சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை முற்று முழுவதுமாக எம்மால் நிராகரித்துவிட முடியாது.

இருப்பினும் இந்த காணொளியை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என கூறவும் முடியாது. எனினும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே சிறந்தது. விசாரணை நடத்துமாறும், உண்மையை வெளிக்கொண்டுவருமாறும் இங்குள்ளவர்களுக்கு கூறினாலும் அது சரிவராது.

மேலும் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை.

இதனை என்னால் அடித்துக் கூறலாம். விசாரணைகள் வெற்றியடையவில்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் சனல் 4 காணொளி தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு கூறியுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை கூறுவது போன்று சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டால் சிறந்தது என நான் நினைக்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

Channel 4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காணப்படும் அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Channel 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் ஒருவர் வௌியிட்டுள்ள கருத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டுவதற்குமான சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாசகார ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளமையானது, எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக, இந்த குழப்பநிலையை ஏற்படுத்தும் விதமான கருத்துகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான தெளிவான புரிதலை சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதன் ஊடாக, சரியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வழிசமைப்பதே இந்த விரிவான செயன்முறையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தின் பாதகமான விளைவுகளுடன் முழு நாடும் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது உண்மையை வெளிப்படுத்தவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கையாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

உண்மையைக் கண்டறிவதற்காக இந்த முக்கியமான விசாரணைகள் நடத்தப்படும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். -ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல் 04 வெளியிட்ட தகவலானது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும், கர்தினால் இவ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கின்றனர்.

நாங்களும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தியே இவ்விடயமானது தற்போது பேசுபவருளாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி காலத்திலே தமிழ் மக்களினை படுகொலை செய்ததுடன் மனித உரிமை மீறல்கள்ளையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஐநா சபை கண்டனம் தெரிவித்ததுடன் இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர்.

மேலும் இவ் விடயம் தொடர்பாக கடந்த காலங்களிலே சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் அல்லது சர்வதேச நீதித்துறையை சார்ந்தவர்கள், சர்வதேச வழக்கறிஞர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும்.

கர்தினால் உட்பட அனைவரும் மனச்சாட்சியுடன் இந்நாட்டில் புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே மகிந்த ராஜபக்சவின் குடும்பம் மேற்கொண்ட அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல்கொடுத்திருந்திருக்கலாம் என தெரிவித்தார்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தியிருந்தால் ஈஸ்டர் படுகொலை தடுக்கப்படிருக்கும்: சபா குகதாஸ்

2009 முள்ளிவாய்க்காலில் மிகக் கோரமாக நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற சந்தர்ப்பம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (09.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச விசாரணை

ஈஸ்டர் படுகொலைக்கான ஆதாரம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியாகிய பின்னர் நாடாளுமன்றத்தில் பல குரல்கள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மேலேழுந்தன.

இது ஒருவகையில் சிலரது அரசியல் உள் நோக்கமாக இருந்தாலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு தமிழர்களிடம் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் தென்னிலங்கையில் கர்தினால் உட்பட தற்போது கதறும் தரப்புக்கள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கின்றனர்.

அன்று முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய அதே தரப்பினர் தான் ஈஸ்டர் படுகொலையை அரங்கேற்றினார்கள் என்பது தற்போது நிரூபணமாகி விட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

ஆகவே அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை மேற் கொண்டு நீதி வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறு படுகொலை நடந்திருக்க மாட்டாது.

எதிர்வரும் காலத்திலும் வேறு வடிவங்களில் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க இப்படியான நிகழ்வுகள் அரங்கேற்றப்படலாம்.

அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இன்று கூவும் தென்னிலங்கைத் தரப்புக்கள் முதலில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை கோருங்கள் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு தானாகவே நீதி கிடைக்கும் அத்துடன் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை கொன்றெழிக்கும் கலாசாரத்திற்கு அதனை மேற் கொள்ளும் சூத்திரதாரிகளின் செயற்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை – அலன் கீனன்

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடம் கறுப்பு ஜுலையின் 40 ஆவர் நினைவுதினம். இலங்கை தலைநகரில் ஏற்பட்ட வன்முறைகளால் 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரம் பேர் நாட்டைவிட்டு தப்பியோடியிருந்தனர். பல ஆயிரம் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அதுவே முழு அளவிலான போருக்கு வழிவகுத்திருந்தது.

இந்த போரில் பல ஆயிரம் மக்கள் கொல்ப்பட்டனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர் திரும்பிவரவில்லை. தமது பிள்ளைகளை தேடி உறவினர்கள் கடந்த 5 வருடங்களாக போராடி வருகின்றனர். அங்கு மனித புதைகுழிகள் உள்ளன.

ஆனால் இவை எவற்றுக்கும் அங்கு நீதி கிடைக்கவில்லை. வாக்குறுதிகளை வழங்குவது இலங்கை அரசுகளின் வழக்கமாகிவிட்டது. விசாரணைகளை அரசுகளே குழப்பி அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லாது தடுக்கின்றன.

உதாரணமாக உடலகம ஆணைக்குழுவை கூறலாம். மகிந்தாவே அதனை அமைத்தார். அவரின் ஆட்சிக்காலத்தின் முதலாண்டு பகுதியில் இடம்பெற்ற 17 படுகொலைகள் தொடர்பான விசாரண அது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர்கள் அனுபவங்களை கற்பதும், நல்லிணக்கப்பாடும் என்ற குழுவை அமைத்தனர். இந்த குழு காலத்தை கடத்துவதிலும், அனைத்துலக விசாரணைகளை தடுப்பதிலும் தான் கவனம் செலுத்தியது. பொதுமக்களின் படுகொலைகளில் படையினருக்கு உள்ள தொடர்புகளையும் அது மறைக்க முயன்றது.

எனவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் அங்கு விசாரணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுடன் அவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் அதற்கான அனைத்துலக உதவிகளும் பெறப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்த அரசாங்கம் தயார் – விஜயதாச ராஜபக்ச

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வுகளுக்கு முன்னதாக புலம்பெயர் குழுக்கள் இலங்கைக்கு எதிரான சர்ச்சைக்குரிய காணொளிகளை அடிக்கடி வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையானது புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நிறுவனமாகும். ஆகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இன் காணொளி தொடர்பான சந்தேகம் எழுகின்றது. எவ்வாறாயினும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினேன். தேசிய ஒருமைப்பாட்டைக் சீர்குலைக்கவே நான் இவ்வாறு கூறியதாக அன்று பலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அன்று நான் கூறி 29 மாதங்களுக்குப் பிறகு அனைவரின் கண்களும் திறக்கப்பட்டுள்ளன. அன்று எனது அறிக்கையை ஆராய்ந்திருந்தால் அந்த மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தான் ஓய்வுபெற்று செல்லும் போதே கூறியிருந்தார். ஆனால் அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறச் செல்லும் போது நீதிமன்றம் ஊடாக அதற்கு தடையை பெற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் அல்லாமல் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம். இன்று சர்வதேச விசாரணைகளை கோருபவர்கள் தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தனர்” இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசினால்  40 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும்  அளிக்கப்பட்ட நிலையிலேயே  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை   40 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது.

சுகாதார  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான வைத்தியர் காவிந்த ஜயவர்தன கடந்த புதன்கிழமை  நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

மருந்து தட்டுப்பாடு,தரமற்ற மருந்து கொள்வனவு ,மருத்துவ சிகிச்சையின் போதான மரணங்கள், பாதிப்புக்கள் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி   சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி  எம்.பி.யான வைத்தியர் காவிந்த ஜயவர்தன  இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை  கொண்டு வந்தார்.

கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை  விவாதத்திற்கு எடுக்கப்பட்டு  கடந்த 3 தினங்கள்  தொடர்ந்து இடம்பெற்ற விவாதம் மாலை 5,35 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணையை  அனுமதிக்கின்றதா என சபைக்கு தலைமைதாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையை கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பு கோரினார். அதன் பிரகாரம் மாலை  5,40  மணிக்கு   இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு   இடம்பெற்றது.

இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக   கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி, சுயாதீன எதிரணி  எம்.பி.க்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி . இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரச தரப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து சுயாதீன எதிரணி எம்.பி.க்களான  நிமல்லான்சா, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும்  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி வாக்களித்த நிலையிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை  40 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான  இந்த   நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்  38பேர் பங்கேற்கவில்லை.

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றத் தவறுகின்றது – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வெளியிட்டுள்ள வருடாந்தர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எனவும் யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டடமூலம் மற்றும் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் உட்பட முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலங்கள் தொடர்பான பல கவலைகளையும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துரிமையை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.