மயிலத்தமடு மாதவனை மேயச்சல் தரை தொடர்பில் நீதி கோரி தமிழ் எம்.பிக்கள் நாடாளுமன்றில் போராட்டம்

நாடாளுமன்றத்தில் இன்று (6) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோநோகராதலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன், மலையக மக்கள் முன்னணியின் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் நிலங்களை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என கோசமெழுப்பியபடி நாடாளுமன்றத்தின் மன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (6) முற்பகல் 9.30க்கு  குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடந்து, சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன்,  மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகாரசபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோசங்களை எழுப்பியும் பதாகையை ஏந்தியவாரும் சபைக்கு நடுவே சென்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்திற்கு வந்ததுடன் கைகளில் ‘மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்’, ‘மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், உங்கள் பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதாகவும் சபையின் தினப் பணிகளுக்கு இடமளிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்று கூறினார். இவ்வேளையில் சபை முதல்வருடன் சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியனை நோக்கி கடுமையாக பேசாமல் போய் அமருங்கள் என்று கூச்சலிட்டார். அவரை நோக்கி பதிலளித்த சாணக்கியன். நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலையை பாருங்கள் என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பியான வீ.இராதகிருஷ்ணனும் சபை நடுவே சென்று சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.

தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவித்து தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள்  ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்துகொண்டனர்.

நிதி அமைச்சின் செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

நிதி அமைச்சின் செயலாளருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் தேடிபார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கதைக்கும் போது நிதி அமைச்சின் செயலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது குடும்பத்தினர் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அறிவிப்பதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே கூறுகிறார்.

பிறிதொருவர் குறிப்பிடவில்லை. ஆகவே திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

பொதுப்பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலசிற்கு எதிராக அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாளை (3) இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவளிப்பதாக லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாட்டில் கொலைகள் தாராளமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதாகவும், காலம் கடந்தாலும் நாட்டில் குற்ற அலைகள் அப்படியே இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் கையளிப்பதாகத் தெரிவித்த எல்லாவல, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ! நாடாளுமன்றில் தனித்து இயங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு சார்பில் நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்றும் இது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது எனவும் முடிவு எட்டப்பட்டது. அத்துடன், இந்த உத்தியை கொண்டு சிங்கள தரப்புகளிடம் பேச்சு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி விலகிய போதிலும் அந்தக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பியே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கொரடவாக உள்ளார். இதனால், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் தமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் தனித்து செயல்படவும் அந்தக் கட்சியின் எம். பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் மீண்டும் பேசி இந்திய தூதுவரை சந்தித்து இது தொடர்பில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் மஹிந்த 13 பிளஸ் நிலைப்பாட்டிலேயே உள்ளார் – பிரசன்ன ரணதுங்க

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது திருத்தம் குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைப்போம் என ஆளும் கட்சி பிரதம கொறடவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலேயே இருக்கின்றோம்.

அவர் எப்போதும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கு அமைச்சரவைக்கு வந்து அமர்வதற்கான வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் மொட்டு கட்சியில் பிளவு என்று குறிப்பிட்டாலும் நாங்கள் அதிகார பகிர்வுக்காக கதைக்கின்றோம். 13 பிளஸ் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ கதைத்திருந்தார். இதில் மறைக்க எதுவும் கிடையாது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும் சர்வகட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைப்போம் மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுமதியுடனேயே இதனை கூறுகின்றேன் என்றார்.

13ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணை இனமோதலுக்கு வழிவகுக்கும் – அதுரெலியே ரத்ன தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைகள் நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களுக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கு நாங்கள் விருப்பம் இல்லை. அதனால் சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இந்த சபையில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சுயநினைவுடன் பதிலளிப்பர் என்றே நினைக்கின்றேன். அந்தக் கட்சியினரின் கருத்துக்களுடனே நாங்கள் இருந்தோம். நாங்கள் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டு வர செயற்பட்டவர்கள். தற்போது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான இன விவகாரத்தை எடுக்க வேண்டாம். வடக்கிற்கான அதிகாரம், தெற்கிற்கான அதிகாரம், கிழக்கிற்கான அதிகாரம், முஸ்லிம்களுக்கு அதிகாரம் அல்ல. மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாண சபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார்.

இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும். ஏதேனும் மாகாணத்திற்கென அவ்வாறு முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.

இப்போது மீண்டும் மக்கள் அலை ஏற்பட்டு, மோதல் நிலைமைகளுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை முறைக்கு இப்போதும் நாங்கள் எதிர்ப்பு. ஆனால் மாகாண சபை முறைமையை நீக்குமாறு கோரவில்லை. அருகிலுள்ள இந்தியாவை கோபித்துக்கொண்டு மீண்டும் மோதல்களுக்கு செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும். இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது. நாங்கள் மீண்டும் இனவாத போராட்டத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதனால் நாட்டு மக்களின் கோபத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த செயற்பாடு மீண்டும் இனவாத மோதல்களுக்கான பாதையையே ஏற்படுத்தும். இதற்கு நாங்கள் விருப்பமில்லை.

சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவாருங்கள்.அதற்காக நாங்கள் வருவோம். முதலில் ஜனநாயகத்துக்காக தேர்தலை நடத்துங்கள் என்றார்.

வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படல் வேண்டும் ; ஹக்கீம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையைத் தொடர்ந்து அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வு நல்லிணக்கம் உட்பட முக்கிய பல சிறந்த விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். அது தொடர்பில் பிரிதொரு தினத்தில் விவாதம் நடத்த முடியும்.

சர்வ கட்சி மாநாடு தொடர்பில் தெரிவிக்கையில், சில கட்சிகள் அது தொடர்பான தப்பபிப்பிராயங்களை முன் வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்கள் அங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

அதனை கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதே வேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

நாம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் வரை அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு நான் தயார்.

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த முடியும்.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டும் என்றால் நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்றார்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை கூட்டுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் வேண்டுகோள்

இலங்கை – இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை வியாழக்கிழமை (03) பாராளுமன்றத்தில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது சபாநாயருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது என்றும் உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிசக்தித் துறை, கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

இலங்கை, இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், அதன் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது.

அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது