பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை; அரசாங்கம் பொய்ப் பிரசாரம் – உதய கம்மன்பில

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கை வந்துள்ளதுடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் உதவும் என அரசாங்கம் பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இது இன்னொரு மாயை. பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரவில்லை. இப்போதுதான் விமான நிலையத்திற்கு வந்தேன். விமான நிலையத்திற்கு மட்டும் வருபவர்கள் இடைநிலை பயணிகள் அல்லது போக்குவரத்து பயணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அப்படி வருபவர்கள் இலங்கைக்கு வந்ததை பொருட்படுத்துவதில்லை. இந்தியாவில் உள்ள மாலா தீவில் இருந்து பயணிகள் இலங்கை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து வெளியே வராமல் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் செல்கின்றனர்.

இருப்பினும் அரசாங்கத்தின் தர்க்கத்தின்படி, இந்த இந்தியர்கள் மாலா தீவில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளாகவே கணக்கிடப்பட வேண்டும். இலங்கை சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அரசாங்கம் கூறுவதற்குக் காரணம், இலங்கை வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் இடைநிலைப் பயணிகள் சுற்றுலாப் பயணிகளாகக் கணக்கிடப்படுகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

அத்துடன் பிரான்ஸ் அதிபர் தனது விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படும் வரை காத்திருந்து விமானத்தில் இருந்து இறங்கிய போது அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்து இலங்கையில் பெரும் விளம்பரம் செய்தார்.

அரச தலைவரின் விஜயமாக இருந்தால், என்ன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, என்ன ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன, வெளியிடப்பட்ட கூட்டறிக்கை என்ன என்பதை நாட்டுக்கு தெரிவிக்குமாறு நான் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் ஆரம்பம்

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

போயா தினத்தில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த ஆக்கிரமிப்பு புத்தர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், நேற்று போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழமைக்கு மாறாக அதிகளவான பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை பார்ப்பதற்கு கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது.

இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது.

இதன்போது அங்கு சென்ற கலைப்பீட தமிழ் மாணவர்களை அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, “நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்” என்றனர்.

ஆனால் அந்த மர்மம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.

இந்நிலையில் இன்றையதினம் சட்ட நிறைவேற்று அதிகாரி வெங்கட் ரமணன் மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா ஆகியோர், கலைப்பீட தமிழ் மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினர் சமஷ்டியைக் கோரினால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எச்சரித்த உதய கம்மன்பில

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம் என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

‘கிடைக்க மாட்டாத ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கேட்டால் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர் எண்ணுகின்றனர். கிடைக்க மாட்டாத சமஷ்டியைக் அவர்கள் கேட்பதால் அதில் விடாப்பிடியாக இருப்பதால் இன முரண்பாடு மேலும் உச்சமடையும். மீண்டும் இரத்தக்களரிதான் ஓடும்.

நாட்டில் இன முரண்பாடு உக்கிரமடைய நாம் விரும்பவில்லை. ஆனால், அந்த மோசமான நிலைமையைத் தமிழ்த் தலைவர்கள் விரும்புகின்றனர். அதை வைத்து நீண்ட காலத்துக்கு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடுகின்றனர் என தெரிவித்தார்.

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது தவறு – காமினி லொக்குகே

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை. பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.

தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் தவறாகும்,நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன்.- என்றார்.

உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கை ரூபாயே செல்லுபடியாகும் – இலங்கை மத்திய வங்கி

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதியாக பசில் ராஜபக்ச கிடைக்கவுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பேரதிஷ்டம் – காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.