சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.

இந்தியா – இலங்கை இடையே படகு சேவைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் அனுமதிக்கும் – தமிழக அமைச்சர் எ.வ வேலு

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா – இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையைவலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், மானியமாக தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசுக்குநன்றி.

இந்தியாவை சர்வதேச அளவில்இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவுஅமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத் தும்.

இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா – இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமைவளத் துறைமுகத்தை உருவாக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை இத்துறைமுகம்கையாளும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நடைமுறைச் சாத்தியமற்றவற்றைக் கோரி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பங்களை ஒழிக்க வேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோரி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் இல்லாதொழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வாக்கு வங்கிக்கான தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் ஆகிய தரப்புக்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது. ஆகவே அதுபற்றிய விடயங்களை முன்னெடுக்கும்போது எதிர்ப்புக்களை வெளியிடுவது பொருத்தமல்ல. அத்துடன், அத்திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாக சிக்கல்களை தீர்க்கும் வகையிலான திருத்தங்கள் பாராளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.

அவ்வாறான நிலையில் வடக்கு அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோருவதில் பயனில்லை. அவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக விடுக்கும் கோரிக்கையானது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்காது. மாறாக, அவை தொடர்ச்சியாக நீடித்துச் செல்லவே வழிசமைப்பதாக இருக்கும்.

அதேபோன்று தென்னிலங்கையில் வாக்கு வங்கிகளுக்காக கடும்போக்காளர்களாக தம்மை காண்பித்து, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும் தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குழப்பிவிடக்கூடாது.

வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் தற்போது வரையில் முழுமையான இருதரப்பு நம்பிக்கை ஏற்படுத்தப்படாமல் துருவப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலைமையையே முதலில் மாற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி முதற்கட்டமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், இரு இன மக்களுக்கும் இடையில் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு நல்லிணக்கம் உருவாகின்ற தருணத்தில், மேலதிகமான விடயங்களை பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாமல், அரசியல் தரப்பில் உள்ளவர்கள் தமது நலன்களுக்காக அதி உச்சமான விடயங்களை விவாதித்துக்கொண்டிருப்பதானது சந்தர்ப்பத்தையும் காலத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் என்றார்.

பொதுஜன பெரமுனவுக்கு 13ஐ எதிர்க்கும் தார்மீக உரிமை இல்லை – நிமல் லன்சா

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் , அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

13க்கு அப்பால் அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

13ஆவது திருத்தம் தற்போதும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துகளைப் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது , பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் மூலம் நாட்டின் முன் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாகக் காண்பித்துள்ளது.

ஸ்திரமான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அனைவரும் ஏற்கும் வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்களிக்க முடியும்.

அப்போது சகல மக்கள் மத்தியிலும் இலங்கையர் என்ற உணர்வு கட்டியெழுப்பப்படும். அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் சர்வதேச நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.

இது தொடர்பான புரிதல் சிறிதளவும் இன்றி ,பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்கும், மனசாட்சிக்கமைய செயற்படும் பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களது நிலைப்பாட்டுக்கும் முரணான கருத்தை பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எந்த அடிப்படையில் தெரிவிக்கின்றார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் சிறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முடிந்தால் பொதுஜன பெரமுனவில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியிலிருந்து வேட்பாளரொருவரை களமிறக்கும் என்றும் , அதற்காக மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்புக்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றது.

முடிந்தால் சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுக்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைமையால் தோன்றிய நெருக்கடிகளிலிருந்தும் ,நாட்டை மீளக் கட்டியெழுப்பி பொருளாதார ,சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் ,மக்கள் ஆணையற்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுக்கு மறந்து போயுள்ளது.

மீண்டும் அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறந்து அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடிகளை தீர்த்து நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கைக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

முற்போக்கான பார்வையுடனும் , சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கையை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இது தொடர்பில் பரந்துபட்ட புரிந்துணர்வு கொண்ட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்கு பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார் என்றார்.

13ஆம் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விவாதித்து தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் – ஆஷு மாரசிங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் கால்பந்து அடிக்காமல் பாராளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

ஏனெனில் 13ஆம் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதியின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரதானியும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிததார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் கலந்துரையாடி அதனை செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 13 தொடர்பான தனது பிரேரணையை ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருந்தார்.

பாராளுமன்றத்தினால் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு 13ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு கால்பந்தாடி வருகின்றன.

13ஆம் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. ஒரு தரப்பு ஆதரவளிக்கும்போது மற்ற தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாடு 13ஆம் திருத்தத்தில் மாத்திரமல்ல, அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்திருக்கும் அனைத்து பிரேரணைகளிலும் அவ்வாறே இருக்கின்றது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் விடயத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரு நிலைப்பாட்டில் இல்லை. இவ்வாறான எதிர்க்கட்சி எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு என்ன நடக்கும் என தெரியாது.

மேலும், 13ஆம் திருத்தத்தை பாரியதொரு விடயமாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதலொன்றை ஏற்படுத்தவே எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.

நாடுதொடர்பில் உணர்வு இருக்கும் உண்மையான எதிர்க்கட்சி என்றால், 13தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கும் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதித்து, மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

மேலும், அரசாங்கம் வடக்கில் கைப்பற்றிய காணிகளில் ஒரு தொகையை அந்த மக்களுக்கு மீண்டும் கையளிக்க முற்படும்போது சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது காலத்தில் சுமார் 12ஆயிரம் ஏக்கர் காணி விடுவித்தார்.

ஆனால், தற்போது நாங்கள் 300 ஏக்கர் காணி விடுவிக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த தேரர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் வடக்கில் கட்டிடங்கள் காணிகளை கைப்பற்றி இருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த கட்டிடங்கள் காணிகளை மீள கையளிக்க நடவடிக்கை எடுத்தனர். அதுவே தற்போதும் இடம்பெறுகிறது.

எனவே, யுத்தம் முடிவடைந்தும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அவர்களின் உரிமைகளை அனுபவிக்க இன்னும் முடியாமல் போயிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களை நசுக்கவேண்டுமா என நாங்கள் சமூகத்தில் கேட்கவேண்டும் என்றார்

தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களை பாதிக்கின்றன – டக்ளஸ்

தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வனவளப் பாதுகாப்பு ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் விளக்கும் அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண அதிகாரங்களைப் பரவலாக்க நிபுணர் குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் தந்திரம்: ஜனா எம்.பி

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.

1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய களேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடுஇஸ்திரமான நாடாக இருப்பதற்குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சனசமூக நிலையம் இனத்தினை ஒருங்கிணைக்கும் தளம்; அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய அடிக்கல்லிடும் நிகழ்வில் நிரோஷ் 

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி மத்திய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்

எமது மண்ணில் நல்ல பல மாற்றங்களுக்கு அடிப்படையாக கிராம அமைப்பினை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

எமது கிராம கட்டுமானங்களின் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக நிலத்திலும் புலத்திலும் வாழும் உறவுகள் கைகோர்த்து கிராமம் என்ற வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

ஒரு கிராமத்தின் ஒருங்கிணைவு சனசமூக நிலையங்களிலேயே தங்கியுள்ளது. சனசமூக நிலையத்தின் ஒருங்கிணைவு இனத்தின் ஒருங்கிணைவாக அமைகின்றது.

 

போரின் தாக்கம் காரணமாக எம்மில் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துவிட்டனர். இது உள்நாட்டில் எமது ஜனநாயக பலத்தினைப் பாதித்துள்ளது.

இந்நிலையில் மேலுமொரு கோணத்தில் புலர்பெயர்ந்தோரின் வளத்தினை எவ்வாறாக எமது அரசியல் பொருளாதார, கலாச்சார, சமூக இருப்பிற்காக தகவமைக்க முடியும் என்பதை இனம் சார்ந்த அக்கறையுடன் சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.

அவ்வாறான அறிவார்த்தமான முயற்சிகளில் ஒன்றே இன்று இந்த அச்சுவேலி மண்ணில் நிறைவேறியுள்ளது.

ஒரு சனசமூக நிலையம் கிராமத்தின் கட்டமைப்பினை தகவமைக்கும் நிலையம் என்ற அடிப்படையில் கல்வி, பொருளாதாரம் என சகல அம்சங்களிலும் முன்னிலையில் உள்ள இக் கிராமத்தில் தொடந்து மேம்பாட்டை தக்கவைப்பதற்கு இந் நிலையம் அடிப்படையாக அமையும்.

பொதுவாக புத்திஜீவிகள் பொதுப்பணிக்கு வருவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. இச் சூழ்நிலையில் இங்கு எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருண் செல்லப்பா போசகராக சனசமூக நிலையத்தினை நிலத்திலும் புலத்திலுமாக ஒருங்கிணைக்கின்றார்.

அதுபோன்று இந்த ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் தலைமைதாங்குகின்றார்.

செயலாளராக நடேசு இரவீந்திரன், பொருளாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவகுமார் பிரதீபா என ஓர் கல்விப்புலம் பொதுப்பணி களத்தில் நிற்கின்றமை மகிழ்ச்சிக்குரியது.

இந் நிலையத்தின் ஏனைய செயற்பாட்டாளர்களும் பல் துறைசார்ந்தவர்களாக இருக்கின்றனர். கல்வியாளர்கள் சமூக செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கும் துர்ப்பாக்கிய நிலையில் இவ்விடயம் ஏனைய படித்தவர்களுக்கு முன்னுதாரணமாக அமையவேண்டும் என இங்கு கோடிட்டுக்காட்டுகின்றேன் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.