வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படல் வேண்டும் ; ஹக்கீம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையைத் தொடர்ந்து அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வு நல்லிணக்கம் உட்பட முக்கிய பல சிறந்த விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். அது தொடர்பில் பிரிதொரு தினத்தில் விவாதம் நடத்த முடியும்.

சர்வ கட்சி மாநாடு தொடர்பில் தெரிவிக்கையில், சில கட்சிகள் அது தொடர்பான தப்பபிப்பிராயங்களை முன் வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்கள் அங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

அதனை கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதே வேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

நாம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் வரை அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு நான் தயார்.

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த முடியும்.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டும் என்றால் நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்றார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மனோ கணேசன்

மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பில் ஓர் அங்கமாகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்துள்ளது. அதனால் மாகாண சபைமுறையை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. ஆனால் இதிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இப்போதும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தத் தேவையில்லை. இருக்கும் பிரச்சினைகள் போதும்.

2009இல் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது யுத்தத்தை நிறைவு செய்தது போன்று அதிகார பகிர்வை மேற்கொண்டு பிரச்சினைகளை முழுமையாக தீர்க்குமாறு கோரினேன். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இப்போதும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்வோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் இந்த விடயத்தில் நாங்கள் காலை பிடித்து இழுக்கப் போவதில்லை.

சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள் வேண்டும். நீங்கள் செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தீர்வே முக்கியம் என்றார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் என்னிடம் கேட்கின்றனர். இவ்விடத்திற்கு நான் அமைச்சரவைக்கு மட்டும் அறிவித்தே வந்துள்ளேன்.

ராஜபக்ஷவினருக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். உண்மையான ராஜபக்‌ஷவாதிகள் அந்த பக்கமே இருக்கின்றனர். அதனால் 13 தொடர்பில் பொதுஜன பெரமுனவின் இரண்டு பக்கத்தில் இருப்பவர்களும் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேசி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

’தெமலோ’ இனவாதத்தை குறிக்கும் சொற்பதம், தமிழர் அல்லது திரவிடர் என்றே அழைக்க வேண்டும் – டயனா கமகே

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

தமிழர்களை ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது. தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’என்று அழைக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

ஆகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் உயரிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாத காரணத்தால் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்று நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது.

ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

நாடு என்ற முதலில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் இனவாதத்தை இல்லாதொழித்து தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். அப்போது தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ் நபர் ஒருவரை பார்த்து ‘தெமலோ’ என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.அங்கிருந்து தான் இனவாதம் தோற்றம் பெறுகிறது.

தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’ என்று குறிப்பிட வேண்டும்.

அடிப்படை விடயங்களில் இருந்து மாற்றாத்தை ஏற்படுத்தினால் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

இளம் தலைமுறையினர் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்,அதற்கமைய அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டை பிளவுப்படுத்தும்,சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டின் சுயாதீனத்தை உறுதிப்படுத்திய வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தமிழ் இளைஞர்களை பொலிசில் இணைத்தால் அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக இருப்பார்கள் – பொலிஸ் மா அதிபர்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களை அதில் இணைத்து, ஆயுதத்தை வழங்கினால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்பவில்லை. தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள். இப்போது அப்படித்தான் செயற்படுகிறார்கள்“. இதுதான் அவரது கருத்து.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, இப்படி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் – பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு- வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஏன் தேவை?, இப்போதைய பொலிஸ் அமைப்பு தொடர்வதில் என்ன சிக்கல் என்பதை அறியவே டிரான் அலஸ் ஆர்வம் காட்டினார்.

ஏனைய அதிகாரங்கள் இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால், மாகாண முதல்வரால் அவற்றை பிரயோகிக்கவோ, தீர்வை காணவோ முடியாது உள்ளிட்ட காரணங்களை- நிர்வாக ரீதியாக சுட்டிக்காட்டி தமிழ் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

13வது திருத்தத்தின்படி பொலிஸ் ஆணைக்குழுவில் முதல்வர் ஒருவரையே நியமிக்க முடியம் என்பதையும், மத்திய அரசே 2 பேரை நியமிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது, மாகாணங்கள் சுயாதீனமாக பொலிசை கையாள்வதல்ல என்பதை தமிழ் தரப்பினர் விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பின் ஒரு கட்டத்திலேயே- இந்த பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்களை பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்புகிறீர்களா?“ என தமிழ் தரப்பினர் ஒரு கட்டத்தில் கேட்டனர்.

தான் அப்படி நம்பவில்லையென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் பல தமிழ் பொலிசார் கடமையிலிருந்தாலும், பா.நடேசன் (விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர்) ஒருவரே புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லையென்றும், இப்பொழுதும் அப்படியே செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலையீட்டினால் பறாளாய் அரச மரத்தை விஞ்ஞானபூர்வ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

பறாளாய் முருகன் கோயிலின் தலா விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து, முறையற்ற விதமான வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன், விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்தினரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இன்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பறாளாய் முருகன் கோயில் விடயமாக பேச்சு நடத்தினார்கள்.

இன்று, இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர், இப்படியொரு பிரச்சினை நீடிப்பது தனது கவனத்துக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லையென ரணில் தெரிவித்தார்.

பறாளாய் முருகன் கோயிலின் வரலாறு சுமார் 300 ஆண்டுகளிற்கு உட்பட்டது என குறிப்பிட்டு, சம்பவத்தின் பின்னணியையும், வரலாற்று சுருக்கத்தையும் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால், சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார், பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டனர்.

பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரம், சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பதே தனது அபிப்ராயம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டிலிருந்த அரசமரங்களையெல்லாம் தறித்து விட்டதாக தெரிவித்தார். அப்படியானால் வர்த்தமானியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா அது வர்த்தமானியிடப்பட்டது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

அப்படியான பரிசோதனையெதுவும் மேற்கொள்ளாமல், இது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவிற்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

இதன்மூலம், அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய, சட்டபூர்வமற்ற வர்த்தமானியென்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம் முறையற்ற விதமாக செயற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கையிட, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பணித்தார்.

உடனடியாக வர்த்தமானியை மீளப்பெறுவது, தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி, தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் சோதனை நடத்தி, வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

இராணுவத்தினரின் தகவலுக்கமையவே தொல்லியல் திணைக்களத்தினர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்கள் என்ற தகவலையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மயிலந்தனை படுகொலை 31 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுட்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன் கிழமை (9) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

உயிர் நீத்தவர்களின் நினைவாக ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று, பொதுச் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் உரையினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குகன் மற்றும் வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு நீதி கோரிய மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 9.8.1992 ஆம் ஆண்டு அன்று புனானை மயிலந்தனை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்,பெண்கள் உட்பட 39 பேர் வெட்டியும் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.34 பேர் காயமடைந்தனர்.

நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புணானை இராணுவத்தினரே இப் படுகொலையை நிகழ்த்தியதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போது இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 24 இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.மேன் முறையீடு செய்வதற்கு அப்போதிருந்த சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே 2002 நவம்பர் 27 இல் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

எனவே மீளவும் நீதிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகை

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் இம் மாதம் 8 ஆம்  திகதி முதல் 9 ஆம்  திகதி வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

.அவருடன் வருகை தரும் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களையும் நெபிவ் சந்திப்பார்.

ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள், மற்றும் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் ஆராய்வதே அவரது வருகையின் நோக்கமாகும்.

இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா தவறிவிட்டது – டி. ஆர் பாலு

இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கம் தவறவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை . தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார்; ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை?

160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங் பரிவார் எதிர்ப்பால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். இதுவரை ரூ.15 கூட தரவில்லை.

பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது.

எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்க அரசாங்கம் ஒப்புதல்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று களஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதியின் பிரிவில் இருந்து நிதி கிடைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது” என்றார்.

தமிழர் பிரதேசங்களை பெளத்த தொல்லியல் இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது – ஆறு திருமுருகன்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை பௌத்த அடையாள இடங்களாக மாற்ற நினைப்பது மிகுந்த வேதனை தருகிறது. கிழக்கில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சைவ மக்களின் புனித தீர்த்தமாக பலநூறு வருடங்களாக பேணிப்பாதுகாக்கப்பட்டது.

சைவசமயத்தை பெரிதும் நேசித்த இலங்கை வேந்தன் இராவணனோடு தொடர்புடைய இப்புனித தீர்த்தம் இன்று தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் அபகரித்துள்ளமை அநீதியான செயலாகும். தொடர்ந்து தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களை திட்டமிட்டு அபகரிக்க நினைப்பது அதர்மச் செயலாகும்.

தற்போது பறளாய் முருகன் கோவிலில் உள்ள அரசமர விருட்சத்தை சங்கமித்தை வரலாற்றோடு தொடர்புபடுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளமை சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. சைவ நிறுவனங்களையோ, வடக்கில் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களையோ தொடர்பு கொள்ளாமல் தொல்லியல் திணைக்களம் புதிய பிரகடனங்கள் செய்வது கவலையளிக்கிறது. கீரிமலைப் புனித தீர்த்த கேணியை திடீரென தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மிகவும் தவறான செயலாகும்.

தெல்லிப்பழை கிராம முன்னேற்றச் சங்கம், வல்லிபுரம் என்ற பெரியவரின் நிதியுதவியுடன் 1916ஆம் ஆண்டு தூர்வைக் குளமாக இருந்த இக்கேணியை பொலிகலால் கட்டி பாதுகாத்தது. இன்றுவரை வலிவடக்குப் பிரதேசசபை குளத்தைப் பாதுகாப்பதுடன் காவலர்களை நியமித்து கண்காணித்து வருகிறார்கள்.

திணைக்களத்திற்கு உரித்தாக பிரகடனம் செய்திருப்பது நீதியற்ற செயல். எனவே ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் மேற்குறித்த பிரகடனங்களை மீளப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவமக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறது. தாங்கள் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.