ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது

2023 ஆகஸ்ட் இறுதி வரை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இன் கீழ் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது என்று வெரிடே ரிசர்ச் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டதிலிருந்து,எட்டு வருடங்களாக, தீர்மானத்தின் 61.1% உறுதிப்பாடுகள் ‘மோசமான’ அல்லது ‘இல்லை’ என்ற அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், (1) பரந்த நிலைமாற்று நீதி செயல்முறைகளில் ஈடுபடுதல்; (2) காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல்; (3) இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல்; (4) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்துதல்; (5) வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களை குற்றமாக்குதல்; (6) மற்றும் (7) சிறப்பு நடைமுறை ஆணை வைத்திருப்பவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற 7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் 2015 ஆம் ஆண்டு முதல் ‘மோசமான நிலையில் இருக்கும் சில முக்கிய கடமைகளாக, பொதுமக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்; (2) ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள், (3) இந்தத் தாக்குதல்களின் குற்றவாளிகளைக் கண்டறிதல் மற்றும் (4) எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பது போன்ற விடயங்களிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என வெரிடே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌ்யிட்டுள்ளது.

தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக Daily Mirror பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர் திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜயவீர, மவ்பிம மக்கள் கட்சியை பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் வியத்மக அமைப்பிற்கு இணையாக புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதுடன், கல்விமான்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் Daily Mirror பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சியும் திலித் ஜயவீரவின் அமைப்பும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மவ்பிம மக்கள் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார, குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த செய்தி குறித்து தொழிலதிபர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Daily Mirror பத்திரிகையின் நண்பர்களே, இங்குள்ள தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் தவறாக வழிநடத்துகிறது. தயவுசெய்து என்னை அழைக்கவும், நான் உங்களுக்கு சரியான விடயங்களை வழங்குகின்றேன்.

என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் : ரெலோ வினோ எம்.பிக்கு அழைப்பாணை

எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முதன் முதலாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செனல் – 4 விசாரணைக்குழுவை நிராகரிக்கின்றோம் – கத்தோலிக்க திருச்சபை

செனல் 4 காணொளி விவகாரம் தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” செனல் 4 வினால் கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய கிடைத்தது.

அதேபோன்று அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிய கிடைத்தது.

இன்னுமொரு தெரிவுக்குழு அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுவால் இந்த விசாரணைகள்பாரபட்சம் இன்றி நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இந்த கேலியான முயற்சிகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.

செனல் 4 வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மட்டுமல்ல அதற்மேல் விசாணைகளை மேற்கொண்டு தெளிவாக ஆரோக்கியமாக பாரபட்சம் இன்றி ஒழுங்குமுறையான விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

ஆரோக்கியமான சர்வதேச விசாரணை குழுவின் விரிவான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி! பிள்ளையானின் கட்சியின் முக்கியஸ்தர் கூறிய உண்மைகள்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சனல் 4 விவகாரத்தினை தனது அரசியலுக்காக பயன்படுத்தமுனைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (10.09.2023) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு வாய்துறக்காத நிலையில் சனல் 4 விவகாரம் குறித்து மட்டும் பேசுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் பின்வரும் காணொளியில் பதிவாகியுள்ளன.

https://www.facebook.com/watch/?v=855161639077353

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன-ஐநாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் உரிய தகவல்கள் ஆதாரங்களை வழங்குவதற்காகவும் உரிய நீதித்துறை மற்றும் ஏனைய செயற்பாடுகளிற்கு ஆதரவை வழங்குவதற்காகவும் தனது அலுவலகம் ஆதாரங்கள் தகவல்களை சேகரிக்கும் பாதுகாக்கும் ஆராயும் நோக்கில் பொறுப்புக்கூறல் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தனது திட்டத்திடமிருந்து தகுதிவாய்ந்த அதிகாரிகள் அதிகளவில் வேண்டுகோள்களை விடுக்கின்றனர் குறிப்பாக பத்துபேர் குறித்த விபரங்களை கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உரையாடலின் போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கானஇலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 54 அமர்வின் ஆரம்பத்தில்நேற்று இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை சந்தேகத்திற்குரிய ஆணை என வர்ணித்துள்ள அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழிவகுத்தஇரண்டு 46.ஃ1 -51.ஃ1 தீர்மானங்களையும் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என்பதை நான்ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன்.எழுத்துமூல அறிக்கைகளையும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் நாங்கள்நிராகரிக்கின்றோம்.

இந்த தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களைஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில்வாக்களிப்பதைதவிர்த்தன என்பதை நாங்கள் மீண்டும்நினைவுபடுத்தவிரும்புகின்றோம்.குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை.ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமைமுன்னொருபோதும் இடம்பெறாத விடயம்.

இது மனித உரிமைபேரவையின் உறுப்பு நாடுகள் பேரவைக்கு வழங்கிய ஆணைக்குஅப்பால் செல்கின்றது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.இந்த தீர்மானங்கள் உள்விவகாரங்களில் தலையிடுபவை சமூகங்களைதுருவமயப்படுத்துபவவை.

மேலும் இந்த தீர்மானங்களை மனித உரிமைகளிற்கு அப்பாற்பட்டகாரணங்களிற்காகவும் தங்களின் உள்நாட்டு அரசியலுக்காகவும் ஒருசில நாடுகள் பின்பற்றுகின்றனஇந்த தீர்மானத்தின் நிதிசார்ந்த தாக்கங்கள் குறித்து பல நாடுகள்கேள்வி எழுப்பியுள்ளனஇது பேரவையினதும் உறுப்புநாடுகளினதும்வளங்கள் மீது பயனற்றவிதத்தில் செலவுகளை உருவாக்ககூடியது என்பதைஇலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது.எனினும் பல்தரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்றநாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில்கொண்டும்.இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும்பேணும

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை இடைநிறுத்தவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள்

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்கள் சர்வதேசதாரதங்களை பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 அமர்வு இன்று ஆரம்பமானவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில்எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொண்ள்ள சவால்களை கவனத்தில் எடுத்துள்ள அதேவேளை கருத்துசுதந்திரம் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் இலங்கையின் அனைவரினதும் பொருளாதார சமூக கலாச்சார சுதந்திர உரிமைகள் ஆகியவற்றை உட்பட மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மைக்கு வழிவகுத்ததை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் பலவந்தமாக காணாமல்செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஒன்றுகூடுதலிற்கான உரிமையை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அது சர்வதேச சட்டங்கள் தராதரங்களை முழுமையாக பின்பற்றும்வரை இடைநிறுத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நி;றுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

பாரிய சைபர் தாக்குதல்: பல அரச நிறுவனங்களின் தரவுகள் அற்றுப்போகும் அபாயம்

பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது.

இதற்கமைய gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ICTA உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சண்டே டைம்ஸ்” பத்திரிகை இன்று(10) விரிவாக தகவல்களை வௌியிட்டிருந்தது.

gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அரச நிறுவனங்களில் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகள் பல உள்ளன.

இந்த மின்னஞ்சல் ஊடாக மிகவும் முக்கிய அரச தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இந்த தாக்குதல் ransomware தாக்குதல் எனவும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகின்றது.

ransomware தாக்குதல் என்றால் என்ன?

ஏதேனும் ஒரு மின்னஞ்சல் ஊடாக கிடைக்கும் இணைப்பு அல்லது Link-ஐ கிளிக் செய்யும் போது அந்த முழு மின்னஞ்சல் கட்டமைப்பையும் ஹெக்கரின் பிடிக்குள் கொண்டுவரப்படுவதே ரான்சம் வெயர் தாக்குதல் எனப்படுகிறது.

இதனை அடுத்து இந்த மின்னஞ்சல் கட்டமைப்புகள் உள்ள தரவுகளை அணுகவும் அவற்றை பயன்படுத்தவும் அதன் உரிமையாளரால் முடியாமற்போகும்.

இந்த ransomware தாக்குதலின் பின்னர் என்ன நடந்தது.

ransomware தாக்குதலால் சுமார் ஐயாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ICTA நிறுவனம் ஏற்றுக்கொள்கின்றது.

ஓவ் லைன் பெக்கப் எனப்படுகின்ற மேலதிக தரவுக் கட்டமைப்பொன்று இருக்காததால் இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டரை மாதங்கள் கடந்தும் ஈமேல்கள் இல்லாமற்போயுள்ளன.

ICTA தற்போது என்ன கூறுகின்றது.

இவ்வாறு தரவுகள் அழிவடையும் சம்பவங்கள் மீள நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் நாளாந்தம் ஓவ் லைன் பெக்கப் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தவிர பயன்படுத்துகின்ற செயலிகளை புதுப்பிக்கவும் வைரஸ் தாக்குதல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு முறைகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ICTA கூறியுள்ளது.

காணாமற்போயுள்ள முக்கிய அரச தகவல்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமா?

தமது நிறுவனம், SL CERT எனப்படும் இலங்கை கணினி அவசரநிலை ஆயத்தக் குழுவுடன் இணைந்து அற்றுப்போயுள்ள தகவல்களை மீளப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் மூலோபாய தொடர்பாடல் தொடர்பான பணிப்பாளர் சம்பத் டி சில்வா கூறினார்.

Posted in Uncategorized

கிழக்கு கடற்பரப்பில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவானது

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

4.65 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்பரப்பில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவொரு தாக்கமோ, சுனாமி அபாயமோ ஏற்படவில்லை என பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த காலங்களில் நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறான சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized