வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.

தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்காமை, வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமை போன்ற காரணிகளால், அண்மை நாட்களில் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு பாரிய தடை ஏற்பட்டிருந்தது.

தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்குமாயின் 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அச்சடிக்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (27)  கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பங்கரவாத தடைச்சட்டத்தை மீள் கட்டமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகரசபை பாதீடு மீண்டும் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது.

இதற்கு சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.

முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , அது தோற்கடிக்கப்பட்டது அதன் பின்னர் அவர் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பித்த பாதீடும் தேற்கடிக்கப்பட்டமையினால் அவர் பதவி இழந்துள்ளதுடன் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13வது திருத்தம் தொடர்பில் பட்டிமன்றம் நடத்தாமல் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத சக்திகள் எதிர்ப்பதும் பின்னர் அதனை திசைதிருப்பும் நோக்கில் செயற்படுவதும் இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்பவர்களின் வழக்கமாகிவிட்டது.

தென்னிலங்கை அரசியல் சமூகமும் பௌத்த மதகுருமார்களும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்தால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றமடையும் என்பதை ஏற்க மறுத்து, தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வாகாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியபொழுது, பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறை படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைக் கோரினார். 13ஐப்பற்றிப் பேசிவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேலே சென்று அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தான் தயார் எனக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் 13ஆவதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த தனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். ஜேவிபியினரும்கூட அதற்கு ஆதரவான கருத்தையே வெளியிட்டிருந்தனர்.

சிங்கள இனவாதிகளின் தூண்டுதலின் பேரில் பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய இனவாதக்குழுக்கள் சில 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில இனவாத சக்திகளான விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர போன்றோரும் குரல்கொடுத்தனர்.

இது இவ்வாறிருக்க, முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் இப்பொழுது 13ஐ நிறைவேற்றத் தேவையில்லை என்று சிங்கள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாக்கு வங்கியை நம்பியிருக்கக்கூடிய தரப்புகளும் தங்களது வாக்குவங்கிகளுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதே நிலைப்பாட்டை எடுக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 13ஐ நடைமுறைப்படுத்துவேன் என்று உத்தரவாதம் அளித்த ஜனாதிபதி அவர்கள் இன்றுவரை அதுதொடர்பில் ஒரு சிறுதுரும்பைத்தன்னும் நகர்த்தவில்லை.

இதுதொடர்பாக சர்வகட்சி மகாநாடுகளை ஜனாதிபதி நடத்தியபொழுதிலும் இவற்றை நிறைவேற்றுவதற்காக ஒரு கால அவகாசத்தை தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டபொழுதும் அவை எதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இவை இவ்வாறிருக்க, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் அவை ஒற்றையாட்சிக்கு உட்பட்டது எனவும் அதனை நடைமுறைப்படுத்தக் கோருபவர்கள் இந்தியாவின் முகவர்கள் எனவும் அடிவருடிகள் எனவும் பிரச்சாரம் செய்யும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அரசியல் சாசனத்தைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வேடிக்கையும் இங்கேதான் நிகழ்கிறது.

பதின்மூன்றாவது திருத்தம் என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து நிறைவேற்றப்பட்டது அதுமாத்திரமல்லாமல், இலங்கையின் உயர்நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி யாரிடமும் அங்கீகாரமோ அனுமதியோ பெற வேண்டிய தேவையில்லை. 1988ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, இலங்கையில் மாகாணசபைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு உர்pத்தான அதிகாரங்களில் சில கொடுக்கப்பட்டிருப்பதும் சில கொடுக்கப்படாமலிருப்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

ஆகவே, நாங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோருகின்றோம். ஆனால் இலங்கையின் அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை சிங்கள தரப்பில் இருக்கக்கூடிய குறுகிய அரசியல் இலாபம் கொண்ட கட்சிகள் இதனை மறுதலிப்பதும் அதற்கு எதிராகப் போராடுவதும் புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால் தமிழ்த் தரப்பில் இயங்குகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்றவர்கள் அதே சிங்கள இனவாதக் குழுக்கள்போல் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகச் செயற்படுவதும் எந்த வகையில் தமிழ் மக்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும், இவர்கள் கூறுகின்ற சமஷ்டி அரசியல் சாசனத்திற்கான வழிமுறைகளையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். சட்டத்தின்பால் கிடைத்தவற்றை ஏற்கமறுத்து, அதனை வேண்டாம் என்று தூக்கியெறியக்கூடிய தமிழ் தரப்பு அரசியல் விற்பன்னர்களை இப்பொழுதுதான் காணக்கூடியதாக இருக்கின்றது.

சமஷ்டி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு புதிய கோரிக்கை அல்ல. தந்தை செல்வா அவர்கள் சமஷ்டி கட்சியைத்தான் ஆரம்பித்து அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று பெயரையும் வைத்தார்.

ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள இனவாத சக்திகளுக்கும் சமஷ்டி என்ற சொல் வேப்பங்காயாகக் கசக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடியது ஒற்றையாட்சி முறையைக் கொண்ட அரசியல் சாசனமே.

இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவரவேண்டுமாக இருந்தால், சமஷ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.

அவ்வாறான சமஷ்டி அரசியல் சாசனத்திற்கு தமிழர் தரப்பில் யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆகவே, ஒரு சமஷ்டி அரசியல் சாசனத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அதற்கான வழிமுறைகளை வகுத்து தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் இருக்கின்றது. அது ஒரு நீண்ட போராட்டமாக அமையப்போகிறது என்பதுதான் யதார்த்தமானது.

இந்த நிலையில், ஒரு மாற்று ஏற்பாடு இல்லாமல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை நிராகரிப்பதும் அதனை அரசியல் சாசனத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று சொல்வதும் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவற்றையும் இல்லாமல் செய்யக்கூடிய அறிவீலித்தனமான செயலாகும்.

பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அதுமாத்திரமல்லாமல், சர்வதேச ரீதியிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினூடாகவும் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்து வருகின்றது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என்று இந்தியாவும் கூறியது கிடையாது.

இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டுமா? வேண்டாமா? அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து, தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டின் அனைத்து அரசியல் சமூகத்திற்கும் நல்லது

இலங்கையின் கடன்நெருக்கடிக்கு உடனடி தீர்வினை காண நடவடிக்கை; ஜி-20 நாடுகளின் நிதிசார் மாநாட்டில் இணக்கம் !

இலங்கையின் கடன் நெருக்கடிநிலைக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி செயற்படத்தயாராக இருப்பதாக ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் கடந்த 24 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவுதல், அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டின் பெறுபேறு குறித்த ஆவணம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்டது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குரிய தீர்வை அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றுக்கொடுப்பதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கூட்டாக இணைந்து பல்தரப்பு ஒருங்கிணைவை வலுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன் இரத்திற்கு அப்பால் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கான பொதுச்செயற்திட்டத்தை உருவாக்கல்’ என்ற அடிப்படையின்கீழ் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று அந்தப் பொதுச்செயற்திட்டத்தை உரியவாறான காலப்பகுதியில், முன்னெதிர்வுகூறக்கூடிய அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்தவேண்டும்’ என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைக்கு மன்னிப்புச்சபை கோரிக்கை

இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பலத்தை கடைப்பிடிக்கும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட சட்டவிரோத கண்ணீர்புகை பிரயோகம் நீர்த்தாரை பிரயோகம் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி குறித்து பதிலளித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா இலங்கையில் பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னரும் இலங்கை பொலிஸாருக்கு அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமையை  உறுதி செய்யவேண்டிய அவர்களது கடமை குறித்தும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும்போது கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டியது குறித்தும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக பல உயிர்களை பலியெடுத்துள்ளன இன்றும் அது இடம்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள்அங்கிருந்து வெளியேற முடியாத தப்பமுடியாத நிலை காணப்படுவதையும்வீடியோ காண்பித்துள்ளது,அவ்வாறான சூழ்நிலையிலும் பொலிஸார் சர்வதேச மனிதஉரிமை சட்டம்  பலத்தை பயன்படுத்துவதற்கான தராதரங்கள்ஆகியவற்றை மீறி நீர்த்தாரை பிரயோகம் கண்ணீர்புகைபிரயோகம்ஆகியவற்றை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களிற்கு எதிரான பரந்துபட்ட வன்முறைகள்இல்லாத போது கண்மூடித்தனமான விளைவுகளை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் சூழமைவில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் இவற்றிற்கு காரணமானவர்கள் நீதியின்முன்நிறுத்தப்படவேண்டும் எனவும்  சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜப்பானிய தூதரக அதிகாரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உபதலைவர் இரா தர்ஷன், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு , அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் , மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினை,தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற உத்தரவை மீறி மயிலத்தமடு,மாதவனை பகுதியில் காணி அபகரிப்பு – ஜனா எம்.பி

நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பகுதியாக காணப்படும் மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் நிலைமைகளை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிக்கு கள விஜயத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈபிஆர்எல்எப் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,புளோட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கேசவன் உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

கடந்த சில தினங்களாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் வேறு மாவட்டங்களிலிருந்துவருவோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் கடந்த சில தினங்களாக மேய்ச்சல் தரையில் உள்ள மாடுகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுவருகின்றன.

கடந்த சில தினங்களில் ஒரு மாடு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து மாடுகள் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் இன்றைய தினம் ஒருவர் கரடியனாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதிலும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் கருணாகரம் எம்.பி.இதன்போது குற்றஞ்சாட்டினார்.

மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுத் தருகின்ற கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் என்ற ஒன்று இல்லை என்ற ஜனாதிபதியின் கூற்று எந்தளவிற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை.

ஏனெனில்  தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்களும்  பல இடங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்கள், அப்படியிருக்கும் போது ஜனாதிபதியின் கூற்று வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

தேர்தலை நடாத்துவதில் நிதிப்பிரச்சனை இருக்குமானால் அதனை முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் போது அவர் இவ்வாறு தெரிவிப்பதில் நியாயம் இருக்குமா என்று தெரியவில்லை.எனவே தேர்தலை நிறுத்துவது ஜனநாயக விரோதமானது என்பதே எனது கருத்து. உண்மையில் மாகாணசபை தேர்தலே முதலில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் அதனை முதன்மையானதாக கருதவில்லை. எமது நிலங்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் 13 வது திருத்ததில் இருக்கின்றது. மாகாணசபை முறைமை கட்டாயம் வேண்டும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் போது முதலில் எதிர்ப்பவர்கள் பௌத்த பிக்குகளாகவே இருக்கின்றனர். இது ஒரு அர்த்தமில்லாத செயற்பாடு.

வடகிழக்கில் ஒரு நீதியான தீர்வை வழங்கமுடியாது என்ற செய்தியை பிக்குகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். 13 வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டாலும்பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி சொல்கிறார். அவரும் பௌத்த பிக்குகளின் சிந்தனையில் செயற்ப்படுவதுபோல தெரிகின்றது. எனினும் சிங்கள மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்று அர்த்தமில்லை.

தமிழ்த்தரப்பிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி அதனை  எதிர்க்கின்றது. பௌத்தபிக்குகளுடன் இணைந்து அவர்கள் இதனை எதிர்ப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. சமஸ்டியே வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதனை பெறுவதற்கான செயற்பாட்டை முன்வைக்கவில்லை. அதனை வென்றெடுப்பதற்கான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

நான் அவர்களிடம் கேட்கின்றேன் மாகாணசபை முறைமையை எதிர்க்கும் நீங்கள் மாகாணசபை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா. அல்லது எதிர்த்து நிற்பீர்களா. இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றேன்.

13 வது திருத்ததின் ஊடாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்தவிடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். என்றார்.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு தீர்மானம் மார்ச் 31 இனுள் அறிவிக்கப்படும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையை அடைந்ததும் அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.