கொழும்பில் சீனாவின் ஆய்வுக் கப்பல்; விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மிகத் தீவிரக் கண்காணிப்பில் இந்தியா

இந்திய, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்புத் துறைமுகத்துக்கு சீன ஆய்வுக் கப்பல் ‘ஷியான் -6’ (Shiyan 6) புதன்கிழமை வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டின் கடற்படை கப்பல்களும் போர்க்கப்பல்களும் போர்ப் பயிற்சிக்காகப் பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B கண்காணிப்பு டிரோன்களும் கடற்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பரப்புகள் மற்றும் இலங்கை வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பலையும் இந்தியக் கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் பங்கேற்கும் வகையில், சீன கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் சீனப் போர்க்கப்பல்கள், பெரிசியன் வளைகுடாப்பகுதிக்கு நெருக்கமாக வந்து, இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப் பிறகு, குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப் படைகளை நோட்டமிடலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்தியக் கடற்படை, கடல்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது.

முன்னதாக சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைக்குள் அனுமதி அளிக்கப்பட்டமை குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணம் மேற்கொண்டமையைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல்களை இலங்கைக்கு சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இது தொடர்பாக இலங்கையிடம் இந்தியா தனது கவலையைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (N.A.R.A.) இணைந்து கடல்சார்ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட சீன ஆய்வுக்கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இந்தக் கப்பலின் இலங்கைப் பயணம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்திருந்தது.

சீன இராணுவத்தின் கடற்படை கப்பலான ‘ஹை யாங் 24 ஹாவோ’ (HAI YANG 24) கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை வந்தது. இதேபோன்று, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு சீன கப்பலான ‘யுவான் வாங் 5” (Yuan Wang 5) இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

முடிந்தால் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களியுங்கள் நாமலுக்கு சஜித் சவால்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ஷ முடிந்தால் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டை அழித்து வங்குரோத்து நிலைக்கு அழைத்துசென்ற ராஜபக்ச குடும்பத்தினர், தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டனர். அந்த ஜனாதிபதி மீது அந்த குடும்பத்தின் அரச குமாரர் (நாமல் ராஜபக்ச) கோபத்தில் உள்ளாராம். அமைச்சரவை மறுசீரமைப்பால்தான் அவர் கடுப்பில் உள்ளாராம். இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி சிந்தித்தே செயற்பட்டது.

எனவே, இவர்களின் நாடகத்தை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. இவர்கள் எவ்வாறு நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் , ஜனாதிபதியை விமர்சிப்பது போல் நடித்தாலும் பாதீட்டை ஆதரித்தே வாக்களிப்பார்கள். முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். ” – என்றார் சஜித்.

இலங்கையின் தீவுகளில் சுற்றுலா முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் பல அழகிய தீவுகள் மீன் பிடி நடடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில தீவுகளில் பருவ காலங்களில் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவ்வாறான தீவுகள் ஊடாக வருமானத்தை பெறுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றை விற்காமல் குத்தகைக்கு வழங்கல் போன்றவற்றுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவற்றில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையைப் போன்று தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பாரியளவு செலவின்றி அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடிய தீவுகள் தெரிவு செய்யப்படும் என்றார்.

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் சாத்தியமாகும் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் மூலமாக சிஸ்டம் சேஞ் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். உண்மையில் அரகல போராட்டத் தரப்பு புதிய அரசியல் அமைப்பின் மூலம் சிஸ்டம் சேஞ் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்றே தங்களது பிரதான கோரிக்கையை முன் வைத்தார்களே தவிர இருக்கின்ற அரசியலமைப்பில் புதிய சட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை விரும்பவில்லை.

அரகல போராட்டத் தரப்பிற்கு முன்பாக, நீண்டகாலமாக ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாக இருப்பதே அதிகாரப் பகிர்வுடன் கூடிய சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பே ஆகும். இதனையே அரகல போராட்ட மக்களும் கோரியுள்ளனர்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையுமே, இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை பெருந்தீயாக எரிவதற்கும், கோரமான யுத்தம் பாரிய அழிவுகளை ஏற்படுத்துவதற்கும் அதன் அறுவடையாக நாடு மிகப் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திப்பதற்கும் காரணமானது என்ற கசப்பான உண்மையை மக்கள் உணர்ந்தாலும் இதற்கு காரணமான அதிகார தரப்பு ஏற்றுக் கொள்ளதயாராக இல்லை என்பதே அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்து.

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு யாப்பு நாட்டிற்கு புற்றுநோய் போன்றது அதில் உள்ள சட்டமேலாண்மை குறிக்கப்பட்ட நபர்களின் அதிகாரங்களையும் சுகபோகங்களையும் பாதுகாப்பதாகவே உள்ளது அத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அதிகாரத் தரப்பின் அதிகாரத் துஸ்பிரையோகங்களே மிகப் பெரும் தடையாகவே உள்ளன.

பெயரளவிலான சுயாதீன ஆணைக்குழுக்கள் நியாயத்தை வெளிக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி என்கின்ற தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் பெரும் தடையாக உள்ளதை கடந்தகால சம்பவங்கள் ஆதாரமாக காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நிலையான அபிவிருத்திக்கும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த பொருத்தமான வழி சிஸ்டம் சேஞ்ஒன்று தான். இதனை புதிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினைக் கொண்ட அரசியலமைப்பு மூலமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதாத்தை மீட்டெடு்க்கமுடியும் இதற்கு ஆட்சியாளர் தயார் இல்லை என்பதே மனுஷவின் அறிக்கை எனவும் தெரிவித்தார்.

மன்னாரில் மேய்ச்சல் தரையை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று போனதன் காரணத்தால் குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன் னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி, நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மத தலைவர்கள் என பலரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே எமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைச் சாத்தியமாக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 12-10-2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடை முறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே புலனாகின்றது.

எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு,மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திவுலப்பொத்தானை சிங்கள மக்களை பாதுகாக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம்

மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ள நான்குபக்க கடிதத்தில் அவர் இந்த  வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு திவுலுபொத்தானையிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கு அனுமதித்துள்ளது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைமைத்துவத்தின் சார்பில் மகாவலிஅதிகாரிகளும்  பொலிஸாரும் கிழக்கு மாகாணத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் ஏனையவர்களுக்கும்  ஒத்துழைப்பு வழங்குகின்றனர் எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கிழக்கு மாகாண ஆளுநரும் முக்கியமானவர்கள் என தேரர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சமூகங்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சிங்கள சமூகத்தினரிடமிருந்து பறிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

திவுலுப்பொத்தானையில் சிங்களவர்கள் நீண்டகாலமாக வசிக்கின்றனர் அங்கு 80 தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ள அவர் சிங்கள முஸ்லீம்களைஅங்கிருந்து விரட்டுவதற்காக  தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலைகளில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் 2009 இல் வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவரும் வரை அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களால் தங்கள் பகுதிகளிற்கு மீண்டும் திரும்பிவரமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் மங்களராமய  அந்த மக்களின் சார்பில் தலையிட்டு 25 வீடுகளை அமைத்துக்கொடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற அரசியல்வாதிகளின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து 2016 அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி அந்த பகுதியை கால்நடைமேய்ச்சலிற்கு வழங்கியது எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கம் அதனை புறக்கணித்தது 2019 நவம்பரில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரேதிவுலுப்பொத்தானைக்கு மக்கள் மீண்டும் திரும்ப முயன்றது எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது முதல் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அழுத்தங்களிற்கு அடிபணிந்துள்ளது சிங்கள மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும்  தேரர் தெரிவித்துள்ளார்.

சீன பெற்றோலிய உற்பத்திகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சினோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

சீனக் கப்பல் இலங்கை வருகை

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி சீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த Shi Yan 6 ஆய்வுக் கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Shi Yan 6 கப்பலுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ருகுணு பல்கலைக்கழகம் அதிலிருந்து விலகியது.

இந்த பின்னணியில், கப்பலின் வருகையை அடுத்த மாத இறுதி வரை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த Shi Yan 6 கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலின் வருகை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், கப்பல் வருகைக்கு எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எமில் காந்தன்‌ உள்ளிட்ட இருவரை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கிய‌ பாதுகாப்பு அமைச்சு

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவினர்‌ எனும்  குற்றச்சாட்டில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தனர்‌ எனும்‌ குற்றச்சாட்டில் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.