நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பொறிமுறை – அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினருக்கும் ரெலோ முன்மொழிவு

  1. இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை
  2. சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
  3. ஐநாவின் பிரதிநிதித்துவம்
  4. நிபுணர்கள் குழு உருவாக்கம்
  5. புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு
  6. தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

 

இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை

தமிழ் தேசிய அரசியல் தரப்பில் செயல்படும் அனைவரும் சமஸ்டி முறையான அரசியல் தீர்வே இறுதி நிலைப்பாடு என்பதை ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடும் அம்சமாக ஒற்றையாட்சி அற்ற, தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்து, எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய முற்று முழுதாக அதிகார பகிர்வோடு கூடிய அலகாக அமைய வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். அதே நேரம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே உள்ள அதிகாரங்களை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தி மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதிலும் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளோம்.

பிராந்திய வல்லரசாகவும், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து அக்கறையோடு செயற்பட்டு வந்த அண்டை நாடாகவும், இலங்கை அரசியலிலே செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளமையாலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இருப்பவர்களாகவும், ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பிலே அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாட்டை செய்தவர்கள் என்ற வகையிலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி வருபவர்களாகவும் இருப்பதனாலே இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்பு

சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப்பொறிமுறையில் பங்குபெற்றல் அவசியமானது. ஐநா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் முன் நின்று செயல்படுபவர்களாகவும், பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது பங்களிப்பை வழங்கியதோடு அது பற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை செலுத்தக் கூடியவர்களாகவும், மற்றைய நாடுகளையும் தங்கள் பின் அணி திரட்டக் கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பதானாலே இவர்கள் பங்களிப்பு அவசியமானது. குறிப்பாக பிரித்தானியா இலங்கையை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த நாடாகவும் இங்கு நிலவியிருந்த சமஸ்டி ஆட்சி முறையை ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றியவர்களும் அதனால் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் பிரதிநிதித்துவம்

ஐநாவின் பிரதிநிதித்துவம் இந்த பொறிமுறையில் அவசியமாகிறது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை தாண்டி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகும். மேலும் உலக நாடுகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளை ஆணைக்குழுக்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிபுணர் குழுவின் மூலம் தீர்த்து வைத்த அனுபவமும் வரலாற்றையும் கொண்டது ஐநா.

நிபுணர்கள் குழு உருவாக்கம்

மேற்கூறிய பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு சம்பந்தமான நிபுணர்களும் எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதிய ஆளுமை சம்பந்தமான நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம் பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம் பெறுவர். தவிர ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப் பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு

தமிழ் தேசியத் தரப்பினரும் புலம்பெயர் உறவுகளும் ஒருமித்து, இந்த நிபுணர் குழுவினருக்கான செயல்பாட்டை உறுதி செய்யவும், ஏதுவான அரசியல் சூழ்நிலைகளை உரிய தரப்புகளுடன் இணைந்து ஏற்படுத்துவதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையிலான பங்களிப்புடனும் வழிகாட்டுதலுடனும் அரசியல் தீர்வு எட்டப்படுதல் வேண்டும். அதற்கான தொடர்ச்சியான செயல்பாடும் அவசியமாகும்.

அரசியல் தீர்வானது இந்த நிபுணர் குழுவினர்கள் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் வரை நாங்கள் பரிந்துரைத்த பொறிமுறை செயற்பாட்டில் இருக்க வேண்டும். முற்று முழுதான அதிகார பகிர்வு முறைமையை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி முற்றுப் பெற வைப்பது என்பதை இந்தப் பொறிமுறையின் வழிகாட்டுதலுடன் தமிழ் தலைவர்கள் ஒப்பேற்ற வேண்டும்.

தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

கடந்த காலங்களில் அதிகாரப் பகிர்வு முறைமை அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே அமைந்துள்ளன. அப்படியல்லாமல் நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதும் அதனூடான அதிகார பகிர்வினை உறுதி செய்து நடைமுறைப் படுத்தும் வரை இந்தப் பொறிமுறையை தொடர்ச்சியான செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது. தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் விடிவை எட்டுவதற்கு அனைத்து தமிழ் தேசிய தரப்பினரும் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அரசுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இறுதி இலக்கை எட்டும் வரைக்குமான விடயங்களை அரசியல் மாற்றங்களைத் தாண்டி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பொறிமுறையை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து தரப்பினரும் இந்தப் பொறிமுறையை மேலும் செழுமைப்படுத்த உங்கள் பங்களிப்பை கோரி நிற்கிறோம். குறை குற்றம் கூறி, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி வீசிக் காலத்தை வீணடிக்கும் வெட்டி விவாதங்களை தவித்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

உங்கள் பரிபூரண ஆதரவுடன் மேற் குறிப்பிட்ட பொறிமுறையின் உருவாக்கம், நடைமுறை, மற்றும் செயற்பாட்டை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் தேசிய இனத்தின் இறுதி இலக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒருமித்து பயன்படுத்துவோமாக.

குருசுவாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உள்நாட்டில் பேசினால்தான் தமிழர்கள் தீர்வை பெறலாம்! பிரதமர் தினேஷ் குணவர்த்தன.

“இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப் பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேச மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு உட்பட தேசிய ரீதியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, இதைக் கவனத்தில்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் மீளவும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

பேச்சுக்குத் தயாராகுதல்? நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாரா இல்லையா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பிடம் கடைசிவரை இருக்க வேண்டும். அவர் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு. மேற்கு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தை பிணை எடுப்பதென்றால் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிகிறது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகளும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வற்புறுத்துவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியின் உரையிலும் அது கூறப்பட்டது. அதனால் அரசாங்கம் குறைந்தபட்சம் ஒரு தோற்ற மாயையாகவாவது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். அதுபோலவே இந்திய உளவுப் பிரிவின் தலைவர் அண்மையில் இலங்கைக்கு வந்ததாகவும்,இந்தியா சமஸ்ரித் தீர்வுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் அரசாங்கத்திடம் தெரிவித்ததாகவும் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதுவும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். ஆனால் இந்திய உளவுப் பிரிவின் தலைவர் இலங்கை வந்த செய்தி உண்மையல்ல என்றும்,ஒரு ஆங்கில ஊடகம் முதலில் அதைப் பிரசுரித்தது என்றும், அச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கொழும்பு ஊடக வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா கிட்ட எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் பெரியளவிற்கு பலன் அளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உள்ள இடைவெளியும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். எனவே இப்போதிருக்கும் சூழலை வெற்றிகரமாக கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு. தமிழ் கட்சிகள் அதை எப்படிக் கையாளலாம்?

கடந்த வார கட்டுரையில் கூறப்பட்டது போல தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தங்களுக்கு இடையே ஓர் உடன்படிக்கைக்கு வந்து ஒப்பீட்டளவில் பொதுவான ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, பேச்சுவார்த்தைகளில் கட்சிகளை வழிநடத்தவும் ஆலோசனை கூறவும் ஒரு நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும். அதில் சிவில் சமூகங்களையும் உள்ளடக்க வேண்டும்.அந்நிபுணர் குழு பேச்சுவார்த்தைக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை கட்சிகளோடு இணைந்து உருவாக்கலாம். முடியுமானால் பேச்சுவார்த்தை மேசையில் கட்சிசாரா நிபுணர்களுக்கும் இடம் கொடுக்கலாம்.

இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்க் கட்சிகள் பெருமளவுக்கு சமஷ்ரித் தீர்வை அல்லது சமஷ்ரிப் பண்புடைய ஒரு தீர்வை வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்களக் கட்சிகள் அதற்குத் தயார் இல்லை.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் என்ன தீர்வு உள்ளது என்பதனை வெளிப்படையாக இதுவரை கூறியிருக்கவில்லை. அவர் கூறவும் மாட்டார். ஆனால் நிச்சயமாக சமஷ்டிதான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்ல அவர் தயார் இல்லை என்று தெரிகிறது.

சஜித் பிரேமதாச, பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இந்த விடயத்தில் அவர் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கட்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அவர் அதைத்தான் கூறி வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவர் அதைத்தான் வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ச பதிமூன்று பிளஸ் என்று கூறுகிறார். அவரும் பல ஆண்டுகளாக அதைத்தான் கூறி வருகிறார்.

எனவே தொகுத்துப் பார்த்தால், சிங்களத் தரப்பில் 13 ஐத் தாண்டி வரத் தேவையான அரசியல் திடசித்தம் கிடையாது. ஆனால் தமிழ்த் தரப்போ கூட்டாட்சியை கேட்கின்றது. அதாவது தமிழ் தரப்பின் கோரிக்கைகளுக்கும் சிங்களத் தரப்பு தரக்கூடியவற்றிற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. அதை கோட்பாட்டு அடிப்படையில் சொன்னால் நாட்டின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பை மாற்ற சிங்களக் கட்சிகள் தயாரில்லை என்பதுதான்.

அவர்கள் 13ஐப் பற்றிப் பிடிப்பதற்கு காரணம் அதுதான். அதைவிட மேலதிகமாக ஒரு காரணம் உண்டு. ,இந்தியாவையும் இதில் சிங்களத் தரப்பின் பங்காளியாக்குவது. கடந்த பல தசாப்தங்களாக இந்தியா 13-வது திருத்தத்தைத் தான் வலியுறுத்தி வருகிறது. இந்தியா ஏன் 13வது திருத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது? அது தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதாலா? இல்லை. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரே உறுப்பு அதுதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்குரிய வாசல் அதுதான். அதாவது இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் தனது பிராந்திய நலன்களின் அடிப்படையில் தலையிடுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக அதைப் பார்க்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு தமிழ்த் தரப்பு எதிராக இல்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை ஏற்கனவே கஜேந்திரகுமார் செய்துவிட்டார். அடுத்த கட்டமாக இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் கோரிக்கைகளை 13க்குள் முடக்க கூடாது என்பதையும் தமிழ்த் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

ரணிலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக தெரிகிறது. ரணில் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த பொழுதும் இந்தியா அவரை இன்றுவரை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வரும் ஆண்டில் சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு தகவல் உண்டு. அதற்கு முன் இந்தியாவை திருப்திப்படுத்தும் நகர்வுகளை இலங்கை முன்னெடுக்க வேண்டியிருக்கும். பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது, கலாச்சார மண்டபத்தைத் திறப்பது, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே படகுப்பாதையைத் திறப்பது, சீனாவின் கடலட்டைப் பண்ணைகளைக் கட்டுப்படுத்துவது…. போன்ற பல விடயங்களிலும் இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டியிருக்கும்.

சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ சிங்கள ஆட்சியாளர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் வெளிநாடுகளோடு தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள். இந்திய-இலங்கை உடன்படிக்கையில் ஜெயவர்த்தனா அதைத்தான் செய்தார்.இந்தியப் படைகளை வெளியேற்றும் விடயத்தில் பிரேமதாசவும் அதைத்தான் செய்தார். ஆட்சி மாற்றத்தின் போது 2015ல் மஹிந்த அதைத்தான் செய்தார். கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அதைத்தான் செய்தார்.எனவே அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் வெளி அரசுகளோடு சுதாகரித்துப் போகும் ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கு வெட்கமில்லை. மானம் இல்லை. ரோஷம் இல்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை சுதாகரித்துக் கொள்ளமாட்டார் என்று கருதத் தேவையில்லை. பலாலி விமான நிலையம் அடுத்த வாரம் திறக்கப்படுமாக இருந்தால் அவர் இந்தியாவைச் சமாளிக்க முற்படுகிறார் என்று பொருள். இதுபோலவே யாழ்.கலாச்சார நிலையத்தை திறப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளை இந்த வாரம் அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.

ஆனால் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய பகைநிலைதான் தமிழ் மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனைத் தீர்மானிக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பேச்சு வார்த்தைகளில் இந்தியாவை ஒரு மத்தியஸ்த்தர் ஆக தமிழ்த் தரப்பு அழைக்க வேண்டும். மேற்கு நாடுகளோடு இணைந்த ஒரு இணைத் தலைமைக்குள் இந்தியாவுக்கு முதன்மை வழங்க வேண்டும். தமிழ் மக்களாகக் கேட்டு இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமாக இருந்தால் அது தமிழ் மக்களின் பேரத்தை அதிகப்படுத்தும்.

ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் உடன்பாட்டுக்கு வர முடியாது என்பது கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு. இலங்கைத் தீவில் ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய இலங்கை- உடன்படிக்கை முதலாவது.இதில் இந்தியப்படையின் பிரசன்னம் இருந்தது.இரண்டாவது, ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. இதில், ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னம் இருந்தது. மூன்றாவது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். அதில் ஐநா ஒரு மூன்றாவது தரப்பாக இல்லை என்றாலும் ஐநாவின் கண்காணிப்பு அங்கே இருந்தது. அது ஒரு பலமான மத்தியஸ்தம் இல்லை என்பதனால் மூன்று ஆண்டுகளில் அதை மைத்திரி தோற்கடித்தார். இந்த மூன்று உடன்படிக்கைகளின் ஊடாகவும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல், மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வை எட்ட முடியாது என்பதுதான். எனவே தமிழ்த் தரப்பு ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும். அது பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபந்தனை என்று ரணில் கூறக்கூடும்.அது நிபந்தனை அல்ல.அதுதான் இலங்கை தீவின் யதார்த்தம்.

– நிலாந்தன்.

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (6) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கௌரவ ஜனாதிபதி அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்.

இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும் – டலஸ் அழகபெரும

எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும், நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.

சமூக கட்டமைப்பில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு  இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும். அதற்கு நாங்கள்  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளின்  வழக்குகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்துமாறும்  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒருசிலர் 10 அல்லது 15 வருடங்களுக்கு அதிக காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பலர் சாதனைகளை புரிந்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலக்காக கொண்டு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆரூரரன்  அண்மையில் அரச இலக்கிய விருதில் தமிழ் சிறுகதைக்கான விருதை பெற்றுள்ளார். இவரை போன்று பலர்  இவ்வாறு சிறையில் உள்ளார்கள்.

60 அல்லது 70 ஆண்டுகளாக சிறையில்  6 பேர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தேவதாசன்  என்ற சிறை கைதி கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பலர் நோய் வாய்ப்பட்ட நிலையில் சிறை  கைதிகளாக உள்ளார்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் கல்வி முறைமையை சிறைச்சாலைகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பாடசாலைக்கு செல்லாத 2494 கைதிகளும்,ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை தோற்றிய 12 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 6,790 கைதிகளும் உள்ளார்கள்.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் 198 பட்டதாரிகள் சிறைகைதிகளாக உள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள்  தொடர்பில் நீதியமைச்சர் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த  வேண்டும்.அத்துடன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகள்  துரிதப்படுத்தப்பட்டு, உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.

அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும். எதிர்கால அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 21 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,

ஆனால் எப்பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல ஆண்டுகால பழமை கொண்ட ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பு இதுவரை ஒருமுறை தான் திருத்தம்  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 235 வருடகால அரசியல் பின்னணியை கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு இதுவரை 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,ஆனால் 74 ஆண்டுகால அரசியல் பின்னணியை கொண்ட இலங்கையின் அரசியலமைப்பு இதுவரை 21 முறை சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்யவில்லை. நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பினை திருத்தம் செய்துள்ளன. நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டன ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.

சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இனம், மத பேதமற்ற  வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்க ஆலோசனையை வழங்குகின்றேன் – சந்திரிக்கா

தூய பண்டாரநாயக்க கொள்கைகளை மதித்து அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்தவொரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை. அதன் அடிப்படையிலேயே குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாh பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பவாதத்திற்காகவும் , குறுகிய நோக்கத்திற்காகவும் கட்சியை அப்பட்டமாகக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் , தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் உறுதியேற்பேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சி மாறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் , அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நான் ஐக்கிய தேசிய கட்சியுடனும் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக வெ வ்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு , வேறு எந்தவொரு கட்சியிலும் நான் இணையப் போவதில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் பிறந்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலாகும். வளர்ந்ததும் சுதந்திர கட்சியிலேயே ஆகும். வெ வ்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானதும் சுதந்திர கட்சியிலேயே ஆகும்.  இறுதியாக, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இறக்கவும் எதிர்பார்க்கின்றேன்.

வெ வ்வேறு தவறான கொள்கைகளை பின்பற்றியமையின் காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பண்டாரநாயக்க தத்துவத்தைப் மதிக்கின்ற , தெளிவான பாதையில் நான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அந்தத் தத்துவத்தை ஏற்று அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்த ஒரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை.

தற்போது நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு தேசிய நெருக்கடிகளான குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குகிறேன்.

தற்போதைய சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாதத்திற்காகவும் குறுகிய நன்மைகளுக்காகவும் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் வேளையில், உண்மையான சுதந்திரக் கட்சிக்காக தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் உறுதியேற்பேன் என்பதை வலியுறுத்துகிறேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழ, மலையக தமிழர்களின் பிளவுகளை கையாள அரசுக்கு இடமளிக்க மாட்டோம் – மனோ கணேசன்

ஈழத் தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட் டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் எம். பி.

இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னதாக மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், “ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலை யில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம். பி., சித்தார்த் தன் எம். பி. ஆகியோரும் என்னிடம் உரையாடி உள்ளனர். தமிழ் தேசிய கூட் டமைப்பு எம். பிகளின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாக தெளிவுபட எமக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற கருத்து பகிர்வுடன் அது நிற்கிறது. மாகாண சபை, பதின்மூன்று “பிளஸ்” என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகிறது. முப்பது வருட கோர யுத்தம் காரணமாக கடும் மனித உரிமை மீறல்களை வட, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித் துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வட, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம் – இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்கு துணை போய், ஈழத்தமிழ் உடன் பிறப்புகளின் தேசிய அபிலாசைகளுக்கு இடை யூறாக இருக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள். இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய தெளிவான புரிதல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமூக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகிறோம்.

சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது, வட, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அர சாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருப்பதாகக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட்டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும் – என்றுள்ளது.

இன முரண்பாடுகளுக்கு தீர்வு காண சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியை கோரிய ரணில்

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின் போதாவது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் சனிக்கிழமை (டிச. 03) ஷங்கிரிலா ஹோட்டலிலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது போல நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் பங்களிப்புச் செய்தால் இந்த இலக்கை அடைய முடியும். இது எளிதான விடயம் அல்லாத போதும் சாதிக்க முடியாத விடயம் என்பதற்கில்லை.

அரசியல்வாதிகளால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. இதற்கு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இது பொருளாதார சவாலிலும் பார்க்க பாரதுரமானது.

கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியும்.

இது தத்தமது கருத்துக்களுக்கு வரவேற்பளிப்பதற்கும் மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கும் அதேவேளை அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்றார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இனப்பிரச்சினை தீர்வுக்கு தற்போது அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் காலம் காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வு எட்ட முடியும் என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுமா ? என்பதை அறியவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களிடம் வினவிய போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டார்கள்.

13 பிளஸ் இணக்கம் தெரிவித்தார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை  முழுமையான அதிகாரங்களுடன் பகிரக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளது.

அதிகாரங்களுடன் மாகாண சபை செயல்படும் போது எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அனைத்து மாகாணங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் உரித்துடையதாக்கப்பட வேண்டும்.  இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரதான விடயம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை தமிழ் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது இளம் தலைமுறையினர் இனம்,மதம் பேதம் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள எமது புலம்பெயர் உறவுகளை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் முதலீடு செய்ய வேண்டுமாயின் வங்கிக் கட்டமைப்பு சில விடயங்களை  திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் தரப்புக்கள் நிபந்தனைகளை விடுத்து, பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்ல வேண்டும் – ஜெஹான் பெரேரா

தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்த வடக்கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து கருத்துவெளியிடும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த் தரப்புக்கள பங்கேற்பது மிகவும் முக்கிமானது. ஆனால், பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன்னதாக, இணைந்த வட,கிழக்கு உட்பட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற விடயதத்தினை  அத்தரப்பு பிரதானமாக முன்வைத்துள்ளது.

இது, பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண சமிக்ஞை வெளிப்பாடுகளை பின்னயைச் செய்வதற்கான முயற்சியாகும்.

ஆகவே,தமிழ்த் தரப்பு இவ்வாறு பகிரங்கமான நிபந்தனைகளை விடுத்து, பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று,அதன் பின்னர் சில விடயங்களை முன்வைக்க முடியும்.

அதில் மிக முக்கியமாக, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல், அதற்கு அடுத்தபடியாக, இந்தயாவின் முறைமையை பின்பற்றி இறுதித் தீர்வினை காணுதல் உள்ளிட்ட படிநிலைமைகளில் செல்ல முடியும்.

ஏனென்றால், ஆரம்பத்திலேயே தென்னிலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் தமிழ்த் தரப்பு நிபந்தனைகளை விதித்தால்,அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தும். அதேநேரத்தில் ஆட்சியில் உள்ள தரப்பினரும், ஆதரவினை விலக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமில்லை.

ஆகவே, பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது, கடுமையான விடயங்களை முன்வைப்பதான, ஏற்கனவே ஒற்றையாட்சி முறைமை என்றால் சந்தேகப்படும், தமிழர்களும், சமஷ்டி என்றால் தென்னிலங்கை சிங்களவர்களுக்கும் கடுமையான எதிர்ப்போக்கான நிலைமையே உள்ளது.  எனவே, அவ்விதமான சூழுல் உருவாகுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.