600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம்.

எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்

லையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் வடக்கு, கிழக்கு மக்களிடத்தில் கரிசனை மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு உணர்த்துவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சிப் பயணத்தின் யாழ்ப்பாண பேரணி இன்று வியாழக்கிழமை (03) யாழ் நகரில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக நின்று உழைத்துள்ளனர். ஆனால், இந்நாட்டில் அதிகம் அரசியல், சமூக, பொருளாதார கலாசார உரிமைகள் விடயத்தில் மறுக்கப்படும் ஒரு தரப்பாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலத்துக்காக போராடுகின்றனர். ஒரு துண்டு நிலத்தினை பகிர்ந்தளிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த தரப்புக்கள் ஏமாற்றியே வருகின்றன. அதுபோல் அவர்களுடைய ஊதியம் தொடர்பான பிரச்சினை தொடர் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாக உள்ளது.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் குறைந்தபட்ச பொதுநலப் பண்டங்களை பெற்றுக்கொள்வதற்குக் கூட ஏங்கவேண்டியுள்ளது; போராட வேண்டியுள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களது உரிமைகள் நிலைநிறுத்தப்படாமல் உழைக்கும் மக்களது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், தொழில் பாதுகாப்பு என அத்தனையும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே மலையக மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதையிட்டு நாடே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பத்து அடி லயன் அறைகளில் குடும்பமாக வாழ முடியாமல் இன்றும் திண்டாடுகின்றனர். சாதாரணமாக, தோட்டங்களில் தாய்மார் பிரசவத்துக்குச் செல்வதற்கே கிராமத்தில் வீதிகள் இல்லை. உண்மையில் மலையக மக்கள் மீது பிரயோகிக்கப்படும் சுரண்டல்கள் போன்று பொருளாதாரச் சுரண்டல் நிலைமையினை இலங்கையில் வேறு எந்தச் சமூகங்களும் எதிர்கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையை வெளிப்படையாக சொல்ல வேண்டும். நாங்கள் அவர்களது துன்ப துயரங்களை நேரில் பார்க்கின்றோம்.

இந்நிலையில், மலையக மக்கள் தொடர்பாக விட்டுக்கொடுப்பின்றி செயற்படவேண்டிய பொறுப்பு வடக்கு, கிழக்கில் எமக்குள்ளது.

மலையக பெண்பிள்ளைகள் கொழும்பு மற்றும் நாட்டின் பிற பாகங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும், இளைஞர்கள் பலர் கடைகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாகவும் உள்ளனர்.

மலையகத்தில் இவ்வாறாக ஒடுக்குமுறை நிலவுகிறபோதும், அதையும் மீறி பல்துறைகளிலும் இளைய தலைமுறையொன்று முன்னேற்றம் கண்டு வருகிறது. இப்பெருமையினையும் நாம் கொண்டாடுகின்றோம் என்றார்.

மீண்டெழ முடியா நிலைக்குள் இலங்கையின் பொருளாதாரம்; பிச்சை எடுத்து படம் காட்டும் ரணில் – சபா குகதாஸ்

மீண்டெழ முடியாத நிலைக்குள் பொருளாதாரம் – பிச்சை எடுத்தும் இருக்கும் நிலபுலங்களை விற்றும் படம் காட்டுகிறார் ஜனாதிபதி ரணில். சமஸ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என வழமையான பாணியில் இனவாதத்தை ஊடகங்களில் கக்கியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

தென்னிலங்கையில் குறிக்கப்பட்ட சிங்கள மக்களை தங்கள் பக்கம் திருப்பி தங்கள் பாராளுமன்ற கதிரைகளை தொடர்ந்தும் சூடாக்க இனவாத கருத்துக்களை கம்மன்பில உள்ளிட்ட சிலர் பயன்படுத்த முனைவதன் வெளிப்பாடே தமிழர்களின் அபிலாசைகளை, ஜனநாயக வெளிப்பாடுகளை இனவாதமாக சித்தரித்தல்.

இது 1956 ஆண்டில் இருந்து இன்றுவரை இலங்கைத் தீவில் தொடர்கிறது. இதன் அறுவடையை 2019 ஆண்டின் பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் மிகப் பாரிய பொருளாதார பின்னடைவாக சந்தித்த கள யதார்த்தம் நாட்டை தொடர்ந்து மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியுள்ளது.

நாடு மீண்டெழ முடியாத நிலைக்குள் பொருளாதாரம் முடங்கி விட்டது. பிச்சை எடுத்தும் இருக்கும் நிலபுலங்களை விற்றும் படம் காட்டுகிறார் ஜனாதிபதி ரணில். இந்த நிலையில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என தமிழர்களை மிரட்டுவது கம்மன்பிலவின் அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் இனப்பிரச்சனைக்கு சிங்கள ஆட்சியாளர் நிரந்தர தீர்வாக சமஸ்டியை கொடுக்க தவறினால் இன்னும் சிறிது காலத்தில் அன்று தமிழர்கள் சாரை சாரையாக வெளிநாடுகளுக்கு ஓடியது போல தென்னிலங்கையில் சிங்களவர் வெளியேறுவதை கம்மன்பில பார்ப்பார்.

தமிழ் மக்கள் 1952 ஆண்டில் இருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களது அபிலாசையாக ஜனநாயக ரீதியாக சமஸ்டி தீர்வு வேண்டும் என்றே கூறுகின்றனர். வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாண்மை தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டதை நிராகரிக்கும் சிங்கள பேரினவாத ஆட்சியார்களின் எதேச்சதிகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதை வெளிக்காட்டும் குறியீடாக தென்னிலங்கை சிங்களவர்கள் விரைவில் நாட்டை விட்டு ஓடுவார்கள் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை; அரசாங்கம் பொய்ப் பிரசாரம் – உதய கம்மன்பில

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கை வந்துள்ளதுடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் உதவும் என அரசாங்கம் பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இது இன்னொரு மாயை. பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரவில்லை. இப்போதுதான் விமான நிலையத்திற்கு வந்தேன். விமான நிலையத்திற்கு மட்டும் வருபவர்கள் இடைநிலை பயணிகள் அல்லது போக்குவரத்து பயணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அப்படி வருபவர்கள் இலங்கைக்கு வந்ததை பொருட்படுத்துவதில்லை. இந்தியாவில் உள்ள மாலா தீவில் இருந்து பயணிகள் இலங்கை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து வெளியே வராமல் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் செல்கின்றனர்.

இருப்பினும் அரசாங்கத்தின் தர்க்கத்தின்படி, இந்த இந்தியர்கள் மாலா தீவில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளாகவே கணக்கிடப்பட வேண்டும். இலங்கை சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அரசாங்கம் கூறுவதற்குக் காரணம், இலங்கை வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் இடைநிலைப் பயணிகள் சுற்றுலாப் பயணிகளாகக் கணக்கிடப்படுகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

அத்துடன் பிரான்ஸ் அதிபர் தனது விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படும் வரை காத்திருந்து விமானத்தில் இருந்து இறங்கிய போது அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்து இலங்கையில் பெரும் விளம்பரம் செய்தார்.

அரச தலைவரின் விஜயமாக இருந்தால், என்ன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, என்ன ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன, வெளியிடப்பட்ட கூட்டறிக்கை என்ன என்பதை நாட்டுக்கு தெரிவிக்குமாறு நான் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் ஆரம்பம்

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

போயா தினத்தில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த ஆக்கிரமிப்பு புத்தர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், நேற்று போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழமைக்கு மாறாக அதிகளவான பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை பார்ப்பதற்கு கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது.

இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது.

இதன்போது அங்கு சென்ற கலைப்பீட தமிழ் மாணவர்களை அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, “நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்” என்றனர்.

ஆனால் அந்த மர்மம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.

இந்நிலையில் இன்றையதினம் சட்ட நிறைவேற்று அதிகாரி வெங்கட் ரமணன் மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா ஆகியோர், கலைப்பீட தமிழ் மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினர் சமஷ்டியைக் கோரினால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எச்சரித்த உதய கம்மன்பில

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம் என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

‘கிடைக்க மாட்டாத ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கேட்டால் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர் எண்ணுகின்றனர். கிடைக்க மாட்டாத சமஷ்டியைக் அவர்கள் கேட்பதால் அதில் விடாப்பிடியாக இருப்பதால் இன முரண்பாடு மேலும் உச்சமடையும். மீண்டும் இரத்தக்களரிதான் ஓடும்.

நாட்டில் இன முரண்பாடு உக்கிரமடைய நாம் விரும்பவில்லை. ஆனால், அந்த மோசமான நிலைமையைத் தமிழ்த் தலைவர்கள் விரும்புகின்றனர். அதை வைத்து நீண்ட காலத்துக்கு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடுகின்றனர் என தெரிவித்தார்.