பௌத்தர்கள் இருக்கிறார்களா என்று சந்திப்பில் அமெரிக்க தூதர் கேட்டார்.

அப்படி யாரும் இல்லையென்பதையும் தற்போது இராணுவத்திடம் சம்பளம் பெறும் ஒருவர், நிவாரணம் வழங்குவதாக ஏழை மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கூத்தாடினாலும் அதை சமூகம் கண்டுகொள்ளவில்லை என்றும் இதன்போது தமிழ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரங்களின் தற்போதைய நிலை பற்றியும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சந்திப்பில், மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் இளைஞர்கள் பெருந்தொகையாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றியும் கேட்டறிந்தார். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றியும் விரிவாக கேட்டறிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது

எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.