ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு; பங்கேற்காத இலங்கை, இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை.

ஜேர்மனி முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக மொத்தம் 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, மாலி, எரித்திரியா மற்றும் நிகரகுவா ஆகிய ஏழு நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன.

சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் கூட்டையே கூட்டமைப்பு என கூறினர் – கஜதீபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சியினர் வெளியேறிய பின்னரும், நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என கூறிக்கொண்டிருந்தது ஏன் என்பது இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப்போவதைத்தான் அவர்கள் அப்படி கூறினார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்.

உள்ளூராட்சிதேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் கந்தரோடையில் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபைக்கான கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றியிருந்த போதும், 7 ஆசனங்களை கைப்பற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

இதில் நாங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அது வெட்கப்பட வேண்டிய விடயம். எல்லோரும் ஒரே அணியாகவே அப்போது செயற்பட்டோம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமையை குலைக்கக்கூடாது என்பதற்காக, எமது எதிர்ப்பை கட்சிக்குள் இயன்றவரை பிரயோகித்தோம். அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டன என்பது உங்களிற்கு தெரியும். எங்கள் கருத்தை அப்போது அவர்கள் யாரும் செவிமடுக்கக்கூட தயாராக இல்லை.

கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயக பண்புகள் நீடிப்பதற்கு தடையாக இருந்த தமிழ் அரசு கட்சி தானாகவே கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்று விட்டது. இப்பொழுது கூட்டமைப்பிற்குள் கூட்டு முடிவெடுக்கும் ஜனநாயக அம்சம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இனிமேல் அப்படியான தவறுகளை இழைக்கும் என யாரும் கருத வேண்டாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியபோது, தொழில்நுட்ப ரீதியாக தனித்து போட்டியிட போவதாக எம்.ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால் அதன் பின்னர் திடீரென, நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்த போது, ஆபிரகாம் சுமந்திரன் வழக்கம் போல பொய் சொல்கிறார் என்றுதான் தோன்றியது.

தனிக்கட்சியொன்று எப்படி கூட்டமைப்பாகும் என்ற சந்தேகம் பலருக்குமிருந்தது. தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் அந்த சந்தேகத்தை பகிரங்கமாக எழுப்பியிருந்தார். தனிக்கட்சியொன்றை கூட்டமைப்பு என குறிப்பிட முடியாதென்பது சாதாரண அறிவுள்ள எல்லோருக்குமே தெரியும்.

ஆபிரகாம் சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி. இந்த விவகாரத்தில் அவர் பொய் சொல்லவில்லை.

நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின் கூட்டமைப்பாக சேர்ந்து செயற்படுவோம் என அவர் சொன்னது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப் போவதைத்தான் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

இது திடீரென நடந்த நிகழ்ச்சியல்ல. கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், முஸ்லிம் சுயேச்சைக்குழுவின் தாராசு சின்னத்தில் போட்டியிடவில்லை. இது நீண்டகால திட்டம்.

இதே தராசு சின்னத்தில் வேட்புமனு மன்னார் நகரசபையில் நிராகரிக்கப்பட்ட போது, அதற்காக முன்னிலையானதும் சுமந்திரன்தான் என்றார்.

ரணிலுக்கு பைத்தியம்; மக்களின் வாக்குரிமையை தடுப்பவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள்: யாழில் சஜித் உறுதி!

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார பணிகள் நடந்து வந்தன. இது இலங்கையிலுள்ள அனைவரும் தெரிந்த விடயம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டும் தெரியவில்லை. அவர் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. அப்படியிருந்தும், அதில் தலையிட்டு, சர்வாதிகாரமாக தேர்தலை தடுக்கிறார். அரசியலமைப்பை மீறி தேர்தலை தடுக்கும் யாரும் எதிர்காலத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று (23) யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார பணிகள் நடந்தது நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களிற்கும் தெரியும். ஒருவருக்கு மட்டும் தெரியாது. அவர் ஜனாதிபதி. அவருக்கு தேர்தலை பற்றி எதுவுமே தெரியாது.

அவர் மாத்திரமே தேர்தல் இல்லை, தேர்தலுக்கு நிதி வழங்கும் அதிகாரம் என்னிடமில்லை., அப்படி நிதி வழங்குவதாயினும் இப்போது நாட்டில் தேர்தலுக்கு அவசியமில்லையென்கிறார்.

இது சர்வாதிகாரமான ஆட்சி முறை.ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும். தேர்தலை பிற்போடுவதால் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்படுகிறது. இது அரசியலமைப்பை மீறும் செயல்.

அரசியலமைப்பை மீறும் யாரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறேன்.

தேர்தல் தொடர்பில் தவறான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்கு பொறுப்புக்கூற வேண்டி வரும் என்றார்.

ரணிலுக்கு பைத்தியம்

யாழ்ப்பாணம், மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா-

ஜனாதிபதி நினைக்கிறார் தான் விரும்பிய நேரத்தில் தேர்தலை நடத்தலாம், வேட்புமனுக்களை கொடுக்கலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை சந்திக்கலாம் என.

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி, தேர்தல் செல்லுபடியற்றது என குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். அப்படி செல்லுபடியற்ற ஒரு தேர்தலுக்கு உங்கள் கட்சி ஏன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் இல்லையென தெரியாதா.

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான கருத்தை முன்வைத்துள்ளார். மக்களின் வாக்குரிமையுடன் விளையாட வேண்டாம். வாக்குரிமை என்பது ஜனாதிபதியினதோ, எதிர்க்கட்சி தலைவரினதோ விருப்பமல்ல. அது மக்களின் அடிப்படை உரிமை.

இன்று பாராளுமன்றத்தில் நடந்த பைத்தியக்காரத்தின் மூலம், தேர்தலை பிற்போடுவதன் பின்னணியில் இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது. ஐ.தே.க, பெரமுனவின் ஜனாதிபதி ரணிலே அவர்.

தேர்தலை பிற்போடுவதை நாம் ஏற்கோம். மக்களின் வாக்களிக்கும் உரிமையுடன் விளையாட வேண்டாம்.

நாட்டில் 220 இலட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் மக்கள் அங்கீகாரமில்லாத ஜனாதிபதியை பொதுஜன பெரமுன தெரிவு செய்துள்ளது. அவர் மக்களின் உரிமைகளுடன் விளையாடுகிறார். அனைத்து மக்களும் இணைந்து ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

குருந்தூர்மலை காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு தமிழ்மக்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

எனவே முதலில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு தண்ணிமுறிப்பு தமிழ் மக்கள் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருந்தூர்மலைப்பகுதியில் இன்று (23) தொல்லியல் திணைக்களத்திற்கு காணி அளவீடு செய்வதற்கென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத்திணைக்களம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இதன்போதே தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை தொல்லியல் திணைக்களத்திற்கான நிலஅளவீட்டு முயற்சி, அப்பகுதித் தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானித் தகவலின்படி குருந்தூர்மலைக்குரிய தொல்லியல் பிரதேசமாக சுமார் 78ஏக்கர் காணி காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

அதேவேளை வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் குறித்த 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை கடந்த 2022ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி தொல்லியல் திணைக்களம் அபகரித்ததுடன், அத்துமீறி எல்லைக் கற்களும் நாட்டியிருந்தது.

அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி அபகரிக்கப்பட்ட பகுதிகளுக்குள், தண்ணிமுறிப்பு தமிழ் மக்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், பயிர்ச்செய்கைக்காணிகள், பாடசாலைக் காணி, தபால்நிலையக்காணி, நெற்களஞ்சியசாலைக்குரிய காணிகள் என்பன அடங்குகின்றன.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து தண்ணிமுறிப்புத் தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான சூழலில் அண்மையில் வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்திற்கென, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக ஐந்து ஏக்கர் காணிகள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தொல்லியல் திணைக்களம் கோருகின்ற 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, மேலும் ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து எடுத்துக்கொள்வதற்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர், மற்றும் நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

குறித்த நில அளவீட்டுக்கு தண்ணிமுறிப்பு பகுதி தமிள் மக்கள் தமது கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண நிலமை காரணமாக தாம் அப்பகுதியில் இருந்து வெளியேறியபோதும் இதுவரையில் தமது பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

எனவே தொல்லியல் திணைக்களம் அபகரித்துள்ள தமது குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவித்து, முதலில் அக்காணிகளில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு அங்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த பாரதேசசெயலாளர், முதலில் ஐந்து ஏக்கர் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்கு அளவீடு செய்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, வனவளத் திணைக்களத்திடம் வழங்கப்பட்ட பிற்பாடு, வனவளத் திணைக்களத்திடமிருந்து காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுமெனவும் பிரதேசசெலாளர் தெரிவித்தார்.

எனினும் பிரதேசசெயலரின் இக்கருத்தினை ஏற்கமறுத்த தமிழ் மக்கள், யுத்தம் மௌனிக்கப்பட்டு சுமார் 13வருடங்களுக்கு மேலாகின்றபோதும் தாம் தமது பகுதிகளில் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இனியும் தாம் யாரையும் நம்பத் தயாரில்லை எனவும், முதலில் தமது காணிகளால் தம்மை மீளக்குடியிருத்துமாறும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பநிலைமையாலும், தொல்லியல் திணைக்களம் அங்கு வருகைதராமையாலும் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவித்து பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தை(ரெலோ) சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற கட்டளையை மீறி முற்றுப் பெற்றுள்ள குருந்தூர்மலை பௌத்த கட்டுமானம்

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு அமைந்துள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06/2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது.

இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர்மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும்போது பூரணமடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவநேசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமானம் வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

– ஒளிப்படங்கள் – கே .குமணன்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரபாகரனை நிறுத்த வேண்டுமென சம்பந்தன்,சுமந்திரன் கோரிக்கை- சபா.குகதாஸ்

2019 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது சுமந்திரன் சம்பந்தன் உள்ளிட்ட தரப்புகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென தெரிவித்திருந்தாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென கோரிய தரப்புக்கள் இன்று தலைவர் காட்டிய சின்னம் வீடு என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் சபா.குகதாஸ் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சிய்ன வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தராசு சின்னத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளரை போட்டியிட வைப்பதற்கு சுமந்திரன் எடுத்த முயற்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக கோடான கோடி விலை கொடுத்த மண்ணில் நின்று கொண்டு தலைவர் காட்டிய சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டுமென கோருவதற்கு என்ன தகுதி உண்டு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதி யுத்தம் நடக்கின்ற போது பாதுகாப்பாக வெளிநாட்டில் இருந்த பின்னர் மீண்டும் யுத்தம் நிறைவடைந்ததும் நாட்டிற்கு வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்பாளராக இருந்த சாணக்கியன் தலைவர் காட்டிய சின்னம் என சொல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழரசு கட்சி இவ்வளவு கீழ் நிலைக்கு சென்றுவிட்டதாக என்ற கேள்வி எழுவதாகவும் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தராசு சின்னத்தில் வேட்பார்களை அறிமுகப்படுத்தியுள்ள தமிழரசு கட்சி தலைகாட்டிய சின்னம் தராசு என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார். தராசு சின்னம் தலைவர் காட்டிய சின்னம் என சாணக்கியன் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி கூறியது அப்பட்டமான பொய் – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தான் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் விதமாகவே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பவில்லை எனவும் ஜனாதிபதி மக்கள் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுவதாகவும், உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அநுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது.

ஜனநாயகம், லிபரல்வாதம் பற்றி பரப்புரை நடத்தும் ஜனாதிபதியின் அரசியல் போக்கு தற்போது மாறியிருப்பதை இன்றைய பாராளுமன்ற நடத்தை நன்றாக புலனானது.

உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் இறையாண்மை, மக்கள் ஆணை, தேச நலனை கருத்திற் கொண்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே சிந்தித்து தமது அரசியல் நடந்தையை ஒழுங்கமைத்திருக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். அதற்கு முன்னதாக அநுர குமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனக்கு அமைச்சுப் பதவியை ஏற்குமாறு 2 முறை வேறுவேறு ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார். எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள்.

இதை தான்டிய ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமே எமக்குள் இடம் பெறவில்லை. இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென்று, அல்லது அவரது பிரதிநிதிகள் மூலமோ அவ்வாறான குறுச்செய்தி SMS ஒன்றை ஜனாதிபதி ரணில் எனக்கு அனுப்பவில்லை.

அவர் அப்படி ஒரு SMS எனக்கு அனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தேர்தல் தொடர்பான தீர்மானம் நியாயமற்றது – இலங்கை திருச்சபை அறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது எனவும் தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை திருச்சபை அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

சில தினங்களுக்கு  முன்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசுக்கு தேர்தல் நிதியை நிறுத்த  எந்த தார்மீக உரிமையும் இல்லை என இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் கடன்களை மீள செலுத்த தவறிய பிறகும், தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசாங்கமும் பதவியில் நீடிக்க சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது

கல்வி அமைச்சிற்குள் நுழைந்த ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டளர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததுடன், சற்று நேரத்தில் கல்வி அமைச்சிற்குள் நுழைந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னரே பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் கல்வி அமைச்சிற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டக்காரர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்கு மாணவர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.