தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள் – ரெலோ

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள்

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் ஒரு நாட்டினுடைய பிரதிநிதியோ அல்லது ஒரு ராஜதந்திரியோ அல்ல. அவருக்கு இட்ட பணியை அவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். அதை விடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தமான விடையங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது.

இன்றைய அரசியல் சூழலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? அல்லது யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

மேலும் அவருடைய ஆலோசனையோ தலையீட்டையோ கருத்துக்களையோ தமிழ்த் தலைவர்கள் யாரும் கோரவில்லை. யுத்தம் முடிவடைந்த பின் இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் நீதி, மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்கதையாகி பல சிரமங்களை எதிர்கொண்ட பொழுது இப்போது கருத்துச் சொல்பவர்கள் எங்கு சென்றார்கள்?

ஒருமித்த நிலையில் தமிழ் தலைவர்கள் பயணிக்காமல் தனித்தோட முயற்சி செய்வதாலேயே இப்படியான கருத்துக்களை சிலர் சொல்வதும் தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடுவதுமாக வரலாறு கடந்திருக்கிறது.

காலம் காலமாக புரையோடிப் போன தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எப்படியாக முன் நகர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ளனர். ஆகவே எரிக் சொல்ஹம் அவர்கள் தன்னுடைய உத்தியோபூர்வமான பணி எதுவோ அதைச் செவ்வனே செய்யுமாறு கோருகிறோம்.

கு. சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தலைமைகளுடன் விரைவில் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை – திஸ்ஸ விதாரண

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதை போன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொண்டேன்.

பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து கருத்துரைக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

ஐக்கிய நாட்டுக்குள் பிளவுப்படாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

இரண்டு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் அவரால் பதவி வகிக்க முடியாமல் போனது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. இவரது செயற்பாடுகள் எதிர்காலங்களில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்,அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.

அரசுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் – சம்பந்தன்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை விடயங்களையும் இந்தியா நன்கு அறிந்துள்ளது.

குறிப்பாக, 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விவகாரம் சம்பந்தமாக இந்தியா விசேடமாக கரிசனை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

அதன் பின்னரான காலத்திலும், தமிழ் மக்களின் விவகாரங்களில் இந்தியா முழுமையான பங்களிப்பினை செய்தே வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் பங்களிப்பினை புதிதாக கோரவேண்டியதில்லை.

தற்போது தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தியாவின் வகிபாகம் நிச்சயமாக இருக்கும்.

தற்போதைய சூழலில் அந்த வகிபாகம் எவ்வாறானது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், நிச்சயமாக இந்தியா தனது பாத்திரத்தினை முக்கியமானதாக வகிக்கவுள்ளது.

அந்த வகையில், தமிழ் மக்கள் தமது நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா நிச்சயமாக தனது பங்களிப்பை பூரணமாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கும் என்றார்.

தேசிய இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சில் இந்திய மேற்பார்வை தேவை – தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே அத்தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.

ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.

எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.

ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டியது அவசியமாகும்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், அச்செயற்பாடு எவ்வாறு சாத்தியமாகும், எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியாதுள்ளது.

ஆனால், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பாகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய செயற்பாடுகளின்படி, பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சில பேர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால், நான் அதை சொல்லாததற்கான காரணம், ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம், என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதாலாகும்.

ஆனால், நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதனடிப்படையில் அவை நடைபெற வேண்டும். ஜனாதிபதி நல்ல நோக்கத்துக்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதார பிரச்சினைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும், இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டு விடக்கூடாது. ஆகவே, தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார்.

சித்தார்த்தன்

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பேச்சுக்களில் சாதகமான நிலைமைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

எதிர்வரும் காலத்திலும், அவ்விதமான நிலைமைகள் நீடிப்பது பொருத்தமற்றதாகும்.

ஆகவே, பேச்சுவார்த்தைகள் உரிய இலக்கினை அடைவதற்கும், அவை வெற்றி பெறுவதற்கும் அரசாங்க மற்றும் தமிழ்த் தரப்பினை வழிநடத்திச் செல்வதற்கும் மேற்பார்வை அமைந்திருத்தல் மேலும் நன்மைகளையே ஏற்படுத்தும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றை பார்க்கின்றபோது, ஒவ்வொரு தடவையும் பேச்சுக்களை முன்னெடுப்பதும், ஒப்பந்தங்களை செய்வதும், பின்னர் சொற்ப காலத்தில் அவற்றை முறித்தெறிந்து செயற்படுவதுமே வாடிக்கையாக மாறிவிட்டது.

இவ்வாறான நிலையில் தான் தற்போது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பற்றிய பேச்சுவார்த்தையின் போது அம்மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால், நிச்சயமாக மூன்றாம் தரப்பின் மேற்பார்வை அவசியமாகின்றது.

அவ்வாறில்லாமல், அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கின்றபோது அப்பேச்சுக்கள் வெறுமனே சர்வதேசத்துக்கான கண்துடைப்பாகவே சித்தரிக்கப்படும் ஆபத்துள்ளது.

இதனை விடவும் இந்தியா தமிழர்களின் விடயத்தில் நீண்ட காலம் வகிபாகத்தினை கொண்டிருப்பதால், இந்தியாவின் மேற்பார்வையானது மிகவும் அவசியமானதாகும் என்றார்.

சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு என்பது நகைப்புக்குரியது – கம்மன்பில

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே ஜனாதிபதி முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (டிச. 24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மாறுபட்ட பல கருத்துக்களை தமிழ் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் முதலில் ஒற்றுமை கிடையாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சாத்தியமற்றது.

பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின், 30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாக உள்ளது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் தான் ஜனாதிபதி ஈடுபடுகிறார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாகாண சபை தேர்தல் மூன்று காலத்துக்கும் அதிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக பதவி வகிக்கும்போது தான் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. மாகாண சபை தேர்தலை நடத்தினால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என ரணில் விக்கினேஸ்வரனுக்கு அறிவிப்பு

தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடுத்த ஜனவரி மாதம், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சந்திப்பை பிற்போடுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு ஏற்கனவே, கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால், தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே சந்திப்பிற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தம்மால், குறித்த தினத்தில் கொழும்பில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அந்தச் சந்திப்பை பிரிதொரு தினத்திற்கு பிற்போடுமாறும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமின்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விடயத்தையும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தால், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், குறித்த சந்திப்பானது, உத்தியோகபூர்வமானதல்ல என்றும், ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைக்குள், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக கொண்டுவர முயற்சிக்கப்படுமாக இருந்தால், இந்திய தர்ப்பில் மத்தியஸ்தர் ஒருவரை அழைத்துவர நேரும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம். பி கோரிக்கை

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படுவதை தடுக்க ஜனாதிபதி முன்வர வேண்டுமென குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக என்பதால், நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சி – ரணில் இடையிலான முறையற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகள் அதிருப்தி சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை இணைய ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பில் அவர் தெரிவித்தார்.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியதாக க.வி.விக்னேஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து எமது சார்பில் ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம் என க.வி.விக்னேஸ்வரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, வரும் ஜனவரி 5ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது

சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

கடந்த 13 ஆம் திகதி சர்வகட்சித் தலைமைகளை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசியம் சார்ந்த நான்கு கட்சி தலைவர்கள் இணைந்து மூன்று கோரிக்கைகளை கொடுத்து அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கால எல்லையாக 2023 ஐனவரி 31 வரை வழங்கிவிட்டு அதற்கு முன்பாக மீண்டும் இன்று 21/12/2022 சம்பந்தன் ரணிலை சந்திப்பதற்கான தீர்மானத்தை தமிழரசுக் கட்சி தனித்து எடுத்திருப்பது ரணில் அரசை காப்பாற்றவா?
ஏனைய கட்சிகளுடன் இணைந்து எடுத்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவா? தமிழர்களை பலவீனப்படுத்தி தோற்கடித்த எரிச்சொல்ஹெமின் தலைமையில் பேசவா? தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பலவீனப்படுத்தவா? என வினவியுள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ்.

சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது – சரத் வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.