ரணிலின் தவறான கோரிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது – சுரேஷ் பிரமச்சந்திரன்

IMF இன் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் ரணில் விக்கிரமசிங்க அதற்காக தவறான பொருளாதாரக் கொள்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ஒரு கோரிக்கை முன்வைத்திருக்கிறார். எல்லோரும் இணைந்து இந்த IMF னுடைய கோரிக்கைகள் பூர்த்தி செய்யவேண்டும், எதிர்க்கட்சிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் இணைத்து போவது போன்ற ஒரு பாவனையை ஜனாதிபதி முன் வைத்திருக்கின்றார்.

உண்மையாகவே IMF இனுடைய கோரிக்கைகள் என்று சொன்ன அடிப்படையில் நாட்டு மக்கள் மீது மிகப்பெருமளவிலான வரிச்சுமைகள் சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த சுமைகளை தாங்க முடியாத நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றது. 3 நேரம் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு நேர சாப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே பல்வேறு பட்ட பிரச்சினைகள் தோன்றி இருக்கின்றது.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பொருளாதார பிரச்சினையை சந்தித்து கொண்டிருக்கிற ஒரு சூழ் நிலையில் வெறுமனே IMF னுடைய நிபந்தனையை மாத்திரமே செய்கின்ற கோணத்திலிருந்து அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது அவர்கள் எடுக்க கூடிய தவறான முடிவுகளுக்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது முதலாவது தவறான விடயம்.

இரண்டாவதாக அவர் ஒரு ஜனாதிபதி தேர்தலை முகம் கொடுக்க கூடிய சூழ்நிலையில் அவர் சுமக்க கூடிய சகல பிரச்சினைகளையும் ஏனையோரும் சேர்ந்து சுமக்க வேண்டும் என அவர் எதிர் பார்க்கின்றார். ஆகவேதான் அவர் ஏனைய கட்சிகளை தம்முடன் இணைந்து இந்த பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்.

நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது என்ற கதை பொய்யானது – நந்தலால் வீரசிங்க

இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார்.

நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் கடந்த புதன்கிழமை இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வங்குரோத்து நிலையில் உள்ளதாக கூறப்படுவதை தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்தது நாட்டின் திவால் நிலை அல்ல என்றும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் தீர்வை ஒத்திவைப்பதே தவிர வேறில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலான உண்மைகளை மேலும் தெளிவுபடுத்தியுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்ததாகவும் அதில் திவால் பிரகடனம் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பானது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அசௌகரியங்கள் தொடர்பில் நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

நாடு திடீரென மூடப்பட்டதன் காரணமாக கொவிட் தொற்றுநோய்களின் போது நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், குறைந்த வளங்களைக் கொண்ட ஏழை நாட்டை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய வருமானத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்வாங்கப்படும் – வஜிர அபேவர்த்தன

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்ட திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் குறித்து தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறு‍கையில்,

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

உலகில் 137 நாடுகளில் இந்த சட்டம் செயற்பட்டு வருகிறது. அப்படியாயின், அந்த நாடுகளில் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவம் இல்லை. அதனால் இதனை அரசியலாக்க வேண்டாம். ஒட்டுமொத்த இலங்கை நாகரிகத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் இந்த விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், உலகில் 194 நாடுகளில் 137 நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இருக்கும் சட்ட திட்டங்களைவிட மிகவும் இலகுவானதாகும். அதன் பிரகாரம் இலங்கையின் நாகரிகம் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திட்டங்கள் போதாது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் போன்று இதனை செயற்படுத்த வேண்டியிருக்கிறது.

மேலும், இந்த சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்களை உள்வாங்குவோம். அவ்வாறு உள்வாங்காமல் இருப்பதாக இருந்தால் அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். என்றாலும், உயர்நீதிமன்றம் சில பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாக எதுவும் இடம்பெறப்போவதில்லை.

அத்துடன், இந்த சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். உலக நாடுகளிலும் இதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கையில் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டம், சிங்கப்பூரில் இருப்பதை விட கடுமையானது அல்ல. சிங்கப்பூரில் சில விடயங்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வரை தண்டப்பணம் விதிக்க முடியும். அந்தளவு கடுமையான சட்டமல்ல.

மாறாக, அவற்றை விட இலகுவான, ஜனநாயக ரீதியான, பிரித்தானிய அரசியலமைப்புக்கு அமைய, இந்தியாவின் அரசியலமைப்புக்கு அமைய ஆசிய நாடுகளின் அரசியலமைப்புகளுக்கு அமைவாக மிகவும் தளர்வான அளவே இந்த சட்டமூலத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

புதிய கூட்டணியில் இணைவதற்கு 28 கட்சிகள், 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் – நிமல் லான்சா

புதிய கூட்டணியில் இணைவதற்காக 28க்கும் மேற்பட்ட கட்சிகளும், 60க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் என, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் சனிக்கிழமை (27) ஜா-எல நகரில் நடைபெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பெருமளவிலான எம்.பி.க்களையும், கட்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் மிகப் பெரிய கூட்டணி உருவாக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக கட்சி சின்னமோ, கட்சியோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வதற்காக ஏராளமானோர் திரண்டுள்ளனர். தலைவரோ, தலைமைக் குழுவோ இல்லாமல் எமது அழைப்பை ஏற்று வந்துள்ள மக்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதற்காக இந்த கூட்டணி ஒன்று கூடவில்லை. பொருளாதாரத் திட்டத்தை வலுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கவே கூடியுள்ளது. இதுவரை வந்த அரசியல் பயணம் கடந்த இரண்டு வருடங்களில் பின்னோக்கி சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே 30 வருட அரசியல் பின்னோக்கிச் சென்றுள்ளது. கற்ற சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, முதல் பணியாக வரியைக் குறைக்க ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனையை வழங்கியவர் நாலக கொடஹேவா. இப்போது அவர் சஜித்துக்கு அறிவுரை வழங்குகிறார்.

மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்காகவே இந்த பணியை ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு யதார்த்தத்தை சொல்ல, வருமானம் மற்றும் செலவு என்றால் என்ன? வருமானத்தைப் பெருக்கி, செலவுகளைக் குறைக்கும் முறையைக் கூற வேண்டும். இதைப் பற்றி அரசியல்வாதிகள் மேடைகளில்பேசுவதில்லை. மக்களுக்கு உண்மையையும், யதார்த்தத்தையும் புரிய வைக்க இப்புதிய கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு ஒரு தலைவர், கட்சி, சின்னம் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களும், அதிக எண்ணிக்கையிலான கட்சிகளும் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும்.

ஜனாதிபதி 14 மாதங்களில் 14 தடவைகள் வெளிநாடுகளுக்கு சென்றதாக அநுர குமார குறிப்பிடுகின்றார். நாட்டை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு சர்வதேச நாடுகளுக்குச் செல்ல வேண்டியவர் செல்ல வேண்டும். அநுர குமாரவினால் ஏனைய ஜனாதிபதிகளைப் போன்று சர்வதேச நாடுகளுக்குச் சென்று பணியாற்ற முடியாது. சர்வதேச நாணய நிதியம் வந்ததும் பயந்து ஒழிந்து கொண்டார்.

உலகிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் செல்லும் தலைவர் தேவை. அவ்வாறின்றி ஏழ்மை மனப்பான்மை கொண்ட, கிணற்றுத் தவளை மனநிலையுடன் செயற்படும் ஊமை கதாபாத்திரங்கள் தேவையில்லை. அநுர குமார அவர்கள் கூட்டத்தை நடத்திய மைதானமே இது. அன்றைய தினத்லும் பார்க்க இன்று அதிகமான மக்கள் இங்கு வந்துள்ளனர். 22 மாவட்டங்கள் மற்றும் 160 தொகுதிகளில் எமத திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

இலங்கை முழுவதிலும் உள்ள பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், ஏனைய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர். இது ஒரு ஒத்திகை மாத்திரமே. அனைத்துக் கட்சிகளுடனும், அனைத்து எம்.பி.க்களுடனும் பேசி, துணைத் திட்டத்தை தயாரித்துள்ளோம். எனவே, அச்சமின்றி ஒன்றுபடுங்கள், பொய்யர்களும், தற்பெருமையாளரர்களாலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த புதிய கூட்டணிக்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி, அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் கொண்ட ஒவ்வொரு ஆசனத்திலும் மக்களை அணி திரளச் செய்து, ஜனநாயக ரீதியான ஒரு அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்க முடியும்.

கோட்டாபாய ராஜபக்சவை அழைத்து வருமாறு சமூக வலைத்தளங்களில் பெரும் அலை எழுப்பப்படுகிறது. நாம் அப்பணிக்கு செல்லவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக அலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாய் வீச்சாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.

பொதுமக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

பயங்கரவாதகுற்றம் என்பதற்கான வரைவிலணக்கத்தை கணிசமான அளவில் குறைக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பயங்கரவாத குற்ற சந்தேகநபருக்கு எதிராக பிறப்பிக்கப்படும் தடுப்பு உத்தரவு நீதித்துறையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட எந்த சந்தேகநபருக்கும் எந்த நேரத்திலும் பிணைவழங்கும் அதிகாரம் நீதிபதிகளிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் சட்டத்தின் உதவியை நாடுவதற்கான உரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த உரிமையை கண்மூடித்தனமான நியாயமற்ற நிபந்தனைகள் இன்றி வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இனவாத, மதவாத, குடும்பவாத அரசியலில் இருந்து விடுபட வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த மாகாண சபைகளை வலுப்படுத்தல் தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மஹிந்த தேசப்பிரிய இளைஞர், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மேலும், எதிர்கால இளைஞர்களின் அரசியலில் அவர்களது பங்களிப்பு மற்றும் தேர்தல்களின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

மக்களை அடக்கி ஒடுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் – கோ. கருணாகரன் (ஜனா)

இலங்கை பாராளுமன்றத்தில் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு, இதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (27) கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறையை எதிர்த்து, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக 6 மாதத்துக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டம் இன்று வரை தொடர்ச்சியாக இருக்கின்றது. இந்த நிலையில் ஊடகங்களையும் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்காக இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கை உயர்த்தி ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதோ என சந்தேகங்கள் எழுகின்றன. ஏனென்றால், கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் நில அபகரிப்புகள், காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் வட கிழக்கில் அதிகமாக இடம்பெறுகின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின் ஒரு மௌன யுத்தம் வடகிழக்கை பௌத்த மதமாக்குவது, காணி அபகரிப்புக்கு பெரும்பான்மையான மக்களை குடியேற்றி எமது இன பரம்பலை குறைப்பதுமான ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும் அரச அதிகாரிகளும் புத்த பிக்குகள் கூட உள்வாங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இப்படியான காலகட்டங்களில் வட கிழக்கிலே மக்கள் கிளர்ந்து எழக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்நாட்டின் அரகலய போராட்டம் என்ற போராட்டங்கள் கூட இனி ஏற்படக் கூடாது எனவும் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து கூறக்கூடாது என்றும் அரசு நினைக்கிறது.

ஒன்றை மட்டும் இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றிருக்கும் அரசு நாளை மாறலாம். நாளை மாறும்போது தனக்கு சாதகமாக தற்போது இருக்கும் அரசு அங்கத்துவம் பெறுபவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்கள் கூட இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இச்சட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணராமல், அவர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட, ஊடக கலையகங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாருக்குமே இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்க முடியாது.

2009 தனது குடும்ப உறுப்பினர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் கூட இன்னும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நீதியைக் கூட கொடுக்காத அரசு இப்படியானவர்களுக்கு நீதி கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

இருந்தாலும் இன்னும் ஒரு கருத்தும் இருக்கிறது. ஊடகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு தேவையும் இருக்கிறது. தற்போது ஊடகங்களுக்கு அப்பால் சமூக வலைத்தளங்கள் ஊடாக சில பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சிலர் தற்கொலை செய்யுமளவுக்கு போலி முகநூல் மூலமாக சில பிரச்சாரங்கள் செய்யப்படுவதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இருந்தபோதும் அதை விடுத்து ஊடகங்களை அடக்கி, தனக்கு எதிரான கருத்துக்களை யாருமே கூறக்கூடாது என்றொரு நிலையில் தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வருகிறது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிராக 56 அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே, சர்வதேசத்தின் கவனம் இலங்கை அரசு மீது திரும்பி இருக்கின்றது. ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசு சிந்திக்கிறது. எங்களை பொருத்தமட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம்; ஊடகங்களை அடக்கும் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமும் வேண்டாம் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்றார்.

பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச்செயல்கள், விபத்துக்களுக்குக் காரணம் – சபா.குகதாஸ்

நாட்டில் பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்களுக்கு காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற சமநேரம் வீதிகளின் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

காரணம் சட்ட ஒழுங்குகளை கண்காணிக்கும் தரப்பிடம் மேலோங்கியுள்ள லஞ்ச ஊழல் செயல்களே ஆகும்.

நாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் இதுவரை கண்டறியவில்லை அதற்கான முயற்சிகளும் இடம்பெறவில்லை காரணம் ஆட்சித் தரப்பில் உள்ள ஊழல் மோசடிகள் மறைக்கப்படுவதற்காக இரண்டாம் மட்ட லஞ்ச ஊழல்கள் தடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இலஞ்ச ஊழல் மோசடிகளே பிரதான காரணம் ஆகும்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதில் முறையற்ற வகையில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுதல், போதையில் வாகனம் செலுத்துதல், தண்டனைக் குரிய குற்றச் செயல்களுடன் போக்குவரத்து கண்காணிப்பு பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி வீதிகளில் வாகனங்கள் செலுத்தும் நபர்களினால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

ஆகவே நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு இலஞ்ச ஊழல் மோசடிகளே காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பொருளாதார மீட்சிக்குத் தீங்கு விளைவிக்கும் – கனடா கவலை

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, இன்று சனிக்கிழமை (27) மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகவியலாளர்கள், மத குருமார், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் உட்பட பலர் காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஒன்றிணைந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து’, ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கொடு’, ‘எங்கே எங்கே ஊடகவியலாளர் எக்னியாகொட எங்கே’, ‘நிகழ்நிலை காப்பு சட்டத்தை வாபஸ் பெறு’ போன்ற சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் நெற்றியில் கறுப்புப்பட்டி அணிந்தும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.