காங்கேசந்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை இவ்வாரம் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘செரியபாணி’ பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜே. இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை , இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவை 2023 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது – ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஒரு வார காலமாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

நிதியத்தின் இலங்கைக்கான முதலாம் கட்ட கடனுவியை தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள பரந்த மக்கள் தொகையை சென்றடையும் வகையில் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மேம்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சொத்து வரியின் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை வேகமாக பூர்த்தி செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

TIN இலக்கம் தேசிய அடையாள அட்டைக்கு ஒப்பானது – ரவி கருணாநாயக்க

TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க வலியுறுத்துகின்றார்.

கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க, இந்த TIN இலக்கத்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இது வரையில் சட்டபூர்வமாக இல்லாத ஒரு செயலி சட்டமானது.

சரிந்த பொருளாதாரம் படிப்படியாக சிறப்பாகவும் வருகிறது, வரி விதிக்கப்படுகிறது

பொருளாதார பலம் உள்ளவர்களே விலைக்கு வாங்கப்படுவதாகவும், TIN இலக்கம் இருப்பதால் வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மத்திய அரசாங்கம் 2024 இல் 3% சாதகமான பொருளாதார வளர்ச்சியை அடைய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த பொருளாதார வளர்ச்சியை 2025 இல் 5% ஆக அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு வருடங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இரண்டு வருடங்களாக அமையும் என சுட்டிக்காட்டிய திரு.ரவி கருணாநாயக்க, பணத்தை அச்சடித்து வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை என நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான எழுச்சியைக் கருத்தில் கொண்டு, ரூபாயின் பெறுமதி இனி குறையாது, பணவீக்கம் உயராது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15% என்ற இலக்கை அடைய ஜனாதிபதி மத்திய அரசாங்கத்தை திட்டமிட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு புதிய பொருளாதாரம் தேவை எனவும், ஜனாதிபதி மிகவும் திட்டமிட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்த ரவி கருணாநாயக்க, தொழில்வாய்ப்பை உருவாக்கி, உபரி அந்நிய செலாவணியை வழங்கும், உபரியை வழங்கும் பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானியப் பிரதமரின் இல்லத்தில் பொங்கல் விழா

பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்ல நுழைவாயில் பாரம்பரிய கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பாணையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டினார் .

மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையில் தமிழரின் நிலையை பற்றி உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்தனார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரது உரையை தொடர்ந்து மாணவிகளின் பாரத நாட்டிய நிகழ்வு இடம்பெற்றதுடன், நிகழ்வில் பாரம்பரிய தமிழ் உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துமிந்த சில்வாக்கு வழங்கிய மன்னிப்பை நியாயப்படுத்தும் கோத்தபாய

‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகளினால் தான் பொது மன்னிப்பு பெற்றுக்கொடுத்ததாக வெளிப்படுத்தப்படும் கருத்தை மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்குடன் தொடர்புடைய வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனதுபக்க நியாயத்தை முன்வைக்கும் ஆவணத்தை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மேலும் சில காரணங்கள் எனக்கு நினைவிருக்கின்றன. அதேபோன்று, அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தது என்பதும் எனக்கு நினைவிருக்கிறது” என்று அந்த பத்திரத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டுக்காகவே தான் செயற்பட்ட தாகவும் முன்னாள் ஜனாதிபதி அதில் தெரிவித் திருக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட ஜனாதிபதி மன்னிப்பை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (17) வழங்கப்பட்ட தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த ஆவண வாக்குமூலம் அமைந்துள்ளது.

அந்த ஆவணப்பத்திரத்தில் வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்லா நேரங்களிலும் நாட்டின் நலன்கருதியே செயற்படுகிறேன். தனிப்பட்ட அல்லது அரசியல் காரணமாக மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவதை மறுக்கிறேன்.

இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரும் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

கூறப்பட்ட சூழ்நிலையில், என் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களைப் பரிசீலித்து, அரசியலமைப்பில் வழங்கப்பட்டு அதிகாரங்களை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தினேன் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

2020 சீனி மோசடி – ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

அக்டோபர் 13, 2020 திகதி வர்த்தமானி 2197/12 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5% குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து இதன்போது குழு தனது அதிருப்தியை சுட்டிக்காட்டியது.

நுகர்வோரின் செலவிலிருந்து குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கு அனுகூலம் பெறுவதற்கு இடமளித்து இந்தவொரு பொறுப்புக்கூறும் முறையொன்றை செயற்படுத்தியில்லை என குழு சுட்டிக்காட்டியது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்தளவு வரி அறவிடுவது என்பது தொடர்பில் விசாரித்த குழு, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியது. சீனி மோசடி சம்பந்தமான வரி அறவிடுவதன் தற்போதைய நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும்.

இந்தச் சிக்கலை மேலும் ஆராயும் வகையில், சீனி மீதான விசேட வியாபாரப் பண்ட வரியை ஒரு கிலோவுக்கு 0.25 சதத்திலிருந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக மீண்டும் மாற்றும் முன்மொழிவு தொடர்பான குழுவின் கரிசனையை குழு எடுத்துக்காட்டியது.

சம்பந்தப்பட்ட பாரிய நிறுவனங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க அனுமதிக்கும் அதே வேளையில் சராசரி இலங்கையரிடம் இருந்து 30 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் நிதியமைச்சின் நோக்கம் இதன்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொது மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமைகளை சுமத்துவதற்கு முன்பு தவறு செய்பவர்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

விசேட வியாபாரப் பண்ட வரி மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, MRPயை விதிப்பை குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு குழு பணிப்புரை வழங்கியது.

மேலும், மொத்த விநியோகஸ்தர்கள் MRP க்கு மேல் விற்பனை செய்வது மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்மொழியுமாறு குழு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்தது.

தேர்தலை நடாத்த முதுகெலும்பில்லாத ஜனாதிபதி ரணில் – சஜித் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் யார் என தெரியாமல் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் குழப்பமடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிக்கும் ரணில் – விமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கினார்.

இந்த தீர்மானத்தை நாட்டு மக்களும், பாராளுமன்றமும் அப்போது அறிந்திருக்கவில்லை.

நாட்டுக்கு எதிராக ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

அந்த வாக்குறுதிகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவித்தார்கள்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \ 1 தீர்மானத்துக்கு இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டில் இருந்து இலங்கை விலகியுள்ள நிலையில் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களில் பல சட்ட வகிபாகத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆகவே இராணுவத்தினருக்கு எதிராக எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். பொய் சாட்சியம் வழங்கலாம்.சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், யுத்த வெற்றியை பிரதான தேர்தல் பிரசாரமாக கொள்ளும் ராஜபக்ஷர்கள் இராணுவத்தினருக்கு எதிரான சட்டமூலங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்.

ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் உறுதி

ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய ரத்நாயக்க,

2019 நவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைவதாக தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் மாறாது என அவர் விளக்கினார்.

சட்டத்தின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலை குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பு என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

மரக்கறிகளின் விலையேற்றத்துக்குத் தீர்வாக வீட்டுத்தோட்டம் செய்யுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் காய்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.

இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.