சீனாவின் 2 வருட கால கடன் தவணை அவகாசம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்

இலங்கையின் கடன்கள் தொடர்பில் சீனா இணங்கியுள்ள 2 வருட தவணை காலம் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுடன் வேறுபடுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

10 வருட தவணை காலம் மற்றும் 15 வருட மறுசீரமைப்பு காலத்துடன் இலங்கையின், சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஆதரவளிக்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

எனினும் சீனாவின் அரச வங்கிகள் 2 வருட அவகாசத்தை மட்டுமே வழங்க தயாராக உள்ளன. இது இலங்கைக்கு மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தலாம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் கடந்த தசாப்தத்தில் சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் முக்கிய நாடுகளாக இருந்தன. அத்துடன் தமது நாடுகளில் வெள்ளை யானை திட்டங்களை உருவாக்க பீய்ஜிங்கில் இருந்து அதிக வட்டி கடன்களைப் பெற்றுக்கொண்டன.

எனினும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவையான உதவிகளுடன் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சீனா உற்சாகத்தை காட்டாமைக் காரணமாக, இலங்கையும், பாகிஸ்தானும் இன்று திவாலாகிவிட்டன.

இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் அனுட்டிப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

இவர்களில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவுர்களும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் ஆலோசனையின்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சர்வகட்சி மாநாட்டில் ரணில்

வடக்கு கிழக்கில் இருக்கும் காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அவற்றை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட்டு தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி யின் ஆலோசனைப்படி செயற்படின் இலங்கை ஆரஜென்டீனாவின் நிலைக்கு தள்ளப்படும் – ஹர்ஷ

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற கூடாது என குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தமிழீழம் மலரும் – விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும். தமிழீழம் மலர அது வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். – இவ்வாறு உத்தர லங்கா சபாவவின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

“13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே, இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால் யாராவது நாடாளு மன்றத்தில் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும்’ என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்த உத்தர லங்கா சபாவவின் தலைவர் விமல் வீரவன்சவிடம் ஜனாதிபதியின் மேற்படி கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்து விட்டோம்.

தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் ரணில் விக்கிரமசிங்க.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத் தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக் கூட்டத்தை நாம் புறக்கணித்தோம். என்றார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் ; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இன்னமும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்பாடு செயப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பை நினைவுகூர்ந்திருக்கும்  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட் டெவி, தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு என்பவற்றை மனதிலிருத்திச்செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனேடிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ், இருப்பினும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் பிரென்ச், டோன் பட்லர், சாரா ஜோன்ஸ் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகியோர் தமிழ் மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான ஆதரவு வழங்குங்கள்; 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெ. காங்கிரஸிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக இதனை முன்னெடுக்குமாறு 6 அமைப்புகளும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

1. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு
2. வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு
3. நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம்
4. இலங்கையின் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு
5. ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் நடவடிக்கை குழு
6. உலகத்தமிழர் அமைப்பு

ஆகிய 6 அமைப்புகளே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பியுள்ளன. புத்தாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வருவதைப் போன்று, இலங்கையில் 7 தசாப்த காலத்துக்கும் மேலாக தொடரும் இனப்பிரச்னைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காங்கிரஸை வலியுறுத் துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தம், தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இறுதிக்கட்ட போரின் போது, சுமார் 1,46,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கருத்து தெரிவித்திருந்ததுடன், ‘இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக’ அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறித்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதை முன்னிறுத்திய அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பயன்படுத்துமாறும், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாக 6 புலம் பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 402 உள்ளூராட்சி உறுப்பினர்களை தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள்

யாழ். நிர்வாக மாவட்டத்தில் 17 உள் ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ். நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த முறை தேர்தலில் யாழ்.மாவட் டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேச் சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேச்சைக் குழுக் கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப் பதற்கென யாழ்.மாவட்டத்தில் 4 லட் சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த வகையில் 243 வாக்கு எண்ணும் நிலையங்கள் யாழ். மாவட்டம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன. அந்த 243 வாக்களிப்பு நிலையங் களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக்கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களு மாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர்.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக யாழ். மாவட்டத்தில் 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.

பிரான்ஸ் செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2022 டிசெம்பர் 1 ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவை படகு, புத்தளம் பத்தலங்குண்டுவவிலிருந்து 03 டிங்கி படகுகள் மூலம் மாற்றப்பட்ட 64 சட்டவிரோத குடியேற்றவாசிகளை டிசெம்பர் 13ஆம் திகதி ஏற்றிச் சென்றதாக கடற்படை தெரிவித்தது.

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற குழுவினரை ஜனவரி 14ஆம் திகதி கைது செய்த அந்த தீவின் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட குழுவை அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஜனவரி 25ஆம் திகதி அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் படகில் பணிபுரிம் 03 ஆண்கள் உட்பட 33 ஆண்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 02 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 02 ஆண்களும் 01 பெண்ணும் உட்பட 38 பேர் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கல்பிட்டி மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள், நபரொருவருக்கு 4 இலட்சம் ரூபாயிருந்து 10 இலட்சம் ரூபாயை வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.