இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் – சிவாஜிலிங்கம்

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை நாங்கள் வழங்க முடியாது” என்று  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கேற்க வேண்டுமெ ஒரு பித்தலாட்டத்தை நடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களிடம் நாம் கூறவிரும்புவது என்ன வென்றால் எமது சுதந்திரத்துக்கான பொதுசனவாக்கெடுப்பை கோரும் செயற்பாடானது ஒரு சில கட்சிகள்  மாத்திரமே முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அனைவரும் இது குறித்து பேசுமிடத்து இவ்விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு ஒரு பொதுசனவாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்கள் கேட்கும்  சுதந்திரத்தைப்   பெறமுடியும்.

13 ஆவது திருத்தத்தை சிங்கள இனவாதிகள் எரித்தார்கள். இதே போன்றதொரு நிலைமீண்டும் ஏற்பட்டால்  இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரித்து விட்டு சர்வதேச சமூகத்தை நோக்கி செல்லுகின்ற நிலை ஏற்படும் . ஆகவே இலங்கை அரசு தொடர்ந்து ஏமாற்றுகின்றது என்றால்  அதற்கு ஏமாறுபவர்களும்  பொறுப்பாளிகள் ஆகின்றனர்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காணி அபகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் – இந்திய நிதி அமைச்சர்

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகியநாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்வதை வரவேற்பதாக அவர்தெரிவித்துள்ளார்.கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலகவங்கியும் சர்வதேச நாணயநிதியமும் துரிதப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது என எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாழ்க்கை பெருமளவிற்கு ஆங்கில பிரென்ஞ் ஆகியவற்றை கொண்டதாக காணப்படுகின்றது தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுகின்றது கனடா தன்னை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை இவ்வாறே முன்னிறுத்துகின்றது இலங்கை உடனான உறவுகளிலும் இது குறித்தே கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளோம் இது மிகவும் நீண்டகால கடினமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

தீர்வில்லையேல் இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கினை இணைக்க நேரிடும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அதன் மூலமே தமிழர்களின் இறையாண்மையினை பாதுகாக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்ததினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும் என்றும் இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உதட்டளவில் தேசியம் பேசாமல் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செய்யும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவை நியமித்து வர்த்தமானி வெளியீடு

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக  அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் நல்லிணக்கம் இல்லாமல் போகும் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்துத் கலந்துரையாடினார் இம்மானுவேல் மக்ரோன்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் நட்புரீதியான மற்றும் பயனுள்ள இருதரப்பு விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு, இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின் AidData ஆய்வுத் திட்டத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் துறைமுகத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வெளிநாட்டு கடற்படைத் தளங்களைப் பாதுகாப்பது என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 46 நாடுகளிலுள்ள 78 சர்வதேச துறைமுகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்கட்டமைப்பை மேம்படுத்தவும், எண்ணெய், தானியம் மற்றும் உலோகப் பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதிக்காகவும் சீன வர்த்தக நிறுவனங்கள் செய்துள்ள பாரிய முதலீடுகள் தொடர்பான விரிவான தகவல்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன வர்த்தக நிறுவனங்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள 78 சர்வதேச துறைமுகங்களின் நிர்மாணத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக அடுத்து வரும் 5 வருடங்களில் ஈக்வடோரின் கினி இராச்சியத்தின் வாடா துறைமுகம் , பாகிஸ்தானின் Gwadar துறைமுகம் மற்றும் கெமரூன் இராச்சியத்தின் க்ரீப் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் காணப்படும் நட்பே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடு, இவ்வாறான திட்டமொன்றுக்காக சீனா செய்துள்ள மிகப்பெரிய முதலீடு என்பதுடன், இதன் பெறுமதி 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பான்மை பலத்தை சீனாவிற்கு பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே தனது முதல் வெளிநாட்டு இராணுவத்தளத்தை கிழக்கு ஆபிரிக்காவின் ஜிபூட்டி துறைமுகத்தில் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.