இராணுவ அதிகாரிக்கெதிரான தடை- இலங்கையால் எதுவும் செய்ய முடியாது – அலி சப்றி

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மேஜர் பிரபாத் புலத்வத்தைக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மோர்னிங்கிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை இலங்கை அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சுயாதீனமான செயற்பாடு அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளனர்.இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் கரிசனைகளை வெளியிடுவோம் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கமாட்டோம், என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம் ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைமைகளுடன் விரைவில் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை – திஸ்ஸ விதாரண

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதை போன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொண்டேன்.

பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து கருத்துரைக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

ஐக்கிய நாட்டுக்குள் பிளவுப்படாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

இரண்டு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் அவரால் பதவி வகிக்க முடியாமல் போனது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. இவரது செயற்பாடுகள் எதிர்காலங்களில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்,அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.

ரணிலுக்கு வெகுவிரைவில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி அதிகரிப்பு பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் பாடம் கற்பித்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.

ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இனிதும பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் தற்போது உண்மையான அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டுக்கும், தமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளினால் நாட்டை முன்னேற்ற முடியாது,அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். இவர் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை,கடன் செலுத்தாமல் அந்த நிதியை கொண்டு எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 12ஆம் திகதி செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை செலுத்த போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால் பொருள் மற்றும் சேவைகளின் கட்டணம் சடுதியாக உயர்வடைந்தது.சமூக பாதுகாப்பு அறவீட்டுதொகை என்ற புதிய வரி அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிதி சூறையாடப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளிறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 400 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டின் வங்கி கட்டமைப்பின் பிரதான நிலை தரப்பினர்களில் 50 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி கொள்கையின் பெறுபேறு.

மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் தக்க பாடம் கற்பித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம் நிறுவனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபம் பெறும் நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது.அரச நிதியை கொள்ளை அடிப்பது ராஜபக்ஷர்களின் கொள்கை, அரச வளங்களை விற்பனை செய்வதும், மோசடியாளர்களுடன் டீல் வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணைக்கு முரணாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். தேர்தலை நடத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச வரபிரசாதம், பாதுகாப்பு வழங்குவதை தவிர்த்துக் கொண்டு அந்த நிதியை கொண்டு தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அதன் விளைவு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார் என்றார்.

ஆழிப் பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

உலகை உலுக்கிய  அனர்த்தங்களில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் பேசப்படுகிறது. சுனாமி பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களும் ஏனைய உயிர்களும் இன்று வரை நினைவுகூரப்பட்டு வருகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் உயிரிழப்புகள் மட்டுமன்றி, பல்வேறு பிரதேசங்கள் மற்றும் உடைமைகளும் அழிந்துபோன தடயங்களை தற்போதும் காண முடிகிறது.

பல இலட்சம் பேரை கடலலை காவு கொண்ட அந்த சோக நாளினையும், அதில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூரும் தினமானது இன்று திங்கட்கிழமை (டிச. 26) நாட்டின் பல பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழகம்

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில்  இன்று திங்கட்கிழமை (டிச 26) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு  அகவணக்கம் செலுத்தி   ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி உடுத்துறை

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு , தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004 டிசம்பர் 26 அன்று சுனாமி அனர்த்தத்தால் காணாமல்போய், பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தைக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

இதனால் அபிலாஷ் அன்றிலிருந்து ‘சுனாமி பேபி’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

மட்டக்களப்பு 

பின்னர், மரபணு பரிசோதனை மூலம் அந்த குழந்தை மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராசா தம்பதியின் மகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது அபிலாஷுக்கு 18 வயது. அவரது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அபிலாஷ் இன்று தனது பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் நடந்தேறின.

இதில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட செயலகம்

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம்   தேசிய பாதுகாப்பு தினமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்  நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரீ.ஏ.சூரியராஜா, மதத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திலும், முல்லைத்தீவு கள்ளப்பாடு மைதானத்திலும், புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும், கள்ளப்பாடு பாடசாலையிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறியழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற ஆழிப்பேரலை (சுனாமி) பேரனர்த்தத்தில் முல்லைத்தீவில் மாத்திரம் 3352 பேர் காவு கொள்ளப்பட்டது. மேலும், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதுடன் உடைமைகள், வாழ்விடங்கள் என்பனவும் அழிந்தன.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த ஒரு தொகுதி உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று (டிச. 26) காலை நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

சுமார் 1800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி நினைவுத்தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களது உறவினர்கள் கதறியழுது மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிண்ணியா 

கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுனாமி நினைவுதினமானது கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த 2004 ‍டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும், பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வாழைச்சேனை 

சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18ஆவது நினைவஞ்சலியும், ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.

பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மௌன இறைவணக்கம், நினைவுச் சுடர் ஏற்றல், மத வழிபாடுகள்,  அன்னதானம் ஆகியன இடம்பெற்றதோடு, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசத்தில் சுனாமி பேரலையினால் 512 பேர் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலனை

21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட  மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள  அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம்  மிக விரைவில் எடுக்கப்படவுள்ளது.

இதற்காக  எதிர்வரும் வியாழக்கிழமை  அரசியலமைப்பு பேரவை  கூடவுள்ளதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதித்துவம்  தொடர்பில்  112  பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நவம்பர் 28ம்  திகதியுடன் முடிவடைந்தது.

எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், சிறந்த மற்றும் நேர்மையானவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயரைப் பெற்றவர்கள்  குறித்த பேரவை உறுப்பினர் பதவிக்கு  விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பொருத்தமான மூவரை தெரிவு செய்வது  தொடர்பில் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலிகப்படவுள்ளதாக அறிய முடிகின்ரது.

அதன் பின்னர் அவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் – நிமல் சிறிபால

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என கப்பற்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி தொடர்பில் தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இக்கட்டான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் ஜனநாயக போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.

அரகலயவில் முன்னின்று செயற்பட்ட கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்தளவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் அனைவரையும் மக்கள் தமது பிரநிதிகளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.நாட்டு மக்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அரசியல் ரீதியான தீர்மானத்தை சிறந்த முறையில் எடுக்கமாட்டார்கள்.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களின் 8800 உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5100 ஆக குறைப்பதற்காகவே புதிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.புதிய எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற வேண்டும் என்றார்.

நாட்டை நிர்வகிக்கும் அனைத்து தரப்பினரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிச. 25) பன்னிப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது உரையாற்றுகையிலேயே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் நிலைமை காணப்பட்டால், இன்று இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது.

புதிதாக தோற்றம் பெறும் அனைத்துக்கும் அடிமையாகி, அனைத்தையும் வணங்கும் சமூகம் எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ளது.

உலகின் சொத்துக்களுக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகாமல், அவற்றின் மீது பேராசை கொள்ளாமல் அவற்றிலிருந்து மீள வேண்டும் என்பதையே இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் வலியுறுத்துகின்றன. புத்த பெருமானும் இதனையே போதித்துள்ளார்.

எமது நாட்டில் தயாரிக்கக்கூடிய அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நாம் பழகியுள்ளோம். இதன் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவை எதனையுமே இறக்குமதி செய்வதற்கு எம்மிடம் இன்று பணம் இல்லை.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதற்கு பழகிக்கொண்டிருந்தால், இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்.

நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை.

எம்மிடம் சொத்துக்கள் காணப்படுவது போதுமானதல்ல. இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுடன் நத்தார் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்றார்.

அரசுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் – சம்பந்தன்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை விடயங்களையும் இந்தியா நன்கு அறிந்துள்ளது.

குறிப்பாக, 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விவகாரம் சம்பந்தமாக இந்தியா விசேடமாக கரிசனை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

அதன் பின்னரான காலத்திலும், தமிழ் மக்களின் விவகாரங்களில் இந்தியா முழுமையான பங்களிப்பினை செய்தே வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் பங்களிப்பினை புதிதாக கோரவேண்டியதில்லை.

தற்போது தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தியாவின் வகிபாகம் நிச்சயமாக இருக்கும்.

தற்போதைய சூழலில் அந்த வகிபாகம் எவ்வாறானது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், நிச்சயமாக இந்தியா தனது பாத்திரத்தினை முக்கியமானதாக வகிக்கவுள்ளது.

அந்த வகையில், தமிழ் மக்கள் தமது நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா நிச்சயமாக தனது பங்களிப்பை பூரணமாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கும் என்றார்.

தேசிய இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சில் இந்திய மேற்பார்வை தேவை – தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே அத்தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.

ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.

எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.

ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டியது அவசியமாகும்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், அச்செயற்பாடு எவ்வாறு சாத்தியமாகும், எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியாதுள்ளது.

ஆனால், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பாகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய செயற்பாடுகளின்படி, பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சில பேர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால், நான் அதை சொல்லாததற்கான காரணம், ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம், என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதாலாகும்.

ஆனால், நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதனடிப்படையில் அவை நடைபெற வேண்டும். ஜனாதிபதி நல்ல நோக்கத்துக்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதார பிரச்சினைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும், இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டு விடக்கூடாது. ஆகவே, தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார்.

சித்தார்த்தன்

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பேச்சுக்களில் சாதகமான நிலைமைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

எதிர்வரும் காலத்திலும், அவ்விதமான நிலைமைகள் நீடிப்பது பொருத்தமற்றதாகும்.

ஆகவே, பேச்சுவார்த்தைகள் உரிய இலக்கினை அடைவதற்கும், அவை வெற்றி பெறுவதற்கும் அரசாங்க மற்றும் தமிழ்த் தரப்பினை வழிநடத்திச் செல்வதற்கும் மேற்பார்வை அமைந்திருத்தல் மேலும் நன்மைகளையே ஏற்படுத்தும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றை பார்க்கின்றபோது, ஒவ்வொரு தடவையும் பேச்சுக்களை முன்னெடுப்பதும், ஒப்பந்தங்களை செய்வதும், பின்னர் சொற்ப காலத்தில் அவற்றை முறித்தெறிந்து செயற்படுவதுமே வாடிக்கையாக மாறிவிட்டது.

இவ்வாறான நிலையில் தான் தற்போது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பற்றிய பேச்சுவார்த்தையின் போது அம்மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால், நிச்சயமாக மூன்றாம் தரப்பின் மேற்பார்வை அவசியமாகின்றது.

அவ்வாறில்லாமல், அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கின்றபோது அப்பேச்சுக்கள் வெறுமனே சர்வதேசத்துக்கான கண்துடைப்பாகவே சித்தரிக்கப்படும் ஆபத்துள்ளது.

இதனை விடவும் இந்தியா தமிழர்களின் விடயத்தில் நீண்ட காலம் வகிபாகத்தினை கொண்டிருப்பதால், இந்தியாவின் மேற்பார்வையானது மிகவும் அவசியமானதாகும் என்றார்.