மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் வியாழக்கிழமை (ஜன 26) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது பிரதமரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி அவர்களும் இந்த  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கு நேற்று இரவு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு நேற்று மீண்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரன மற்றும் எஸ்.பி.திவரத்னவுக்கு ஆணைக்குழுவில் இருந்து ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன்படி, அந்த இரு உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு எம்.எம்.மொஹமட்டுக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாகக் கூறப்படும்போது எஸ்.பி. திவரத்னவுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் குறுஞ்செய்தி வந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

‘சுதந்திர தினம் தமிழருக்கு இல்லை’ பெப்ரவரி 4 மக்கள் எழுச்சி போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – செல்வம் எம்.பி

நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்விற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்திலே பிரிந்து சென்று வரும் தேர்தலிலே பங்கு பற்றலாம் என முடிவெடுக்கின்றார்கள். மட்டக்களப்பில் வடக்கு கிழக்கிலே தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் போராடுகின்றனர் அதே வேளை முல்லைதீவில் நான்கு நாட்களாக விடுதலைப்புலி போராளி மாதவன் வேலுப்பிள்ளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொள்கின்றார். இந்த இரண்டு போராட்டங்களும் தமிழரசு கட்சியினுடைய காதுகளில் எடுபடவில்லை.

நாங்கள் அந்த போராளியை சென்று பார்வையிட போது சில கோரிக்கைகளினை எழுதி அதை நடைமுறைபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் எனக்கூறியிருந்தார். குறிப்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதில் நாங்கள் கையெழுத்திட்டோம்.விக்கினேஸ்வரன் ஐயாவும் கையொப்பமிட்டு உண்ணா நோம்பினை முடிவுக்கு கொண்டு வந்தார்.

எமக்கு வழிகாட்டியாக இருந்த தமிழரசு கட்சி ஒரு சிறிய தேர்தலிலே பிரிந்து செல்வதாக முடிவெடுப்பது சுமந்திரன் போன்றோரின் உள்நுழைவு தான் காரணம். இதனாலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விலகிச்சென்றார்கள். அதனை தொடர்ந்து பிரேமசந்திரனின் கட்சியும் விலகி சென்றது. ஆமை புகுந்த வீடு விளங்காது.

இவ்வாறாக அவர் வந்த பின்னர் வாக்காளர்களும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் குறைந்தது. இன்று 10 ஆக இருக்கின்றோம். 3 கட்சிகள். முன்னர் 6 காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் வெளியில் நாங்கள் 6 காட்சிகளாக இயங்கினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை உள்ளெடுக்க விரும்பவில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் சம்மந்தன் ஐயா ஏற்றுக்கொண்டார். சுமந்திரன் மறுத்தார். அந்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். எமக்கும் சில காட்சிகள் மேல் கோபமுள்ளது. அதனை உடனடியாக தீர்க்க முடியாது என்று சொன்னார்கள்.

அவ்வாறிருந்தும் நங்கள் இறுதியாக ஜனாதிபதி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக இவ் 6 கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலொசித்தது தான் சென்றோம். மக்களுடைய தேவைக்காக ஒற்றுமையாக செயற்பட்ட நாங்கள் இந்த தேர்தலுக்காக பிரிந்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் எவரால் கொண்டுவரப்பட்டது?

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கு மனமார்ந்து சேவையாற்ற வழங்கியதற்கு வணங்குகின்றேன். விடுதலையின் கட்சியாகவே இனி திகழும். விடுதலை தலைவனின் அங்கீகாரம் ஊடாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, இந்த கட்சிகளின் பெயர்கள் உச்சரிக்கப்படாது.

தேர்தலின் பின்னர் இணைவோம் என பொய் பிரசாரம் செய்கின்றனர். அவ்வறை இணைவதாயின் எம்

குத்து விளக்கு சின்னத்தில் தான் தேர்தல் கேட்க வேண்டும் . பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என அறைகூவல் விடுகின்றோம்.

ஒவ்வொரு நிலமும் திணைக்களத்தாலும், முப்படையாலும் அபகரிக்கபடுகின்றது. ஜனாதியிடம் கேட்டால் கட்டளை இடுகின்றார். அதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

பேச்சு வார்த்தை என்பது இப்பொழுது தம் சுயநலத்திற்காக அழைத்து பேசிய பின்னர் பேசிவிட்டோம் என்று சொல்லும் நிலையிலே உள்ளது. அதனால் நாம் ஒன்றாக சர்வகட்சி மாநாட்டிற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். காரணம் நிலத்தை அபகரிக்கின்ற,நிலத்தை விடுகின்ற சூழலை கேட்டோம் அத்தோடு அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் கிடைக்கவில்லை.

தென்னிலங்கையில் எம் நிலங்களை பறிக்கின்ற நிலை மாறும் ஒற்றுமையின் சக்தியாக செயற்படக்கூடிய

வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கும். வரும் 4 ஆம் திகதி சுதந்திரதின விழாவிலே அந்த சுத்தந்திரம் எமக்கில்லை என சொல்லுகின்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள பல்கலைக்கழக மாணவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி உங்களுடன் பயணிப்போம் என்பதை செய்தியாக கூறுகின்றோம்.

ஆகவே எமது போராட்டம் எதுவானாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் நிற்கும். எமது வீர மறவர்களின் கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. மண்ணினதும் மக்களினதும் விடுதலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக அணிதிரண்டு மக்களாக செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தாலும் குத்துவிளக்கே சின்னமாக இருக்கும் – ஜனா எம்.பி

இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட விரும்பினால் அதை தடுக்க மாட்டோம். ஆனால் கூட்டமைப்பின் சின்னமாக தொடர்ந்து குத்துவிளக்கு சின்னம்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டில் ஆனந்தசங்கரி, கருணா செய்ததை போல, தற்போது தமிழ் அரசு கட்சியும் தமிழ் மக்களிற்கு துரோகமிழைத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இன்று மட்டக்களப்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் முரண்பாடுகளின் மத்தியில் இருந்து ஆயுத இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். விடுதலைப்புலிகள் முப்படைகளுடன் மிகப்பலமாக இருந்த காலப்பகுதியில், தமிழர்களிற்கு பலமான அரசியல் குரலும் இருக்க வேண்டுமென்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

முதன்முதலாக 2002ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டது. 2004ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி தனது கட்சியையும், சின்னத்தையும் தூக்கிச் சென்றார்.

2004ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிளவடைய வைத்தார். அந்த நேரம் கூட, தமிழ் மக்களிற்கு பெரிய பாதிப்பேற்படவில்லை. புலிகள் மிகப்பலமாக இருந்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

2010ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் வெளியேறினார். 2015 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது. 2016 இல் விக்னேஸ்வரன் வெளியேறினார். இருந்தும் 3 கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்ட நிலையில், தமிழ் மக்கள் மிக பலவீனமாக இருக்கும் இந்த நிலையில்- சர்வதேச அழுத்தங்கள் மூலம் தமிழ் மக்களிற்கு நிரந்தரமான தீர்வை பற்றிய பேச்சை ஆரம்பிக்கக்கூடிய நிலையில்- இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து வெளியேறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என தமிழ் அரசு கட்சி கூறுகிறது. தமிழ் அரசு கட்சியுடன் மாத்திரமல்ல, இன்று பிரிந்து நிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், விக்னேஸ்வரன் தரப்பு உள்ளிட்ட தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். ஆனால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களிற்கும் இழைத்த துரோகங்களை மறக்க மாட்டோம்.

2004 இல் ஆனந்த சங்கரி, கருணா போல, தற்போது தமிழ் அரசு கட்சி இழைத்த துரோக அனுபவங்கள் எமக்குள்ள காரணத்தினால், எவருடைய கட்சி சின்னமும் அல்லாமல் பொதுவான சின்னமான குத்துவிளக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்கிறது. தமிழ் அரசு கட்சி தேர்தலின் பின்னர் மக்கள் புகட்டும் பாடத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படலாம். ஆனால், குத்துவிளக்கு சின்னம்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக இருக்கும்.

வீட்டு சின்னத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது எனத் தெரிவித்தார்

சீனாவின் 2 வருட கால கடன் தவணை அவகாசம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்

இலங்கையின் கடன்கள் தொடர்பில் சீனா இணங்கியுள்ள 2 வருட தவணை காலம் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுடன் வேறுபடுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

10 வருட தவணை காலம் மற்றும் 15 வருட மறுசீரமைப்பு காலத்துடன் இலங்கையின், சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஆதரவளிக்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

எனினும் சீனாவின் அரச வங்கிகள் 2 வருட அவகாசத்தை மட்டுமே வழங்க தயாராக உள்ளன. இது இலங்கைக்கு மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தலாம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் கடந்த தசாப்தத்தில் சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் முக்கிய நாடுகளாக இருந்தன. அத்துடன் தமது நாடுகளில் வெள்ளை யானை திட்டங்களை உருவாக்க பீய்ஜிங்கில் இருந்து அதிக வட்டி கடன்களைப் பெற்றுக்கொண்டன.

எனினும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவையான உதவிகளுடன் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சீனா உற்சாகத்தை காட்டாமைக் காரணமாக, இலங்கையும், பாகிஸ்தானும் இன்று திவாலாகிவிட்டன.

இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் அனுட்டிப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

இவர்களில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவுர்களும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் ஆலோசனையின்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சர்வகட்சி மாநாட்டில் ரணில்

வடக்கு கிழக்கில் இருக்கும் காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அவற்றை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட்டு தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி யின் ஆலோசனைப்படி செயற்படின் இலங்கை ஆரஜென்டீனாவின் நிலைக்கு தள்ளப்படும் – ஹர்ஷ

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற கூடாது என குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தமிழீழம் மலரும் – விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும். தமிழீழம் மலர அது வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். – இவ்வாறு உத்தர லங்கா சபாவவின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

“13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே, இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால் யாராவது நாடாளு மன்றத்தில் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும்’ என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்த உத்தர லங்கா சபாவவின் தலைவர் விமல் வீரவன்சவிடம் ஜனாதிபதியின் மேற்படி கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்து விட்டோம்.

தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் ரணில் விக்கிரமசிங்க.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத் தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக் கூட்டத்தை நாம் புறக்கணித்தோம். என்றார்.