நீதிபதி சரவணராஜா பதவி விலகல் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கோ நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கோ நீதிபதி ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்றதாக கூறப்படும் நீதிபதி ரீ.சரவணராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சட்டமா அதிபருக்கு எதிராக நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில், சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான விடயங்களில் கடுமையான அழுத்தங்கள் இருப்பதால், சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய விசாரணையின் முடிவுகளை தாமதமின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன, உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜெப்ரி அழகரத்தினம், டினல் பிலிப்ஸ், துலிந்திர வீரசூரிய, அனுர மெத்தேகொட, சாலிய பீரிஸ் உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: இடைக்கால அறிக்கை தமிழ் நாடு முதலமைச்சரிடம் கையளிப்பு

முதல்வர் .மு.க. ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை சமர்ப்பித்தார்.

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களுக்கு தாய் உள்ளத்தோடு தமிழ்நாடு அரசானது அவர்களை பாதுகாத்து பராமரித்து பல்வேறு நலத்திட்டங்களை சுமார் 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது தற்போது சுமார் 58,357 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களிலும், 33,479 நபர்கள் காவல்துறை பதிவோடு முகாம்களுக்கு வெளியிலும் தங்கி உள்ளனர்.

இந்திய சட்டங்களின் அடிப்படையில் இவ்வாறு போரினால் தஞ்சம் புகுந்தவர்களை சட்ட ரீதியாக நடத்துவதற்கான முறைமை இல்லாத சூழலிலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர் வாழ்வியல் மரபின் அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலிலும், தாய் தமிழகத்தை நாடி வந்த இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு, முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு, முதல்வரால் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு மேம்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், வீட்டு திட்டங்கள், வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் செயலாக்கம் பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் முக்கியமானதாக இலங்கை தமிழர்களின் நலன் பேணவும், அவர்களின் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணவும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தலைமையில் முதல்வர் அமைத்தார்.

இக்குழுவில் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி, உறுப்பினர்களாக – சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள், ஐக்கிய நாடுகளின் அகதிகளின் அமைப்பின் பிரதிநிதி, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மூத்த பத்திரிகையாளர், சட்ட வல்லுநர், கல்வியாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி, பல்வேறு ஆய்வுகளும், கலந்துரையாடல்களும், சட்ட பகுப்பாய்வுகளும் நடத்தப்பட்டன.

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால தேவைகள் மற்றும் தீர்வுகள், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட இந்த ஆலோசனைக் குழு, பல கட்டங்களில் வரலாறு மற்றும் சட்ட முறைமைகளை ஆராய்ந்து நீண்டகால தீர்வு, சுயசார்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, பொதுத்துறை செயலாளர் நந்தகுமார், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மற்றும் உறுப்பினர்-செயலர் ஜெசிந்தா லாசரஸ், உள்துறை துணைச் செயலாளர் சித்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் சச்சிதானந்தவளன், கல்வியாளர் இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம், ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் செயலாளர் சூரியகுமாரி, அட்வெண்டிஸ்ட் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் இக்னேசியஸ், இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி இயக்குநர் அருட்தந்தை பால்ராஜ் மற்றும் பேராசிரியர் கே.எம். பாரிவேலர் ஆகியோர் உடனிருந்தனர்.

புகலிடக் கோரிக்கைக்காகவே முல்லைத்தீவு நீதிபதி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் – சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், இவரது பதவி விலகல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் என்னை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதை அவதானித்துள்ளேன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை. நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடவும் இல்லை.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடுவது பாரதூரமானது.

நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டம் மற்றும் பாதுகாப்பு துறை மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.

நீதிபதி குறிப்பிடுவதைப் போன்று அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அல்லது பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்திருக்கலாம்.

உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா என்பதை அறியவில்லை. கடந்த காலங்களில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக பலர் தமக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதையே சர்வதேசத்திடம் முன்வைத்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டும் புகலிடக் கோரிக்கையை நோக்கமாகக் கொண்டுள்ளதா என்பதும் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

எவ்வாறு இருப்பினும் நீதிபதி குறிப்பிட்ட விடயங்கள் பாரதூரமானவை. இவ்விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நீதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

2030 இனுள் இலங்கை இராணுவத்தை பாதியாகக் குறைக்க கொள்கை ரீதியில் தீர்மானம்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்கு.

2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடி வருகிறது.

அதிலிருந்து ஓரவுக்கேனும் மீளும் வகையில் முப்படையிலிருந்து ஆளணி வளத்தை குறைக்க முடிவு செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை – பசில் ராஜபக்ச

அமெரிக்க குடியுரிமையை கைவிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, இலங்கையின் அரசியலில் நேரடியாக பங்குப்பற்றுவார் என பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக, இலங்கையின் சட்ட முறைக்கு அமைவாக இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச இலங்கையில் அரசியல் ரீதியான அதிகார பதவிகளையோ, அரச உயர் பதவிகளையோ வகிக்க முடியாது.

இந்த நிலையிலேயே அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை என பசில் ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஜனாவின் வாக்குமூலம் : தமிழ் இளைஞர்கள் அனைவரும் படித்து அறிய வேண்டிய வராலாற்று ஆவணம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

இன்று அக்டோபர் மாதம் முதலாம் தேதி தனது அகவை அறுபதை எட்டும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பா.உ தனது அனுபவத் தொகுப்பான ஜனாவின் வாக்கமூலம் என்ற நூலை வெளியிடுகிறார்.

இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது பிறந்த நாளிலே பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் மத்தியில் வெளியிடப் படுகிறது.

தனது பதின்ம வயதிலே, இனத்தின் விடுதலைக்காக சகலவற்றையும் துறந்து உயிரைத் துச்சமாக எண்ணி ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்டு ஒரு இளைஞன் புறப்படுகிறான். களத்திலே விழுப் புண்களை சுமக்கிறான். தனது கனவிலும் கொள்கையிலும் மாறாத நம்பிக்கையோடு போராட்டத்தில் ஈடுபடுகிறான்.

வீரமும் தீரமும் அர்ப்பணிப்பும் ஆயுத பலமும் இருந்தால் விடுதலையை காணலாம் என்ற கனவு நனவாகியதா? தன் வாழ்நாளில் சந்தித்த மாற்றங்கள் என்ன? பயணித்த பாதை சரியானதா? இலக்கை எட்ட முடிந்ததா? எதிர்கொண்ட சிக்கல்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்ன?
மாற்றங்களை ஏற்றுக் கொண்டாரா? அடைந்த பயன்கள் பெற்றெடுத்த வெற்றிகள் என்ன?

தேசம், தேசியம், போராட்டம், அதன் வடிவம், மாற்றம், தொடர்ச்சி என்ன பல விடயங்களை தொகுத்து இந்த நூலின் வடிவத்தில் ஜனா தந்திருக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால போராளியாக பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக ஒரு அரசியல் தலைவனாக அரசியல் வாழ்க்கையிலே இவ்வளவு காலமும் அவர் கடந்து வந்த பாதைகள் என்பவற்றின் அனுபவப் பகிர்வை வடித்து தந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பயணித்த பலருக்கு எழுதுவதற்கு ஆக்கபூர்வமான வரலாறுகள் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பயணிக்காத பலர் இன்று விடுதலை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தேசிய பயணத்தில் போராளியாக ஆரம்பித்து இன்று ஒரு அரசியல் தலைவனாக அகவை 60 தொடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவில் அனைத்து தற்கால மற்றும் எதிர்கால தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் புதைந்துள்ளன.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவருடைய நேரடி வாக்குமூலம் தரப்பட்டுள்ளது. செவி வழி கதைகளை கேட்டு போராளிகளையும் போராட்டத்தையும் விமர்சிக்கின்ற பலருக்கு இந்த வாக்குமூலம் தக்க பதிலாக அமையும் என்று கருதப்படுகிறது.

ஒரு போராட்டத்தின் இலக்கு, அதை அடைவதற்கு படுகின்ற துன்பங்கள், அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற உள்ளக வெளியக காரணிகள், அவற்றை கையாளும் திறமை, அத்திறமை இல்லாவிட்டால் இனம் படுகின்ற துன்பம் என்ற பல விடயங்களை இந்த வாக்குமூலம் புட்டுக்காட்டி உள்ளது.

வாழும் போராளியாக துணிச்சலோடு இந்த வாக்குமூலத்தை ஜனா பதிவு செய்துள்ளது தன்னுடைய சொந்த வாழ்க்கையை மாத்திரமல்ல தமிழ் இளைஞர்களின் குறிப்பாகப் போராளிகளின் வாழ்க்கையை படம் போல எடுத்துக் காட்டியுள்ளது.

இதை தனிப்பட்ட ஒரு ஜனாவின் வாக்குமூலமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று ஆவணமாக படித்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

குருசுவாமி சுரேந்திரன்
பேச்சாளர்- ரெலோ-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நீதி அமைச்சர், சட்டமா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் செல்வம் எம்.பி. வலியுறுத்து

‘‘தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்லுகின்ற நிலையில் இருக்கக்கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகக் தெரிகின்றது.” – இவ்வாறு ரெலோவின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘‘உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவரின் கருத்துக்களைப் பார்க்கின்றபோது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கின்றது?

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தமிழ்ப் பிரதேசத்தில் இருந்தவர். நியாயமான தீர்ப்பை அவர் வழங்கியதால் தென்னிலங்கையிலே அவர் ஓர் இனவாதியாகவும், ஒரு தமிழராகவும் பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித் தான் இன்றைக்கு நீதிமன்றத்துக்குச் செல்கின்றார்கள்.

ஆனால், இப்போது இருக்கின்ற நிலையைப் பார்க்கும்போது தமிழ் நீதிபதிகள் நியாயமாகச் செயற்படுகின்ற வாய்ப்பைத் தடுக்கின்ற – அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமா செய்தி இதனை உணர்த்துகின்றது.

ஆகவே, தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்கின்ற நிலையில் இருக்கக் கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே, நீதித் துறைக்கு விட்ட சவாலாக இது அமைந்துள்ளது.

நீதி அமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும். முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமாவில் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் அமைச்சராக இருக்கும்போது நீதிக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதை நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள இருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும்.

ஏனென்றால் நீதி நடுநிலையானது. அது யாருக்கும் தலைசாய்வதில்லை. அந்தவகையில் எங்களுடைய நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரின் குருந்தூர்மலை தீர்ப்பு அவருக்குப் பல அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளது. இதில் புத்த பிக்குகளின் கூட்டமும் அடங்குகின்றது என எண்ணுகின்றேன். இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் புத்த பிக்குகளா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் அனைத்து நீதிபதிகளையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களுக்கும், எங்களுடைய மக்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட வேண்டுமென்றால் நீதித்துறைக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளவர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

சட்டமா அதிபரின் அழுத்தம் உள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரும் இராஜிநாமா செய்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். நாங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடுநிலைமைக்குக் கொண்டு வர முடியும். முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்கின்ற அளவுக்கு மிக மோசமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நீதி அமைச்சரும், சட்டமா அதிபரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று (29) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், கலையமுதன், ரெலோ சார்பில் தி.நிரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ் நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் 7ஆம் திகதி முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் கையெழுத்திட்டு தூதராலயங்களுக்கும் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

தமிழர் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ! நாடாளுமன்றில் தனித்து இயங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு சார்பில் நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்றும் இது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது எனவும் முடிவு எட்டப்பட்டது. அத்துடன், இந்த உத்தியை கொண்டு சிங்கள தரப்புகளிடம் பேச்சு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி விலகிய போதிலும் அந்தக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பியே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கொரடவாக உள்ளார். இதனால், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் தமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் தனித்து செயல்படவும் அந்தக் கட்சியின் எம். பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் மீண்டும் பேசி இந்திய தூதுவரை சந்தித்து இது தொடர்பில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

புதிய சட்டங்களை உருவாக்கும் போது சகல தரப்பினருடம் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் – ஜூலி சங்

வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சட்டங்களை வடிவமைப்பதற்கு சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (27) நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் உள்ளடங்கலாக புதிய சட்டமூல வரைபுகளின் தயாரிப்பின்போது சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பொறுப்பான ஆட்சியியலை வலியுறுத்துவதில் சட்டத்தரணிகள் கூட்டிணைவு கொண்டிருக்கும் வகிபாகம் குறித்து விரிவாக ஆராய்ந்ததாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளைப் பிரதிபலிக்கத்தக்க வகையிலும் சட்டங்களைத் தயாரிப்பதற்கு சகல தரப்பினரதும் பரந்துபட்ட ஆலோசனைகள் மற்றும் நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.