அதிகாரப் பகிர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் – ஜனாதிபதி

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்றைய தினம் (நவ 23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ் அழைப்பினை விடுத்துள்ளர்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமது இலக்கின்படி இனப்பிரச்சனைக்கான தீர்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வருடத்தில் காணப்பட வேண்டும்.

இல்லையேல் தீர்வைக்காண 2048 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டியிருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வரும் வரையில் பொதுத் தேர்தல் எதையும் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் காலமானார்.

79 வயதான அவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்பு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலிருந்து இருந்து சமிந்த விஜயசிறி வெளியேற்றம்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபையிலிருந்து நீக்கியுள்ளார்.

இதனால், நாடாளுமன்றம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இன்று சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு இன்று(23) பிணை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் T. N. L.மஹவத்தவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல உத்தரவிட்ட மேலதிக நீதவான், மாதாந்தம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வௌிநாட்டு பயணத்திற்கான தடையை விதித்த மேலதிக நீதவான், வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித விடயங்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளார்.

மீண்டும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவதாக முறைப்பாடு கிடைத்தால், பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.

வேறு ஆடைகளில் பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியைகள் தொடர்பில் விசாரணை

பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிக்கையை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் பணியின் கண்ணியத்தை காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஆசிரியர்கள் தாம் விரும்பிய ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தர முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் – கஞ்சன விஜேசேகர

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக இங்கு உள்ளவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

வெளிநாட்டில் இருந்து ஒரு முதலீட்டாளர் நாட்டுக்கு வரும் போது, இங்குள்ள சில தரப்பினர் எமது நாட்டின் வளங்களை குறித்த முதலீட்டாளர் தமது நாட்டுக்கு எடுத்துச் செல்வதாக போலியான தோரணையை உருவாக்கி விடுகிறார்கள்.

அண்மையில் இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் மின்சார உற்பத்தித்துறையில் முதலீட்டை மேற்கொள்ள எத்தனித்த போது, நாட்டின் மின் வளத்தை இந்தியாவுக்கு சூறையாடிச் செல்லப் போகிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள்.

எனினும் இந்த நிலைப்பாட்டை மாற்றி, எமது நாட்டை அபிவிருத்தியடைய செய்ய வேண்டும் என்றால் பிராந்திய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்.

அத்துடன், பெருந்தோட்டத்துறை அல்லது கைத்தொழில்துறை ஆகியவற்றில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் முதலீடுகளை அதிகரிப்பதே சிறந்த வழியாகும் என்றும் கஞ்சன விஜேயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடற்தொழிலாளர்களுக்காக நாளாந்தம் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க தீர்மானம்

கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதன்படி, மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீனவர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை விடுவிக்க கடந்த வாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 206 பவுசர்களே (58%) பெட்ரோல் நிலையங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதற்காக அரசாங்கம் 33 இலட்சம் டொலர்கள் மேலதிக செலவீனங்களைச் செய்த போதிலும் மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படாததால் மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மக்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளின் அளவு மற்றும் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளை தீர்மானிக்கும் பொறுப்பு, கடற்றொழில் திணைக்களம், கடற்றொழில் அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தனியார், கூட்டுறவு அல்லது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாகவும் அல்லது கடற்படையினரின் உதவியுடன் மீனவர்களுக்கு தொடர்ந்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அதிகாரசபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தீர்மானம்

தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிறேம்நாத் ஸ்ரீ தொலவத்தவினால் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் நலன்களுக்காகவும், அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் உள்ளுராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தில் தற்போது காணப்படுகின்ற ஏற்பாடுகளுக்கமைய பெண்களுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற வகையில் முதலாவது நியமனப் பத்திரத்திற்கமைய தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்கு குறையாததும், மற்றும் இரண்டாவது நியமனப் பத்திரத்திற்கமைய தேர்வு செய்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்குக் குறையாததுமான இளைஞர் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை உட்சேர்த்து உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகரித்துள்ளது.

வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம்

தேர்தல்களின் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதற்கமைய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கும் அதிக பணத்தை செலவிடும் வேட்பாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (நவ. 22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் , பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிக பணத்தை செலவிடுபவர்களுக்கு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் அதிக பயன் கிடைக்கிறது. சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களைப் பயன்படுத்தியும் இவ்வாறானவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தற்போது அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கமைய ஜனாதிபதி, பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றம் என சகல தேர்தல்களையும் உள்ளிடக்கியே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. எனவே ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் அளவை விட கூடுதல் பணத்தை செலவிடுபவர்களுக்கு அவர்களின் பாராளுமன்ற அல்லது உள்ளுராட்சி மன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும். அத்தோடு தண்டப்பணத்தை அறவிட்டு தண்டனைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று அரச சொத்துக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதற்கும் , வெளிநாடுகளிலுள்ளவர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நிறைவடைந்து 3 வாரங்களுக்குள் , தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்த பணத்தொகை தொடர்பில் உறுதிமொழியளிக்க வேண்டும்.

செலவிட்ட பணத்தொகை எவ்வாறு கிடைக்கப் பெற்றது , யாரேனும் அதனை வழங்கியிருந்தால் யார் அந்த நபர் உள்ளிட்ட முழுமையான தகவல்களை உறுதி மொழியூடாக வழங்க வேண்டும். உறுதிமொழியில் பொய் கூறப்பட்டமை இனங்காணப்பட்டால் , அது குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். அது மாத்திரமின்றி பொய்யான உறுதி மொழி வழங்கியமை தொடர்பில் தண்டனை சட்டக்கோவையின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்குவதற்கான அதிகாரமும் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கடற்படை கப்பல் கையளிப்பு நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பங்கேற்பு

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந் நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அவர்களும் பங்கேற்றார்.

கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.

பின்னர் “விஜயபாகு” என பெயரிடப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். ஜனாதிபதியும், அமெரிக்க தூதுவரும் கப்பலை பார்வையிட்டதுடன், கப்பலின் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் இட்டனர்.

இதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படைத் தளபதி விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். ´Hamilton Class High Endurance Cutter´ வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பல் என்ற வகையில், இலங்கை கடற்படைக்கு கிடைத்த இந்த கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கடல் மைல்கள் ஆகும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மொத்தம் 187 கப்பல்களுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய கடற்படை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கீழ் இருந்தபோது, அந்​​நாட்டின் கடற்பகுதியில் நடந்துவந்த சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கடற்பயணம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பங்களிப்பை வழங்கியது.

P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பலைப் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டதில் இருந்து அதன் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையில் கப்பலின் முதல் பணியாளர்கள் 130 பேர் கொண்ட குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் கப்பல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கை கடற்படையின் தேவைக்கேற்ப கப்பலின் செயல்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டது.