நீதித்துறை மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜப்பான் தூதுவர் நீதி அமைச்சரிடம் உறுதி

இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பேன் என ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி  ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் இடம்பெறவேண்டிய இன நல்லிணக்க செயற்பாடுகள்,  சட்டக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் அதில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளுக்காக தங்களின் அனுபவம் மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்த ஜப்பான் தூதுவர், நீதி அமைச்சர் என்றவகையில், அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் விசேட ஒத்துழைப்புகளுடன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், தேசத்தின் மற்றும் இந்த நாட்டின் தேவைகளை உணர்ந்து, அதுதொடர்பில் செயற்படுவது தொடர்பில் ஜப்பான் நாடு மகிழ்ச்சியடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை திசை திருப்புவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நீண்டகாலமாக ஜப்பான் இலங்கையுடன் மேற்கொண்ட நற்புறவு  மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

ஜப்பான் அரசாங்கம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலை போன்ற மிகவும் பெறுமதிவாய்ந்த பல வேலைத்திட்டங்களை எமது நாட்டுக்கு வழங்கியமை தொடர்பில் விசேட நன்றியை தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர், நட்டஈட்டு வழங்கும் காரியாலயம், காணாமல் போனோர் தொடர்பில் முறையிடும் காரியாலயம் மற்றும் தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான காரியாலயம் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாக இதன்போது அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் 16 பேரின் வழக்குகளை விரைவுபடுத்த பரிந்துரை – நீதியமைச்சர் விஜயதாஸ

பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.

16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (23) இடம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலை புலிகள் போராளிகள் சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள 8 விடுதலைப் புலிகள் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இவர்களின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து,அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போது அவரையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.இவர்களை விடுதலை செய்வதாயின் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனை கோரப்பட வேண்டும்.இவ்விடயம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்தோர்,நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கு அமைய வயது முதிர்ந்தோர் மற்றும் கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

சம்பந்தனின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப்படுத்துகிறது- ரெலோ சபா குகதாஸ்

சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான  அனுதாப அறிக்கைகளை ஆட்சித் தரப்பு தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் சூழ்நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கை தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப் படுத்துவதாகவே உள்ளது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய தலைமைகள் இணைந்து ரணிலின் அழைப்பில்  கடந்த 13 திகதி சந்தித்த போது கொடுத்த  கோரிக்கைகளை நிறைவேற்ற ஐனவரி 31 திகதி வரை காலக்கெடு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர் அதற்கான நல்லெண்ண வெளிப்பாடு முறைப்படி அரசாங்கத்தால் கிடைப்பதற்கு முன்பாக தாங்களாக வலிந்து சந்திக்க சம்பந்தன் சுமந்திரன் சென்றமை ரணில் அரசாங்கத்தை காப்பாற்றி தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது.
தமிழர் தரப்பு  இந்தியாவின் மேற்பார்வையில் இனப்பிரச்சினைக்கான  தீர்வினை முன்னெடுக்க வேண்டும் என உறுதியாக இருப்பதை ரணில் அரசாங்கம் விரும்பவில்லை காரணம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்று நாடகத்தை கடந்த காலங்கள் போல நிகழ்த்த முடியாது இதனால் எரிச்சொல்ஹெம் ஊடாக உள் நாட்டுக்குள் அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண்பது தான் உறுதியான தீர்வு என  சம்பந்தன் சுமநதிரன் ஊடாக டீலினை முன்னகர்த்தி சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்திக்க வைத்தார் ஆனால்   இந்த சந்திப்பை ஏனைய தமிழ்க் கட்சிகள் நிராகரித்து ரணிலுக்கு கடிதம் எழுதியமையால்  ஐனாதிபதி செயலகம் இந்த சந்திப்பு உத்தியோக  பூர்வமானது இல்லை என அறிவித்துள்ளது
ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழர் தரப்பையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தையும் பலவீனப்படுத்துவதாகவே அமையும் மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறலில் இருந்தும் தீர்வு வழங்குவதில் இருந்தும் கடந்த காலங்களைப் போல தப்பிக்க வழி திறக்கும்  எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு வருமானம் போதாது – நிதி அமைச்சு செயலாளர்

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் இன்று (23) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் வருமானத்தை அதிகரித்தது போன்று செலவைக் குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் – யாழ்ப்பாணம் படகு சேவை தொடங்குவதில் தாமதம்

புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு சேவை அடுத்தமாதம் தொடங்காது. சோதனை நிலையப் பணிகள் நடப்பதால் இரு மாதங்களாகும். மூன்றரை முதல் நான்கு மணி நேர பயணத்துக்கு 5 ஆயிரம் இந்திய ரூபா கட்டணமாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயணியர் படகு சேவை அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் தரப்பட்டுள்ளது.

வரும் ஜனவரியில் படகு போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதா என்று துறைமுகத் துறை செயலர் ஜவகரிடம் கேட்டதற்கு, “படகு போக்கு வரத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தந்துள்ளது. காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐந்து நிறுவனங்கள் படகு போக்குவரத்தை நடத்த விண்ணப்பித்தனர். அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து ஒப்புதலை மத்திய அரசு அளிக்கும். படகு சேவைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகள் சோதனை நிலையம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.

படகு சேவையை ஜனவரியில் தொடங்குவது கடினம். தற்போதைய பணிகள் நிறைவடைய இரு மாதங்களாகும். அதன்பிறகு படகு போக்குவரத்து தேதி இறுதி செய்யப்படும். வர்த்தகம் மட்டுமில்லாமல் சுற்றுலாவுக்கும் உகந்ததாக இச்சேவை இருக்கும். குறிப்பாக காரைக்கால் திருநள்ளாறு கோயில் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவும் நன்கு வளர்ச்சி அடையும்” என்று குறிப்பிட்டார்.

படகு போக்குவரத்து தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது,”காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்தை மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்துக்குள் சென்றடையலாம். பயணக் கட்டணம் ரூ. 5 ஆயிரமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர். படகு சேவையில் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம். அத்துடன் ஒரு பயணி 100 கிலோ வரை உடமைகளை எடுத்து செல்லலாம்” என்று தெரிவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என ரணில் விக்கினேஸ்வரனுக்கு அறிவிப்பு

தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடுத்த ஜனவரி மாதம், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சந்திப்பை பிற்போடுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு ஏற்கனவே, கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால், தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே சந்திப்பிற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தம்மால், குறித்த தினத்தில் கொழும்பில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அந்தச் சந்திப்பை பிரிதொரு தினத்திற்கு பிற்போடுமாறும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமின்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விடயத்தையும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தால், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், குறித்த சந்திப்பானது, உத்தியோகபூர்வமானதல்ல என்றும், ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைக்குள், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக கொண்டுவர முயற்சிக்கப்படுமாக இருந்தால், இந்திய தர்ப்பில் மத்தியஸ்தர் ஒருவரை அழைத்துவர நேரும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனவரியில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம்

ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஊழலுக்கு எதிரான சட்டவரைபை நாம் தற்போது தயார் செய்துள்ளோம்.

ஜனவரி மாதமளவில் நாம் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக, புதிதாக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவொன்றை இதன் ஊடாக ஸ்தாபிக்கவுள்ளோம்.

அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற் சென்று செயற்படும் அதிகாரத்தை குறித்த சட்டத்தின் ஊடாக இந்த ஆணைக்குழுவுக்கு நாம் வழங்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக, 1975 கொண்டுவரப்பட்ட மிகவும் பழைய சட்டத்திருத்தமே தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.

இதனை இல்லாது செய்து, சொத்து விபரங்களை ஒன்-லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு இணங்க சரத்தை உள்ளடக்கவுள்ளோம்.

மேலும் ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாணசபை முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துவிபரங்கள் பழைய சட்டத்திற்கு இணங்க வெளியிடப்படுவதில்லை.

ஆனால், புதிய சட்டத்தில் இவர்களின் சொத்துவிபரங்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரையான அனைவருக்கும் இது பொதுவான சட்டமாக அமையும்.

இது இலங்கைக்கு முக்கியமானதொரு புரட்சிமிகு சட்டத்திருத்தமாகும்.

அத்தோடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் இல்லாது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கான விசேட சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கான வரைபை ஜனவரி 31 இற்கு முதல் பெற்றுக் கொள்ள நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம். பி கோரிக்கை

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படுவதை தடுக்க ஜனாதிபதி முன்வர வேண்டுமென குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக என்பதால், நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என அவர் கூறினார்.

தமிழ்ப் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாதவர்களால் நாடு ஒருபோதும் சுபீட்சமடையாது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

அரசியலமைப்புச் சபையிலேயே தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்துக்கு ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் வேந்தராக பரிந்துரை

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஜெனரல் எச்.எஸ்.எச்.கோட்டேகொடவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.