தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலிறுத்தி புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி மாதவமேஜரின் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது.

ஓரணியில் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் போராட்டக்களத்திற்கு சென்று வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, முன்னாள் போராளி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னாள் போராளியான மாதவமேஜர் கடந்த 9ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கு மறுநாள், தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்தது. இந்த நிலையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான
ரெலோவின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் க.சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்திற்கு வந்தனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்வை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், 6 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும், தொடர்ந்தும் கட்சிகளை இணைத்துக்கொள்வோம், அதனால் மாதவமேஜர் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ் கட்சிகள் ஓரணியாக செயற்பட்டு, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் உறுதியுடன் செயற்பட வேண்டுமென மாதவமேஜர் விடுத்த கோரிக்கையை ஏற்று, எழுத்துமூலம்
உத்தரவாதமளித்தனர்.

புதிதாக வலுப்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டுமென்றும், நம்பிக்கையூட்டும் விதமாக உருவெடுத்துள்ள இந்த கட்டமைப்பில் இணையாமல் விலகிச் செல்பவர்கள் தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டுமென்றும் மாதமமேஜர் கோரிக்கை விடுத்தார்.

அவரது தாயாரும், புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளாரும் இணைந்து நீராகாரம் வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போராட்டக்களத்திற்கு வந்திருந்தனர்.

கட்சிகளை ஒன்றிணைய வலியுறுத்தி நடக்கும் போராட்டக்களத்திற்கு வந்த அவர்கள் தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு போராட்டக்களத்தில் நின்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரணிலின் ஏஜெண்ட்டுகள் என குரல் எழுப்பினர்.

தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது – ஆணைக்குழு தலைவர்

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது.

கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அவர் எதனடிப்படையில் சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்; மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 4(1)ஆவது உறுப்புரையின் பிரகாரம் 2022.12.21ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சகல நிர்வாக மாவட்டங்களுக்குமான தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறு அறிவித்தல் விடுக்கும் வரை கட்டுப்பணத்தை பொறுப்பேற்றும் பணிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் 10 ஆம் திகதி காலை சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெளிவுப்படுத்தல் அறிவுறுத்தலை அனுப்பி வைத்துள்ளது. கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றை பொறுப்பேற்றல் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் அந்த சுற்றறிக்கையை மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு, ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட வகையில் நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு, தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தல் அல்லது ஆலோசனை வழங்கும் அதிகாரம் அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது. இவர் எதனடிப்படையில் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது,ஆகையால் சட்டமாதிபரின் ஆலோசனையை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பணம் பொறுப்பேற்றலை இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.முதலில் ஆணைக்குழுவில் பிளவு இருந்தால் தான் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும்.ஆணைக்குழுவிற்குள் எவ்வித பிளவும் கிடையாது என்பதை உறுதியாக அறிவிக்க வேண்டிய தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்தும் கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என பொதுநிர்வாகம், உள்ளக விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கடந்த 9 ஆம் திகதிமாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க முகவர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததுடன் பின்னர் அவர் அதனை நீக்கியிருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் வேட்புமனுத்தாக்கல் செய்வதிலும், அதனைத்தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவதிலும் இடையூறுகளைத் தோற்றுவிக்கும்.

தேர்தலுக்கு முன்னரான செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் இடையூறு ஏற்படுத்துவதற்கோ அல்லது தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான பொதுமக்களின் ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கோ மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின்மீது நிகழ்த்தப்படும் மிகமோசமான தாக்குதலாகவே அமையும்.

இதற்கு முன்னர் பல்வேறு ஆட்சியாளர்களால் தேர்தலுக்கு முன்னரான நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் மிகமோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தின.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனவே ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் தாக்கத்தையோ அல்லது தலையீட்டையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுப்பதிலிருந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் விலகியிருக்கவேண்டியது அவசியமாகும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்னிலங்கையில் புதிய கூட்டணி உதயம்

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டணி’ உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘சுதந்திர மக்கள் கூட்டணியின்’ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும்.

இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம். உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.

அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம். 90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு , கிழக்கில் நாம் போட்டியிடுவோம். இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.’ என்றார்.

ஜன ஜய பெரமுனவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில் ,

‘இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும். ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும். எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல் , தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றார்.

உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் ,

‘சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அத்தியாவசியமானதாகும். அந்த பொறுப்பினையே நாம் தற்போது ஏற்றுள்ளோம். இலங்கையின் நிதி நெருக்கடியின் பாரதூர தன்மை குறித்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபாயமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு எந்தவொரு முடிவினையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.’ என்றார்.

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் ,

‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான 23 கட்சிகள் நாட்டுக்கான தீர்க்கமான தீர்மானத்தை எடுத்தன. அதே போன்று ஒற்றுமையுடன் புதிய கூட்டணியில் எதிர்காலத்திலும் பயணிக்க வேண்டும். இந்தக் கூட்டணியில் 12 பிரதான கட்சிகள் உள்ளன. இவற்றில் 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய அரசியல் கூட்டணிகளைப் போன்றல்லாது மற்றொரு புதிய முற்போக்கான அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த நாடு ஆட்சியாளருக்கு சொந்தமானதல்ல. அதே போன்று எந்தவொரு கட்சியும் அதன் தலைவருக்கு சொந்தமானதல்ல. குடும்பமொன்றை கேந்திரமாகக் கொண்ட ஆட்சிக்கு உறுதுணையாக செயற்பட்டமை நாம் இழைத்த பெருந்தவறாகும். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

முஸ்லிம், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை

வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியவுடனேயே, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், வடக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நாட்டின் சகல அரசியல் கட்சிகளினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கமைய, வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நேரடி ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் , எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஈடுபடுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் புதன்கிழமை (11) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய ஸ்டீபன் ட்விக்ஸ், இலங்கைப் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்டீபன் ட்விக்ஸிடம் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட,கிழக்கில் தனித்துப் போட்டி – ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும்.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் 2023 மேலும் வீழ்ச்சியடையும் – உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருளிற்கு செலுத்துவதற்கான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன இதன் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதிப்பிடப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு மருந்து எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் வறுமையை அதிகரித்துள்ளதுடன் கடந்த தசாப்த காலத்தில் பெறப்பட்ட பலாபலன்களை இல்லாமல் செய்துள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடரும் அந்நியசெலாவணி பிரச்சினைகள் உயர் பணவீக்கத்தின் தாக்கம் முக்கிய வர்த்தக  சகாக்களின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காரணமாக  2023ம் ஆண்டு குறித்து முன்னர் எதிர்வுகூறப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தென்னாசிய குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி உக்ரைன் யுத்தத்தின் தாக்கங்களை இந்த பிராந்தியம் தொடந்தும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2023 இல் 5.3 வீதமாக காணப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் அரசு கட்சி வெளியேறிய பின் கூட்டமைப்பு பலமடைந்துள்ளது; கஜேந்திரகுமாரும் இணைந்துகொள்ள வேண்டும்: செல்வம் எம்.பி அழைப்பு

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்திக்க செல்கின்ற போது நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் செயலை செய்ய வேண்டும் எனக் கோரினோம். அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக பேசியதுடன், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். காணாமல் போனோர் சம்மந்தமான பிரச்சனை தொடர்பிலும் பேசினோம். இவ்வாறான விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என 31 ஆம் திகதி காலக்கெடு கொடுத்து இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இவை தொடர்பில் ஒன்றுமே நடைபெறவில்லை.

இதனை நாம் ஜனாதிபதிக்கு நேற்று (10) தெரியப்படுத்தினோம். 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் போது நிலம் சம்மந்தமாக தான் சில தீர்மானங்களை எடுப்பதாகக் கூறினார். காணி பறிப்பு தொடர்ந்தும் பறிக்கப்படுகின்றது.

அரசியல் யாப்பில் உள்ள அதிகார பரவலாக்கல் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிகாரங்கள் ஊடாக எடுக்கப்பட்ட சட்டங்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம். அதில் பொலிஸ், நில அதிகாரங்கள் சம்மந்தமாக சில முணு முணுப்புக்களை அங்கு காண முடிந்தது. எதிர்வரும் 4 ஆம் திகதி தீர்வை வழங்குவதாக சொல்லியிருந்தார். ஆனால் எதுவும் நடைபெறாமல் தொடர்ச்சியாக மேசையில் பேசி போகும் நிலைதான் காணப்படுகின்றது. ஆகவே, நாங்கள் கூறிய விடயங்களில் எதை செய்யப் போகின்றீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவதா, இல்லையா என தீர்மானம் எடுப்போம் எனத் தெரிவித்தோம். அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை கூட நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் எப்படி இனப் பிரச்சனையை தீர்க்க முடியும். நாங்கள் போயிருக்கா விட்டால் தாம் பல விடயங்களை செய்ய இருந்ததாகவும், நாம் வர வில்லை எனவும் கூறுவார்கள். அதற்காகவே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.

தமிழ் தரப்பு வில்லை எனச் சொல்லியிருப்பார்கள். இதனால் சென்றோம். அவர்கள் நல்லிணக்க சமிஞ்க்ஞையை காட்ட வேண்டும். எனவே இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைப் பொறுத்து தான் அடுத்த பேச்சுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித் தனியாக பிரிந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன. எங்களைப் பொறுத்தமட்டில் நானும், சித்தார்த்தன் அவர்களும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம்.

ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக நாங்கள் எல்லோருக்கும் வலுவான ஒற்றுமையாக இருப்பதாக காட்ட முடியும். மக்களது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். நாங்கள் 6 கட்சிகள் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதினோம். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம். இதன்போது, எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது சம்மந்தமாக சம்மந்தன் ஐயாவுடனும் பேசினோம். கடிதமும் எழுதினோம். ஆனால் அந்த கடிதத்திற்கான பதில் வருவதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள். அந்தவகையில், நாங்கள் வைத்த கோரிக்கைகு பதில் தராது இந்த முடிவை எடுத்து வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சனையை வென்றுறெடுப்பதற்கு நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்து இணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே கூட்டு என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும். அதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பங்களிப்பு இருக்கும். தனிப்பட்ட கட்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுக் கொடுக்க முடியாது. மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தனித்து செல்ல தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளர்கள் இந்த கூட்டமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடும். தொடர்ச்சியாக 6 கட்சிகள் ஒற்றுமையாக பயணித்தோம்.

தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவு பட முடியாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள். தற்போது தேர்தல் ஒன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பை உருவாகின்ற, தொடர்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம். தனிப்பட்ட கட்சிகளின் விருப்பு வெறுப்பு இங்கு இருக்காது. இது ஒரு கூட்டு. சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். நாம் பிளவுபடாமல் மக்களது நம்பிக்கையை வீண்போகாது, மக்களது நலனை முன்னிறுத்தி கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொது சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொது சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

கனடாவின் செயற்பாடு பொறுப்பற்ற செயலாகும் – அலி சப்ரி அதிருப்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேடிய உயர்ஸ்தானிகரை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வரவழைத்து அமைச்சர் இலங்கையின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நல்லிணக்கத்தை அடைவதற்காக ஆழமான  பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நாடு ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.